இரண்டாம் உலகப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த ஜெர்மன் நாஸிப் படைகள் ரஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நகரம் வரை வந்து விட்டிருந்தன. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே கவ்காஸ் பிராந்தியத்தில் இருந்து, வடக்கே ரஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோகம் ஸ்டாலின்கிராட் ஊடாக நடந்த படியால் அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இருந்தது.
போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் படைகளுடனான யுத்தத்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த செம்படைகள் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டு விட்ட போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62- ம் படைப்பிரிவு மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டது.
முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் “பின்வாங்காமல் கடைசி மனிதன் உயிருடன் இருக்கும் வரை போரிட வேண்டும்” என்ற ஸ்டாலினின் கட்டளைப்படி இறுதி மூச்சு உள்ள வரை போராடுவது என்று முடிவெடுத்தனர். அவர்கள் நகர மத்தியில் இருந்த நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுற்றிலும் பாதுகாப்பு அரண்களை அமைத்து தற்காப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தனர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.
அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் படைப்பிரிவுத் தளபதி யாகோவ் பவ்லோவின் பெயரால் “பவ்லோவின் வீடு” என்று அழைக்கப்பட்டது. அதனை நாஸிப் படைகள் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஆர்ட்டிலரி போன்ற கனரக ஆயுதங்களை பாவித்தால் மறுபக்கம் இருந்த ஜெர்மன் படையினர் மீதும் குண்டு விழலாம்.
படிக்க :
♦ அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !
♦ குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! அச்சுநூல்
அந்த வீட்டை நாஸிப் படைகள் மூன்று பக்கங்களில் சுற்றிவளைத்திருந்தன. ஒரு பக்கம் வோல்கா ஆறு ஓடியது. அதன் மறு கரையில் நின்ற செம்படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்துடன் மறு கரையில் இருந்து பவ்லோவின் வீட்டுக்கு உணவு, மருந்து, ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதுவும் ஜெர்மன் விமானங்களின் குண்டு வீச்சுக்கு தப்பிச் செல்ல வேண்டும்.

பவ்லோவின் வீட்டினுள் ஆயுதங்கள், தோட்டாக்கள், உணவு, தண்ணீர் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. படைவீரர்கள் மட்டுமல்லாது, உரிய நேரத்தில் வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்ட பொது மக்களும் அதற்குள் இருந்தனர்.
அங்கிருந்த ஒரு நிறைமாதக் கர்ப்பிணி ஒரு பெண் குழந்தையை பிரசவித்தாள். குழந்தையின் தந்தை ஏற்கனவே நடந்த போரில் கொல்லப்பட்டு விட்டார். அநேகமாக அப்போதிருந்த நிலைமையில் குழந்தையும் உயிர் பிழைப்பது கடினம் என்றே நம்பப்பட்டது. ஆனால், செம்படை வீரர்கள் தமது உயிரைத் துச்சமாக மதித்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து சேர்த்து குழந்தையை காப்பாற்றி விட்டனர்.
பவ்லோவின் வீடு புகழ் பெற்றமைக்கு அன்று சோவியத் அரசு ஊடகங்களில் செய்யப் பட்ட பிரச்சாரமும் ஒரு காரணம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அகப்பட்ட செம்படைப் பிரிவின் வீரஞ்செறிந்த போராட்டம் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டன. பிற்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டாலின்கிராட் யுத்தம் பற்றிய ஆவணப்படங்களிலும் இந்த பவ்லோவின் வீடு தவறாமல் இடம் பெற்றது.
முகநூலில் கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.