அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 12

மரங்களுடன் விடைபெறுதல்

ரங்கள் சரிவில் நன்கு நிமிர்ந்து நிற்கின்றன. இவை எங்கும் போய்விடவில்லை, இவற்றால் எங்கும் ஓட முடியாது, ஏனெனில் எங்களுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த மரங்கள் எங்களுடைய நண்பர்கள்.

நாங்கள் பிப்ரவரியில் இவற்றை நட்டோம். பெற்றோர்கள் நல்ல நாற்றுகளைக் கொண்டு வந்தனர், நாற்பது குழிகளைத் தோண்ட பயனீர்கள் உதவினர், நாற்பத்து ஒன்றாவது குழியை நானே தோண்டினேன். நாங்கள் கவனமாக நாற்றுக்களை நட்டோம்..

“யார் எந்த மரத்தை நட்டது என்று எப்படி அறிவது! இவற்றிற்குப் பெயரிடலாமே” என்றான் தேன்கோ.

ஒவ்வொரு மரத்தையும் யார், எப்போது நட்டது என்ற விஷயங்கள் எழுதிய சிறு இரும்பு வில்லையை ஒவ்வொருவரும் மரங்களில் கட்டித் தொங்க விட்டனர்.

அன்றாடம் சாதாரணமாக பெரும் இடைவேளையின் போது எங்கள் பூங்காவிற்கு வந்து மரங்களைப் பராமரிப்போம்; மண்ணைக் கொத்துவோம், தண்ணீர் ஊற்றுவோம். இவற்றைத் தடவிக் கொடுத்து, பேசவும், முதல் இலைகள் எப்போது வருகின்றன என்று கவனிக்கவும் வந்தோம்.

ஒரு முறை மழை பெய்த போது பூங்காவிற்கு சென்று எங்கள் மரங்களைப் பார்க்க முடியவில்லை. அவற்றிற்கு – யாராவது எதாவது தீங்கு செய்திருந்தால் என்ன செய்வது என்று குழந்தைகள் கவலைப்பட்டனர்.

“சரி, நம் மரங்கள் எப்படியிருக்கின்றன என்று பார்க்க மூவரை அனுப்பலாம்” என்றேன் நான்.

தாத்தோ, கோத்தே, இலிக்கோ ஆகிய மூவரையும் அனுப்பினோம். சிறுவர்கள் திரும்பி வந்து மரங்கள் நன்றாக இருப்பதாயும் எங்களுக்கு வாழ்த்து சொல்வதாயும் தெரிவித்தனர்.

இம்மரங்களில் முதல் இலைகள் தோன்றிய போது குழந்தைகள் பேரானந்தமடைந்தனர். லாலி காலையில் பள்ளிக்கு வந்த போது பூங்காவிற்கு சென்று இதை கவனித்து வந்தாள். எனவே மூன்றாவதாக இருந்த உழைப்பு பாடத்தை முதலுக்கு கொண்டு வந்து உடனே குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் வழி பூராவும் லாலியை நோக்கிக் கேள்வி கேட்ட வண்ணமிருந்தனர்:

“எனது மரத்திலும் முதல் இலைகள் வந்து விட்டனவா? நீ பார்த்தாயா?”

“ஒருவேளை எனது மரம் காய்க்காவிடில் என்ன செய்வது?” என்று சிலர் கவலைப்பட்டனர்.

…இன்று மீண்டும் எங்கள் மரங்களைச் சந்தித்தோம். குழந்தைகள் அவற்றுடன் பேசுகின்றனர், இலைகளைத் தடவித் தருகின்றனர், மண்ணைக் கொத்துகின்றனர்.

“சரி, நீ எப்படியிருக்கிறாய்?” என்று லாலி தன் மரத்திடம் கேட்கிறாள். இங்கு வளர பிடித்துள்ளதா? உன்னருகே இயாவின் மரம் உள்ளது, வலதுபுறம் கோத்தேயின் மரம்…. ஓ, உனக்கு எல்லோரையும் தெரியுமா? இன்று பள்ளியில் கல்வியாண்டின் கடைசி தினம் தெரியுமா? நீ பயப்படாதே, நான் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன், என் வீடு பக்கத்தில்தான். உன் நண்பர்களுக்கும் உதவுவேன்!..”

