முற்றுகை

முற்றுகை துவங்கிவிட்டது
அடையாளங்களின் மீதான முற்றுகை
வரலாற்றின் மீதான முற்றுகை
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்மீதான முற்றுகை

என் அடையாளங்களை கேட்கிறார்கள்
என் மூதாதையர்களின் அடையாளங்களை கேட்கிறார்கள்
நான் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறார்கள்
இதோ இந்த மண்ணுக்குக் கீழ்
புதையுண்டு கிடக்கும் நகரத்திலிருந்து வந்தேன்
அங்கிருக்கும்
மண் ஓடுகளில் என் அடையாள அட்டைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நான் வந்தது
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
என்று விவாதங்கள் நடக்கின்றன
என் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன
உங்கள் தேசங்கள் உருவாவதற்கு முன்பே
நான் இந்த பூமிக்கு வந்தவன்

அவர்கள் மூன்று நீண்ட
அகதி வரிசைகளை உருவாக்குகிறார்கள்
உள்ளே வரவேண்டிய அகதிகள் வரிசை
வெளியேறவேண்டிய அகதிகள் வரிசை
உள்ளே நுழையக்கூடாத அகதிகள் வரிசை
அவர்கள் சற்று முன் வரை சகோதரர்கள்
பிரித்து நிறுத்தப்பட்ட வரிசைகளில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்

ஒரு மூட்டை தூக்கும் வங்காளி கேட்கிறான்
ஒரு ரிக்‌ஷா இழுக்கும் ரோஹிங்கியா கேட்கிறான்
‘என்னை முகாம்களுக்கு அனுப்பப் போகிறீர்களா
எல்லைக்கு அப்பால் அனுப்பப் போகிறீர்களா?’
கொலைகாரர்களுக்கு
யாருக்கு எதிராக யுத்தம் செய்கிறோம்
என்பதைப்பற்றி எந்த நாணமும் இல்லை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா
உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என
குழப்பமாக இருக்கிறது
என்னிடம் ஆவணங்கள் இல்லை
நான்தான் ஆவணம்
என் நினைவுகள்தான் ஆவணம்
என் மூதாதையர்கள் நாடோடிகள்
போர்களாலும் பசியினாலும்
தொடர்ந்து துரத்தப்பட்டவர்கள்
பிறகு ஒரு நிலத்தைக் கண்டுபிடித்தோம்
அதை நாங்களும் சேர்ந்து உருவாக்கினோம்
கடவுள் எங்களைப் பார்த்துக்கொண்டார்
எங்கள் கடவுளை நாங்கள் பார்த்துக்கொண்டோம்

படிக்க :
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

கணக்கெடுப்பு துவங்கிவிட்டது
ஆஷ்ட்விட்ச் முகாம்களை கட்ட
கணக்கெடுப்புகள் முக்கியம்
ஒரு தேசத்தையே விஷவாயுக்கூடமாக்கும்
வலிமையான சித்தாந்தம் நம்மை ஆள்கிறது
அது அப்படித்தான் முன்னரும் நிகழ்ந்தது
இனியும் அப்படித்தான் நிகழும்
மக்கள் இரண்டு அணிகளாக பிரித்து நிறுத்தப்படுகின்றனர்
இரண்டு மதங்கள்
இரண்டு தேசங்கள்

நகரங்கள் பற்றிஎரிகின்றன
அஸ்ஸாமிலிருந்து
திரிபுராவிலிருந்து
வங்கத்திலிருந்து
டெல்லியிலிருந்து
தீ பரவிக்கொண்டிருக்கிறது
மிகப்பெரிய அச்சம் ஆள்கிறது
மிகப்பெரிய குழப்பம் ஆள்கிறது

இங்கே ஒருவன் மஞ்சள் நிற சட்டையில்
மக்களை வேன் மீதிருந்து சுட்டான்
அங்கே ஒருவன்
சிவப்பு நிற சட்டையில்
மாணவர்களை குண்டாந்தடியில் தாக்குகிறான்
சீருடைகள் மாறிவிட்டன
அவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது
கறுப்புப் படையினர் மாறுவேடங்களில் இருக்கிறார்கள்
வாகனங்கள் தானே பற்றி எரிகின்றன
எதிர்ப்பவர்களைக் கொல்ல
காரணங்களை உருவாக்கவேண்டும்
இதற்கு முன்பும்
அவை இப்படித்தான் நிகழ்ந்தன

ஒரு இதயமற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவமானத்தில் என் உடல் கூசுகிறது
ஒரு கருணையற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவர்கள் முதலில் என் தெய்வத்தின் நிலத்தை பிடுங்கினார்கள்
இப்போது என் நிலத்தை பிடுங்க விரும்புகிறார்கள்

பசியைப் பற்றி பேசாதே
வேலையின்மை பற்றிப் பேசாதே
வெங்காய விலை பற்றி பேசாதே
நிகழ்காலத்தையோ
எதிர்காலத்தையோ பற்றிப் பேசாதே

பேசு
முற்றுகையைப் பற்றி
அதற்காகத்தான்
அவர்கள் நகரங்களுக்கு
தீ வைத்திருக்கிறார்கள்

தீ பரவுகிறது
இதயங்களின் ஆழங்களில்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer