மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு, சிறு – குறுந் தொழில்கள் அழிந்து நாசமாயின. அதேபோல, சந்தையின் மிக உயரிய இடத்தைப் பிடித்திருந்த ஆட்டோ மொபைல் தொழிலும் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்தது.

ஆட்டோ மார்கெட் என்று அழைக்கப்படும் சென்னை ஜி.பி ரோட்டில் இருக்கும் பல நூறு கடைகளில் கார் சீட் கவர்களை மட்டுமே விற்கும் பிரத்தியேக கடை. அதன் உரிமையாளர் பாலுவிடம் தொழிலைப் பற்றி விசாரித்தோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக திரு பாலுவின் மனக் குமுறல்.

பாலு, கடை உரிமையாளர்.

“எனக்கு 50 வயதாகிறது. கடந்த 35 வருசமாக இங்கே வியாபாரம் செய்து பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்து விட்டேன். இப்போது வியாபார நிலைமை தீர்க்க முடியாமல் மிகவும் சிக்கலாகி வருகிறது. கடைக்கு வரும் கஸ்டமர்களும் பாதியாகக் குறைந்து விட்டார்கள். வரும் சில கஸ்டமர்களும் விலையைக் கேட்டு வெறுமனே போய் விடுகிறார்கள். வியாபாரத்தை அனுசரித்து பழைய விலைக்கே கொடுத்தாலும் வாங்கத் தயங்குகிறார்கள்.

(படத்தை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

என்னுடைய வியாபார அனுபவத்தில் இந்த கஷ்டமான சூழலை இதுவரை அனுபவித்ததில்லை.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

இந்த இடம் பல தலைமுறைகளைக் கடந்தது. ஏறக்குறைய 100 ஆண்டுகளாக வர்த்தகம் நடக்கும் இடம். இங்கு முதன்முதலில் சென்னை துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருந்தன. கப்பலை நிறுத்தத் தேவையான நங்கூரம், பல நூறு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள், கப்பலில் பொருத்தப்படும் ப்ரொபல்லர் (நீர் விலக்கி), அதன் பல பாகங்கள் என்று ஆரம்பித்த இப்பகுதி இன்றைய நிலையை அடைந்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இங்கு ஒரு காருக்குத் தேவையான சீட் கவரைப் பொருத்தவரை ரூ. 2800-லிருந்து அதிகபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. ரெக்சின், ஃபோம், கார்ட்டன், வெல்வெட், லெதர் என்று கால நிலைகளுக்குத் தேவையானதை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியா முழுவதும் இருந்து இங்கே வாங்க வருவார்கள். இப்போ அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சிறு தொழில் நடத்தி வந்த எங்களை ஜி.எஸ்.டியும், பண மதிப்பழிப்பும் சின்னாபின்னமாக்கி விட்டது. சர்வதேச கார் தயாரிக்கும் கார் கம்பெனிகளுக்கு இலவச மின்சாரம், வட்டியில்லா கடன், வட்டி விடுமுறை அளிக்கும் மத்திய அரசு காரின் உப பொருட்களை ஆடம்பரப் பொருள் என்று வகைப்படுத்தி எங்களுக்கு 28% வரி விதித்திருக்கிறது. இந்த விலையேற்றத்தால் ஏறக்குறைய நாங்கள் அழியும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் அதிமுக தலைவர்களும், ஆமாம் சாமிகளாகி தமிழ்நாட்டை மொத்தமாக மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். இதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்றார்.

வினவு புகைப்படச் செய்தியாளர்
வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க