படிக்க :
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

என் வகுப்புக் குழந்தைகள் தம் மரங்களுடன் பேசக் கற்றுக் கொண்டு விட்டனர். தன் மகிழ்ச்சி, ஏமாற்றம், எண்ணங்கள், கனவுகள் எல்லாவற்றையும் இவற்றிற்குச் சொல்லலாம். நூலைக் கூடப் படித்துக் காட்டலாம். நல்ல கதைகளும் கவிதைகளும் எல்லோருக்கும் – மரங்களுக்கும் கூட – பிடிக்கும்.

குழந்தைகள் தங்கள் மரங்களுடன் பேசும்படி நான் ஊக்குவிக்கிறேன்; என் மரத்துடன் பேசுகிறேன், மற்றவற்றைத் தடவித் தருகிறேன்.

“குழந்தைகளே, உங்களுடைய மரங்களை நேசியுங்கள். அவை உயிருள்ளவை, உங்கள் பேச்சை அவை கேட்கின்றன, அவை உங்களுக்காக எப்போதும் காத்திருக்கும். இயற்கைக்கு மனித அன்பும் அக்கறையும் வேண்டுமே தவிர இதன் அழகைப் பற்றிய பாராட்டுதல்கள் வேண்டாம். நீங்கள் நிரந்தர அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினால் உங்கள் மரங்கள் விரைவாக, சுதந்திரமாக வளரும், அழகாகும் என்று உறுதி கூறுகிறேன். யாராவது இவற்றை மறந்தால், அவை நோய்வாய்ப்படும், வேர்களும் தண்டுகளும் அழுகும். என்ன செய்யலாம் தெரியுமா? நீங்கள் வெகு தொலைவில் இருந்து, உங்களால் அடிக்கடி வர முடியாமல் இருந்தால் அங்கே வளரும் மற்ற மரங்களை, இவற்றின் சகோதர, சகோதரி மரங்களைப் பராமரித்து அன்பு காட்டுங்கள்! காற்று உங்கள் அன்பைப் பற்றிச் செய்தி சொல்லும், உங்கள் மரங்கள் எப்போதும் நோய்வாய்ப்படாது.

ஏனெனில் இந்த சின்னஞ் சிறு மரங்களுக்குப் பெரிய இதயங்கள்; இவை உங்களை நேசிக்கின்றன, உங்கள் ஒவ்வொருவரையும் அன்பானவனாக, பரந்த மனப்பாங்குள்ளவனாகப் பார்க்க விரும்புகின்றன. இப்போது உங்களைப் போன்றே இவை, சிறியவை. ஆனால் இவை விரைவில் உங்களை விட விரைவாக வளரும். ஏன் தெரியுமா? இந்தச் சிறு வில்லைகளோடு உங்களுடைய தனித்துவத்தையும் உயர்த்திக் காட்டுவதற்காக! 20 – 30 ஆண்டுகள் கழித்து இங்கு வந்து இத்தோப்பில் இளைப்பாறுங்கள் உங்கள் மரங்களின் மீது சாய்ந்தபடி (இப்போது இவற்றின் மீது சாயக் கூடாது) வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததைப் பற்றிக் கூறுங்கள்!” மரங்களைப் பராமரிக்கவும், இவற்றைக் கண்டு நேசிக்கவும் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவும் நாங்கள் இங்கு வந்த போது இவ்வாறு நான் என் வகுப்புக் குழந்தைகளிடம் கூறினேன்.

“ஏன் நம் மரங்களுக்காக நாம் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது!” என்று கோத்தே திடீரெனக் கேட்கிறான். அவன் லேலா அருகில் நின்றபடி அவள் தன் மரத்துடன் பேசுவதைக் கேட்கிறான்.

“நடத்தலாமே!” என்று நான் ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் உடனேயே இதைப் பற்றிப் பேசுகின்றனர்:

“கலை நிகழ்ச்சி நடத்துவோமா!”

“நடத்துவோம்!”

“மரங்களே, எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா?”

“எப்படித் துவங்குவது?”

“பாடலிலிருந்து!”

மரங்களின் நடுவே நான் மட்டும் இருக்க, குழந்தைகள் சற்றுத் தள்ளிச் சரிவில் உள்ளனர். குழந்தைகள் சந்தோஷமான பாட்டைப் பாடுகின்றனர், சிலர் கவிதைகளை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர். நானும் மரங்களும் கை தட்டுகிறோம்…

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க