அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 10

பெற்றோர்களுக்கு பாக்கெட்டுகள்

னால் தம் குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கு உரிமையுண்டு. குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு உதவி புரிவது பற்றி நாம் அவர்களுக்கு உபயோகரமான ஆலோசனைகளைத் தர வேண்டும். எங்களுடைய பாக்கெட்டுகளின் நோக்கம் இதுதான், இவற்றை ஒட்டுவதில்தான் குழந்தைகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். “லாலி, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

லாலி என்னருகே வந்து பாக்கெட்டின் உள்ளே இருப்பதை எடுக்கிறாள் (மொத்தம் 23 தாள்கள்): இரண்டு கையெழுத்து மாதிரிகள், அவளே உருவாக்கிய இரண்டு கதைகள், வாசகத்தில் சேர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அடங்கிய மூன்று பயிற்சிகள், அவளே உருவாக்கிய கணக்குகள், வரைகணிதப் படங்கள், ஐந்து ஓவியங்கள், இரண்டு ஒட்டுப் படங்கள், “தாய் மொழிப் பாடங்களில் நான் என்ன கற்றுக் கொண்டேன்”, “எனக்குக் கணிதத்தில் என்ன தெரியும்” என்ற தலைப்புகளில் நான்கு பக்கங்களில் குறிப்புகள்.

பார்த்து விட்டு ஆமோதிக்கிறேன்.

“இதோ உன் சான்றிதழ்!” என்று டைப் செய்யப்பட்டு நானும், பாடப் பிரிவுத் தலைமையாளரும் கையொப்பமிட்ட தாளைத் தருகிறேன். அதில் பின்வருமாறு எழுதப் பட்டுள்ளது:

“லாலி அன்பான, உழைப்பார்வமுள்ள சிறுமி. நண்பர்கள் இவளை விரும்புகின்றனர். இவள்தான் வகுப்பில் மருத்துவத் தாதி. நீக்கா விரலை அறுத்துக் கொண்ட போது லாலிதான் அயோடின் தடவிக் கட்டுப் போட்டாள்.

லாலி சுவாரசியமாகப் பேசுவாள். இவளால் கோர்வையாகப் பேச முடியும் என்றாலும் வார்த்தைகள், வாக்கியங்களுக்கு இடையில் “ஆஆஆ” என்று கூறுவதைத் தவிர்த்தால் நன்றாயிருக்கும்.

பல கவிதைகள் இவளுக்குத் தெரியும். பாவனை நயத்தோடு இவள் கவிதை வாசிப்பது நண்பர்களுக்குப் பிடிக்கும்.

முழு வார்த்தைகளாகப் படிக்கிறாள், படிப்பதைப் புரிந்து கொள்கிறாள். இவள் ஏற்கெனவே நான்கு புத்தகங்களைப் படித்து முடித்துள்ளது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி.

அழகாக எழுதுகிறாள், எழுத்துகளுக்கு இடையில் சீரான இடைவெளி விட்டால் இன்னமும் சிறப்பாயிருக்கும்.

எழுத்து மூலம் தன் எண்ணங்களை வெளியிட இவளுக்குத் தெரியும். “வசந்தம் அழைக்கிறது” எனும் இவளுடைய கதையை வகுப்பில் வாசித்தோம். நண்பர்கள் கூறிய ஆலோசனைகள் லாலிக்கு நினைவில் இருக்கின்றன.

கணக்குகளைப் போடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வரை கணித வடிவங்களை நன்கு வரைகிறாள்.

ருஷ்ய மொழி இவளுக்குப் பிடித்துள்ளது. வாக்கியங்களை அமைக்க இவளால் முடியும், கவிதைகள், பழமொழிகள், விடுகதைகள் மீது விருப்பம் உண்டு. ருஷ்ய மொழி உச்சரிப்பின் மீது கவனம் செலுத்தினால் நல்லது.

இவள் வரைந்த ஓவியங்களும் உழைப்புப் பாடத்தில் செய்த பொருட்களும் வகுப்புக் கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ளன; இவை அனைவருக்கும் பிடிக்கும். லாலி இசை நாடகத்தில் பங்கேற்பவள்.

