கேள்வி : தற்போதைய ஐ.ஐ.டி.நிலை .. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா …?

செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

இப்போது அல்ல, துவக்கம் முதலே அது அப்படித்தான் இருந்து வருகிறது. அந்த இருத்தலை எதிர்த்து வந்த போராட்டங்கள்தான் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடை, சூரஜ் மாட்டுக்கறி பிரச்சினை, ஃபாத்திமா தற்கொலை. இந்தப் போராட்டங்கள் நடந்த காலத்தில் மோடி அரசே பதவியிலிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஆளும் போது ஐயர் இன்ஸ்டிடியூட்டின் ஆட்டத்தை சொல்லவா வேண்டும்?

“ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.” என்ற பழமொழியைப் போல ஐஐடியில ஐயர் படிச்சா நல்ல வேலை! ஐஐடியில மற்றவர் படிக்கப் போனா படிப்பே காலி !

ஆனாலும் அம்பேத்கர் பெரியார் மாணவர் வாசகர் வட்டத் தடையில் இந்துத்துவக் கும்பல் கரிபூசிக்கொண்டு பின்னர் வேறு வழியின்றி தடையை நீக்கியது. ஆகவே இப்படிச் சொல்லலாம். ‘அமைதி’யான அக்ரஹாரமாக இருந்த ஐஐடி-யில் இன்று சூத்திர – பஞ்சமக் குரல் ஓங்கி இல்லை என்றாலும் சலசலப்பாகக் கூட ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இனிமேலும் அங்கே ‘அமைதி’ இருக்காது. ஆதிக்கத்தின் அமைதிக்கு எதிராக சமத்துவத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தக் குரலை வலுவாக்க வேண்டியது தமிழக மாணவர்கள் – மக்களது கடமை!

நன்றி!

படிக்க:
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
♦ மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

♦ ♦ ♦

கேள்வி : ஒருபுறம் கொல்லப்பட்டாலும் மறுபுறம் சாதி மறுப்பு காதலர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்… எப்படி இது?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

“ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்” எனும் போது சாதி வெறி ஓநாய் பைரவர்கள் என்ன செய்து விட முடியும்? சாதியின் இருப்பை தனித்து வாழ்தலும், தனித்து வாழ்தலுக்கான பொருளாதாரமும், அகமண முறையும் தீர்மானிக்கின்றன.

இன்றைய காலத்தில் சீரான பொருளாதார வளர்ச்சியே இந்த தனித்து இருத்தலை மெல்ல மெல்ல ஒழித்து வருகிறது. முன்பெல்லாம் அந்தந்த சாதியில் பிறந்தவர்கள் முக்கியமாக பெண்கள் தமது கிராமம், வட்டாரத்தை தாண்டி வெளியே செல்ல வாய்ப்பில்லை. அப்படியே சென்றாலும் சாதியின் பாதுகாப்பு வளையம் கூடவே பவுன்சராய் வரும்.

இன்று கல்வி, வேலை தேடி மக்கள் நாடெங்கும் செல்கின்றனர். நகரங்களில் எந்த சாதியும் தனித்து வாழ முடியாத படி (பார்ப்பனர்கள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) நகரக் கட்டுமானம் செயல்படுகிறது. ஐ.டி துறையிலோ, உயர் கல்வித் துறையிலோ அப்படி வரும் மாணவர்கள், இளைஞர்கள் பழகுவதும், காதலிப்பதும் இப்போது சுலபமாகி விட்டது. இதற்கு மேல் சமூகவலைத்தளங்கள் இவர்களை பார்க்காமலே இணைப்பதற்கும் பின்னர் பார்த்து விட்டு காதலிப்பதற்கும் எண்ணிறந்த வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கின்றன.

ஆகவே சாதிவெறியர்கள் என்னதான் யுவராஜாவாக, பாமக ராமதாஸாக கம்பு சுழற்றினாலும் இன்றைய சமூக இயக்கம் அந்த இத்துப் போன கம்புகளைத் தட்டிப் போட்டு போய்க்கொண்டே இருக்கிறது. ஆகவே ஆணவக் கொலைகள் அதிகம் நடந்தாலும் காதல் இணைவு அதை விட அதிகம். சொல்லப் போனால் இந்த இணைவின் அதிகரிப்பே ஆணவக் கொலை வழியான மூர்க்கத்தினைக் காட்டுகிறது. அல்லது காதல் அதிகரிப்பே சாதிவெறியர்களை தூங்க விடாமல் செய்கிறது. ஆனாலும் பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி ஒழியாமல் வர்க்க போராட்டம் சாத்தியமில்லை என்ற அம்பேத்கரிய கருத்துடன் வினவின் நிலைப்பாடு என்ன ?

மீரான்

ன்புள்ள மீரான்,

வர்க்கப் போராட்டம் இல்லாமல் சாதி ஒழிப்புக்கான போராட்டம் சாத்தியமே இல்லை. சாதி என்பது வெறுமனே மனதில் “நான் உயர்ந்தவன்/ள், நீ தாழ்ந்தவன்/ள்” என்றிருக்கும் கருத்து நிலை மட்டுமல்ல. அது பொருளாதார ரீதியாகவும் மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்து வைத்திருக்கும் ஒரு பார்ப்பனிய ஏற்பாடு.

இந்தியாவில் வர்க்கங்கள் சாதிகளாகவும் இருக்கின்றன. நிலமற்ற விவசாயியாக இருக்கும் ஒரு தலித் தன் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை – சாதிக் கொடுமைகளை எதிர்க்க முடியாமல் அடங்கிப் போகும்படியான நிலையை அவரது ஏழ்மையே ஏற்படுத்திக் கொடுக்கிறது. வட தமிழகத்தில், சென்னையின் சுற்றுப்புறங்களில் வன்னியர் – பறையர் சாதி மறுப்பு மணம் செய்தோர் அதிகம். இடைக்காலத்தில் பாமக வந்த பிறகும் இந்த நிலை மாறிவிடவில்லை.

வசதி வாய்ப்புடன் இருக்கும் மிகச்சில வன்னியர்களுக்கு இருக்கும் சாதிவெறி ஏழ்மை நிலையுடன் இருக்கும் பெரும்பான்மை வன்னியர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் சாதிவெறியர்கள் இந்தப் பெரும்பான்மையை குறிவைத்தே எல்லா சாதிகளிலும் சாதிவெறியை தூண்டி விடுகிறார்கள். வயிற்றுக்கு இல்லை என்றாலும் வைவதற்கு ஒரு சாதி இருக்கிறதே என்று அந்தப் பெரும்பான்மை அதற்கு பலியாகிறது. ஆனால் அந்த பலியாதலால் அவர்களது வாழ்வில் பொருளாதார வசந்தம் வீசப்போவதில்லை.

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

வேலையின்மை, கல்வி தனியார் மயம், மருத்துவம் தனியார் மயம் அனைத்தும் அனைத்து சாதி ஏழைகளையும் நடுத்தர வர்க்கங்களையும் அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் வெற்று சாதிப்பெருமை அவர்களது பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? எனவே ஏழ்மைக்கும், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கும் சாதி அடிப்படை இல்லை எனும் போது இவர்களை இணைத்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்கள் உருவாகித்தானே ஆக வேண்டும்?

அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, தொழிலாளிகளோ, காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் விவசாயிகளோ, ஹைட்ரோ கார்பனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளோ சாதி கடந்து போராடுவது உண்மையானால் இந்த இணைவின்மூலமே எதிர்காலத்தில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை வலுவாக நடத்துவார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வினால் தற்கொலை செய்தபோது முழு தமிழகமே அந்தச் சிறுமியை தனது மகள் என்று எண்ணி போராடவில்லையா? இந்த (‘கீழ்’) சாதி மகளுக்கு டாக்டர் படிப்பு எதற்கு என்று சாதிவெறியர் கூட கேட்க முடியாத நிலை வந்ததா இல்லையா?

வர்க்கப் போராட்டங்கள் சாதியை ஒழித்து விடாது. ஆனால் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிச்சயம் கட்டியமைக்கும். அந்த அடித்தளமில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமே இல்லை. மறுபுறம் சாதி ரீதியான அணிதிரட்டல்கள், அதாவது தாழ்த்தப்பட்டோர் மட்டும் சேர்ந்து நடத்தும் போராட்டங்கள் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை உருவாக்க இயலாது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையாக வாழும் கிராமங்களே அதிகம். அந்த கிராமங்களில் வர்க்கப் போராட்டம் தவறு என்று சித்தாந்தம் பேசும் அம்பேத்கரியவாதிகள் சென்று தங்கி தாழ்த்தப்பட்ட மக்களை சாதி ஒழிப்பிற்கான போராட்டத்திற்கு அணிதிரட்ட முயற்சித்துப் பார்க்கட்டும். அப்போது அவர்கள் வர்க்கப் போராட்டமே அன்றி அந்த மக்களை திரட்ட முடியாது என்று பட்டறிந்து உணர்வார்கள்.

கீழத்தஞ்சையிலோ, கேரளாவிலோ, தெலுங்கானாவிலோ, மேற்கு வங்கத்திலோ, பீகாரிலோ வர்க்கப் போராட்டத்தின் மூலம் சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி, பண்ணைக் கொடுமைகளை ஒழித்து இந்திய பொதுவுடமை இயக்கம் சாதித்திருக்கிறது.

இன்றைக்கு பீகாரில் ரன்வீர் சேனா, பூமிகார் சேனா, ரஜ்புத் சேனா போன்ற ஆதிக்க சாதிவெறி இராணுவங்களை ஒழித்ததும் கம்யூனிச இயக்கம்தான். இத்தகைய சாதனைகளை அம்பேத்கரியம் பேசும் அறிஞர் பெருமக்கள் எங்காவது சாதித்திருப்பதற்கு சான்றுகள் உண்டா? எதுவுமில்லை! வர்க்கப் போராட்டத்தை உடைப்பதற்கு பிரச்சாரம் செய்யப்படும் இந்த அடையாள அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்