நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 08

மார்க்ஸ் தமது காலத்தில் உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்தார். இவற்றின் வளர்ச்சி, வருங்காலத்தில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். இதனை உணர்ந்த காரணத்தால், வருங்காலத்தைப்பற்றி முன்னம் கூறி அதற்காகப் போராட வேண்டும் எனக் கூறினார். மனிதன் சமூக விடுதலை பெறும் காலத்தில், தற்காலிக ஊக்கியாகவோ (Stimulent – தேநீர், காபி போல), வேதனைக் குறைக்கும் மருந்தாகவோ மதம் இருக்க வேண்டியதில்லை என்று உறுதியாக அறிவித்தார்.

மார்க்ஸ் எழுதினார்:

“கடந்த காலத்தின், சமுதாய வரலாறு, வர்க்க முரண்பாடுகள், வர்க்கப் பகைமை இவற்றை, இவற்றின் வளர்ச்சி நிலைகளில் ஆராய்வதாகும். அவற்றின் வடிவங்களை அறிவதையும் வரலாறு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சமுதாயங்களின் அமைப்புகளில் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையனைத்தும் ஒரு அடிப்படையான தன்மையில் ஒன்றாகவே இருக்கின்றன. அவையாவும் ஒரு சிறுபான்மைப் பிரிவினர், மற்றோர் பெரும்பான்மைப் பிரிவினரை சுரண்டுகிற அமைப்புகளே. இவ்வடிப்படைகளில் இருந்து தோன்றிய கருத்துக்களில் சில பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன. வர்க்கப் பகை ஒழியும் வரை இச்சிந்தனைகள் இருந்துதான் தீரும்.

கம்யூனிஸ்டுப் புரட்சி மரபு வழியான சொத்துரிமை உறவுகளை ஒழித்து மரபையே மாற்றுகிறது. எனவே மரபு வழியான கருத்துகளில் இருந்தும் ஒரு முறிவை உண்டாக்கிப் புதிய கருத்துக்களைப் படைக்கிறது.”

இப்புதிய கருத்துக்கள், வரலாறு முழுவதிலும் சிதறிக் காணப்படுகிற தீவிரமான, மனித நேயக் கருத்துக்களின் புதிய கால கட்டத்தின் வளர்ச்சியே.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 1922-ல் லெனின் மதக்கருத்துக்களை எதிர்த்து நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மதக்கருத்துக்களின் அழுத்தம் மக்கள் மனதில், புதிய மனித நேயமும், முற்போக்கான கருத்துக்கள் வளராமல் தடைக் கல்லாக இருந்து, மக்களது விடுதலை பெற்ற உழைப்புச் சக்தி வளராமல் தடுப்பதையும் உணர்ந்து, மதக் கருத்துக்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து விரிவான பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுதினார். லெனின் எழுதினார்:

“எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி (நாத்திகம்) எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துக்களை விமர்சனம் செய்தல் வேண்டும். அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்,”

“எங்கெல்ஸ் தமது கால புரோலிட்டேரியன் தலைவர்களுக்கு, 18-ம் நூற்றாண்டின் தீவிரமான நாத்திக நூல்களை மொழி பெயர்க்கும்படி ஆலோசனை கூறினார். 18-வது நூற்றாண்டின் புரட்சிவாதிகளின் எழுத்துக்களில் அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களும், அப்பாவித்தனமான வாதங்களும் மிகுதியாக உள்ளன. ஆயினும் இவற்றையெல்லாம் சுருக்கி, அடிக்குறிப்புகள் கொடுத்து, அறிவியல் பூர்வமான மதம் பற்றிய விமர்சனங்கள் எழுத வேண்டும். 18-ம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்டிருந்த மத எதிர்ப்புக் கருத்துக்களைச் சுட்டிக் காட்ட தற்காலத்தில் பதிப்பாளர்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் (முக்கியமாக விவசாயிகளும், தொழிலாளிகளும்) எழுத்தறியாமையிலும், மதங்கள் பிரசாரம் செய்யும் மூடத்தனத்திலும் ஆழ்ந்து கிடக்கும் பொழுது, மார்க்சீய கல்வியென்னும் நேர்வழியால் இவர்களது மனத்தில் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சீயவாதிகள் கருதினால் அது பெருந்தவறாகும். இம்மக்கள் பெருங் கூட்டத்திற்கு பலவேறு விதமான நாத்திக எழுத்துக்களை அளித்தல் அவசியமானது. வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும். மத மயக்கத்தினின்றும் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். அவர்கள் எழுச்சி பெறச் செய்வதற்கு பலவேறு முறைகளை நாம் கையாள வேண்டும். மார்க்ஸ், எங்கல்ஸ் இருவருடைய முக்கியமான நூல்களை நாம் (ரஷ்ய மொழியில்) மொழி பெயர்த்துள்ளோம். பழமையான நாத்திகம், பழமையான பொருள்முதல் வாதம் இவற்றிற்கு மார்க்ஸும், எங்கல்ஸும் அளித்த பிழைத்திருத்தங்கள் மக்கள் மனத்தைக் கவராமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. மார்க்ஸிஸ்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளுவதில்லை. அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மனங்களில் மதப் பிரச்சினைகள் பற்றி ஒரு அறிவுக் கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றிய அறிவுக் கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் ஓர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.”

