அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 13

எனக்கு 114 கடிதங்கள் வரும்

நான்காவது பாடவேளையின் கடைசி நிமிடங்கள். கோடை விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்பது குறித்துக் குழந்தைகளுடன் ஏற்கெனவே பேசியாகி விட்டது.

புத்தகங்களை வாசிக்க வேண்டும்! வெளியில் விளையாட வேண்டும்! பொறுமை, வீரப் பயிற்சிகள் செய்ய வேண்டும்! கணிதத்தை கவனத்திலிருந்து நழுவ விடக்கூடாது! பெரியவர்களுக்கு உதவ வேண்டும்! உங்கள் கருத்துக்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். கோடையில் சேகரித்து, காய வைத்த இலைகள், மலர்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களைப் பள்ளிக்கு விடுமுறைக்குப் பின் கொண்டு வாருங்கள்!

கோச்சா: “விடுமுறையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

“உங்களுடனான சந்திப்பிற்குத் தயாராவேன்.”

நாத்தோ: “எப்படி?”

ஏக்கா : “ஏன்?”

“வேறென்ன செய்வது? அடுத்த கல்வியாண்டில் நாம் என்ன செய்ய வேண்டுமென நான் திட்டமிட வேண்டும் அல்லவா?”

நீக்கா: “இது பெரிய வேலையா?”

“ஆம், பெரிய வேலை.”

கீயா: “நீங்கள் ஓய்வெடுக்காவிடில் களைப்பேற்படுமே!”

“நானும் ஓய்வெடுப்பேன்.”

மாக்தா: “எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை! ஏன் தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ!”

“உங்கள் உடல் நலத்திற்கு, வளர்ச்சிக்கு இவை அவசியம். விடுமுறை என்றால் ஒரு வேலையும் இல்லையென்று பொருளாகாது. நீங்கள் 3 மாதங்கள் 10 நாட்கள் ஓய்வு எடுப்பீர்கள்.”

இலிக்கோ: “அதாவது 100 நாட்கள்!”

“ஆமாம், இலிக்கோ, நீ சொல்வது சரி.”

சூரிக்கோ: “ஓ, நான் 100 நாட்களில் மிகவும் சலித்துப் போவேனே!”

“எனக்கும் நீங்கள் இல்லாமல் கடினமாக இருக்கும். நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், எப்படி ஓய்வெடுக்கின்றீர்கள், என்ன படிக்கின்றீர்கள் என்று கூட எனக்குத் தெரியாது.”

கியோர்கி: “நாங்கள் உங்களுக்குக் கடிதங்களை எழுதுவோம்.”

“அப்படியா? இது எனக்குத் தோன்றவில்லையே! நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு தலா 3 கடிதங்களை எழுதினால்…”

இலிக்கோ: “உங்களுக்கு 114 கடிதங்கள் வரும்! அதாவது அன்றாடம் கடிதம் வரும், சில சமயங்களில் இரண்டு கடிதங்கள் கூட வரும்”.

“எவ்வளவு நல்லது! 114 கடிதங்கள்!”

மாயா: “உங்களுக்குக் கடினமாக இருக்காது!”

“அப்போது எனக்குக் கடினமாக இருக்காது! நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், என்ன செய்கின்றீர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும்.”

லேலா: “எங்களுக்கு உங்கள் விலாசம் தெரியாதே!”

“ஒவ்வொருவரும் ஒரு தாள் எடுத்துக் கொள்ளுங்கள். இதோ சொல்கிறேன். எழுதிக் கொள்ளுங்கள்.”

குழந்தைகள் எழுதுகின்றனர். இனிய மின்சார மணி ஒலிக்கிறது. எங்களுடைய கடைசி 680-வது பாடவேளை முடிந்தது. நான் வகுப்புக் குழந்தைகளைப் பார்த்து பேசுகிறேன். “குழந்தைகளே, எழுந்திருங்கள்!”

படிக்க :
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

எல்லோரையும் பார்க்கிறேன். கம்பீரமான குரலில், உணர்ச்சி ததும்பச் சொல்கிறேன்:

“நீங்கள் முதல் வகுப்பை வெற்றிகரமாக முடித்தது குறித்து வாழ்த்துகள், பாராட்டுதல்கள்!”

“நன்றி!” என்று மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, ஒருமித்த குரலில் பதில் வருகிறது.

வரிசைகளின் ஊடாகச் சென்று ஒவ்வொருவர் கையையும் குலுக்குகிறேன், முகத்தையும் கண்களையும் உற்றுப் பார்க்கிறேன். ஒவ்வொருவரையும் ஏதோ முதன் முதலாகப் பார்ப்பது போல் பார்க்கிறேன். இவர்கள் எல்லோரும் எப்படி வளர்ந்து விட்டனர்!…..170-வது பள்ளி நாள் தொடருகிறது.

பெற்றோர்களும் விருந்தினர்களும் வந்தனர். ஏராளமானவர்கள் – கிட்டத்தட்ட 80 பேர்கள் – வந்தனர். இவர்களை எங்கே உட்கார வைப்பது? எல்லோரும் தம் கரங்களில் அழகிய அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் வைத்துள்ளனர். இவற்றைக் குழந்தைகளே தயாரித்து யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு அனுப்பினர். வகுப்பறையில் இல்லாமல் பள்ளியின் விழா அரங்கில் தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

பெற்றோர்களும் விருந்தினர்களும் எங்கள் கண்காட்சிகளை – குழந்தைகளின் செப்டெம்பர், மே மாத வேலைகளையும் புகைப்படங்கள், சின்னஞ்சிறு நூல்கள், சொந்த படைப்புகள், ஆல்பம் ஆகியவற்றை – சுற்றிப் பார்க்கின்றனர். குழந்தைகள் விளக்கம் தருகின்றனர்.

அம்மாமார்களுக்கு எவ்வளவு சந்தோஷம்! அப்பாக்களுக்கு என்ன பெருமிதம்! பாட்டிமார்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! விருந்தினர்களுக்கு என்ன வியப்பு!

தம் குழந்தைகளின் டெஸ்குகளிலிருந்து பெற்றோர்கள் ரகசிய பாக்கெட்டுகளை எடுக்கின்றனர். ஆவலுடன், எச்சரிக்கையாக இவற்றைத் திறக்கின்றனர். ஒவ்வொரு தாளையும் கவனமாகப் பார்க்கின்றனர். நான் அவர்களின் முகங்களைப் பார்க்கிறேன். எல்லாம் புரிகின்றதா? இன்னும் விளக்கங்கள் தேவையா?

“மதிப்புள்ள பெற்றோர்களே!” என்று எல்லோருக்கும் கேட்கும்படி கூறுகிறேன். இன்று பெற்றோர் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லையென எண்ணுகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் உங்களில் யாருக்காவது என்னுடன் பேச வேண்டிய அவசியம் இருந்தால் இவ்வாரம் உங்களுக்கு வசதியான நேரத்தில் வாருங்கள்! எங்கள் வகுப்பில் நான் இருப்பேன். இப்போது பள்ளிக் கலை அரங்கிற்குப் போகலாம், வாருங்கள், அங்கு இசை நாடகம் நடக்கும்.”

குழந்தைகள் மேடையில் சின்னஞ் சிறு நாற்காலிகளில் தத்தம் இசைக் கருவிகளுடன் அமர்ந்திருக்கின்றனர்.

இசை முழங்க, குழந்தைகள் பாடுகின்றனர்…

கலை நிகழ்ச்சிக்குப் பின் நாங்கள் முற்றத்திற்கு இறங்கி வந்து புகைப்படமெடுத்துக் கொண்டோம்.

ஒவ்வொருவரும் என்னிடம் வந்து விடைபெறுகின்றனர்.

ஏல்லாவும் விடைபெறுகிறாள். ஆனால் திரும்பி வருகிறாள்.

“நான் மோசமாக நடந்ததற்கு மன்னியுங்கள்! திரும்பி வந்ததும் நான் இப்படியெல்லாம் நடக்க மாட்டேன்! நான் உறுதி கூறுகிறேன்! பிடிவாதக்காரியாக இல்லாமல் இருக்க இந்த 100 நாட்களும் நான் பயிற்சி செய்வேன்!” என்று வெட்கப்பட்டுக் கொண்டே கூறுகிறாள். “ஏல்லா, நான் நிச்சயமாக உன்னை நம்புகிறேன்!” – குழந்தைகள் போய் விட்டனர். அவர்கள் தம்முடன் என்ன எடுத்துச் சென்றனர்?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க