அவள் விரைவாகப் படிக்க கற்றுக் கொண்டால் நன்றாயிருக்கும். கோடை விடுமுறையில் 6-7 குழந்தை நூல்களைப் படிக்க வேண்டும். எழுதிப் பழகினால் நேர்த்தியாக எழுதவரும்.

லாலி! நீ முதல் வகுப்பிற்கு மாறிச் செல்வது குறித்து பாராட்டுதல்கள்! முக்கிய விஷயங்கள் உன்னை எதிர் நோக்கியுள்ளன!”

இந்த விவரங்களடங்கிய தாளை பாக்கெட்டில் போடுகிறேன். இது அழகாகக் காட்சி தருகிறது: மேலே மலர்களும், சிரிக்கும் சூரியனும் வரையப்பட்டுள்ளன, “அன்புப் பெற்றோர்களுக்கு – லாலியிடமிருந்து” என்று வண்ணப் பேனாக்களால் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டை ஒட்டலாம்… வாஹ்தாங், உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

வாஹ்தாங்கின் பாக்கெட்டில் 19 தாள்கள் உள்ளன. உள்ளேயுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

“நான் உன்னிடத்தில் இருந்தால் இந்த எழுத்துகளை மாற்றி எழுதுவேன். உன்னால் அழகாக எழுத முடியுமே.”

அவனைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைத் தருகிறேன். இதில் ஆலோசனைகள் உள்ளன: முழு வார்த்தைகளாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும், எழுத்துகளை விட்டு விடக் கூடாது, நண்பர்களுடன் வாய்ச் சண்டை போடக் கூடாது.

“தாம்ரோ, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!” அவளுடைய பாக்கெட்டில் 26 தாள்கள் உள்ளன.

நர்சரிப் பள்ளியிலுள்ள குழந்தைகளின்பால் இவள் எவ்வளவு அக்கறை காட்டினாள் என்று நன்னடத்தைச் சான்றிதழில் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டின் மீது எழுதப்பட்டுள்ளதில் பிழையைப் பார்க்கிறேன். இதைக் கண்டுபிடித்து, திருத்து!”

இவ்வாறாக ஒவ்வொருவரும் தம் பாக்கெட்டுடன் என்னிடம் வருகின்றனர்.

“உங்களது பாக்கெட்டுகளை டெஸ்குகளின் மீது வைத்துச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர்களை உங்கள் இடங்களில் உட்கார வைப்பீர்கள். நீங்கள் தயாரித்துள்ள அதிசயங்களை அவர்களே பார்ப்பார்கள்.”

இந்தப் பாக்கெட்டுகளை குழந்தைகள் கடந்த இரண்டு வாரங்களாகத் தயாரித்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு தனிப் பாடவேளையின் போது இவர்கள் விசேஷமாக இதற்கென எழுதினார்கள், உருவாக்கினார்கள், படைத்தார்கள், வரைந்தார்கள், ஒட்டினார்கள், தேர்ந்தெடுத்தார்கள், இவற்றைத் தத்தம் பாக்கெட்டுகளில் போட்டார்கள். பல குழந்தைகள் இடைவேளையின் போது வெளியே கூடப் போகாமல் டெஸ்கிலிருந்து பாக்கெட்டை எடுத்து அதில் மூழ்கிப் போனதைப் பார்த்தேன். இதை அவர்கள் அக்கறையோடும் உற்சாகத்தோடும் செய்தார்கள். இது தம் பெற்றோர்களுக்கான பரிசு ஆயிற்றே: “எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்த்தீர்களா! நான் எப்படிப்பட்டவன் பார்த்தீர்களா!”

பாக்கெட்டுகள் ஏன் ரகசியமானவை தெரியுமா? ஏனெனில் பெற்றோர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைத் தர குழந்தைகளுக்குப் பிடிக்கும். எனவே தான் இவை ரகசியமானவை என்று வகுப்பில் கூறுகிறோம், ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளில் தலை சிறந்தவற்றையும் ஆசிரியர் தரும் சான்றிதழையும் இப்பாக்கெட்டுகளில் போட்டு ஒட்டுகின்றனர்.

பெற்றோர்கள் இந்தப் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?

இதைத் திறப்பார்கள். எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் பின்வருமாறு செய்ய வேண்டும்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி குழந்தை தயாரித்துள்ள ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும், சான்றிதழை யாராவது ஒருவர் எல்லோருக்கும் கேட்கும்படி படிக்க வேண்டும். பழைய பாக்கெட்டை பத்திரமாக வைத்து – இரண்டையும், இரண்டின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாயிருக்கும். பின் குழந்தை அவர்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தந்துள்ளான், எப்படி எழுதுகிறான், எந்த மாதிரியான கணக்குகளைப் போடுகிறான், எந்தக் கவிதைகள் தெரியும், எப்படி வரைகிறான், பொதுவில் எப்படி வளர்ந்து வருகிறான் என்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

அவன் இன்னமும் அதிகம் தெரிந்து கொள்ள, விரைவாக முன்னேறி, சிறப்பானவனாக இருக்க, உற்சாகமானவனாக, அன்பானவனாக, உழைப்பார்வம் உள்ளவனாக வளர அவனுக்கு எப்படி உதவுவது என்று பேச வேண்டும். குழந்தை ஏதாவது தப்பு செய்திருந்தால் இந்தக் குடும்ப ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு போதும் குழந்தையைத் திட்டக் கூடாது. இவையெல்லாவற்றையும் குழந்தை பெரும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தயாரித்திருக்கிறான், தற்போது தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று இவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறுநாள் தந்தை இந்த பாக்கெட்டை தன் வேலையிடத்திற்கு எடுத்துச் சென்று, “எனது மகன் எப்படிப்பட்டவன், பாருங்கள்” என்று தன் நண்பர்களிடம் கூற விரும்பலாம். தாயும் இதே மாதிரி ஆசைப்படலாம். வீட்டிற்கு யாராவது வரும் போதும், அண்டை அயலாருக்கும் பாக்கெட்டைக் காட்டி எங்கள் பள்ளிச் சிறுவன் எங்களை எப்படி சந்தோஷப்படுத்தியுள்ளான் பாருங்கள்” என்று பெற்றோர்கள் கூறலாம். பின்னர் முதல் பாக்கெட்டைப் போன்றே இதையும் ஒரு பத்திரமான இடத்தில் வைத்து பேணிக் காப்பார்கள். இவற்றோடு குழந்தையின் எதிர்காலப் பரிசுகளும் சேரும்.

பெற்றோர்களுக்கான வெளிப்படையான வகுப்புகள் பலவற்றை நான் நடத்தியிருக்கிறேன், குழந்தைகள் எப்படி, என்ன பயிலுகின்றனர் என்று இவர்கள் வந்து பார்த்துள்ளனர். தம் குழந்தையைப் பார்த்திருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் அடிக்கடி கூட்டாகக் கலந்தாலோசித்திருக்கிறோம். படிப்பு சொல்லித் தருவதிலும் குழந்தை வளர்ப்பிலும் கூட்டு முயற்சிகளைப் பற்றிப் பேசியிருக்கின்றோம். பெற்றோர்களுக்கான விரிவுரைகளில் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பைப் பற்றிய சிபாரிசுகளை வழங்கியிருக்கிறேன். குழந்தைகளுடன் கலந்து பழகுவதன் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறியிருக்கிறேன்.

இன்று பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தடிமனான பாக்கெட்டுகளும் சான்றிதழ்களும், நாங்கள் பள்ளியில் எப்படி வாழ்ந்தோம், குழந்தைகள் எப்படி வளர்ந்தனர், என்ன கற்றுக் கொண்டுள்ளனர், எதில் முன்னேறியுள்ளனர், எப்படிப்பட்ட விருப்பங்கள் தோன்றுகின்றன என்பதையெல்லாம் பற்றிய எங்களது அறிக்கையாகும்.

இன்று பெற்றோர்கள் கூட்டத்தில் “அன்புள்ள பெற்றோர்களே! ஒருவேளை இந்த பாக்கெட்டுகளைத் திறக்க வேண்டாமோ? மதிப்பெண் அட்டவணைகள் பெற விரும்புகின்றீர்களா? நான் இவற்றைத் தயார் செய்யட்டுமா?” என்று நான் கூறினால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று எனக்கு என் அனுபவத்திலிருந்து தெரியும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க