இக்கட்டுரை சில முக்கியமான விஷயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன:

1) இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.

2) நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சீயம் தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திகவாதத்தை தருக்க நிலையில் இருந்து, கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.

3) இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்க வாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய மரபும் அதன் தற்கால வளர்ச்சியான மார்க்சீயமும் வளர்த்துள்ள நாத்திகத்தின் அடிப்படையில் பெரியாரின் நாத்திக வாதத்தை மதிப்பிட வேண்டும். மார்க்சீயவாதிகள் பெரியாரின் நாத்திகத்தை, சமூக வளர்ச்சிப் போக்கின் வெளிப்பாடாக ஆராய வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி இன்னும் துவங்கவில்லை.

ஆராய்ச்சி துவங்கு முன்னரே, முடிவுகளுக்கு வருவது மார்க்சீயவாதிகளின் மரபல்ல. ஆயினும் சில மேற்போக்கான கருத்துக்களை இங்கு கூறலாம்.

பெரியார் முரணற்ற நாத்திகர். “கடவுள் இல்லை, இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்” என்ற அவருடைய முழக்கங்களை, அவருடைய சிலைகளின் கீழ் செதுக்கி வைத்துள்ளார்கள். அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கடவுளை ஒப்புக் கொண்டு நாத்திகத்தை கைவிட்டார்கள். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்ற முழக்கத்தை அரசியல் சௌகரியத்துக்காக மேற்கொண்டார்கள்.

பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். தீமிதியின் தெய்வத் தன்மையை மறுத்து, எவ்வித விரதங்களும் இல்லாமல், கடவுள் இல்லை என்று முழங்கிக் கொண்டு அவருடைய மாணவர்கள் தீமிதி நடத்தினார்கள்.

கடவுளை, சமூகமும், அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸிய சிந்தனையை அறியாமல் அவர் சமூகப் படைப்பின் ஒரு பிரிவினரான பிராமணரையே, கடவுளைப் படைத்தவர்களாகவும், தங்கள் பிழைப்புக்கு தாங்கள் படைத்த மாயையான கடவுளை பயன்படுத்தினார்கள் என்று கூறினார்.

பிராம்மணரையும், சூத்திரரையும் சமூக வரலாறு படைத்தது என்ற உண்மையை அவர் அறியவில்லை.

அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. எனவே அது கரடுமுரடாக (Crude) இருந்தது.

அவருடைய காலத்தில் மார்க்சீயத்தைக் கற்றுணர வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய நாத்திகத்தில் மார்க்சீயப் பொருள்முதல் வாதத்தின் தாக்கம் எதுவும் இல்லை. பண்டையப் பொருள்முதல்வாதிகள் வாதங்களின் சிலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

அவருடைய நூற்றாண்டு விழாவில் ’நாத்திக சிந்தனையை மிகவும் துணிச்சலோடு மக்களிடையே பிரச்சாரம் செய்தார்’ என்பதை நினைவு கொள்வோம், அவருடைய பிரசாரம் பல நாத்திகர்களை உருவாக்கிற்று என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.

தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

முதல் பாகம்

(முற்றும்)

« முந்தைய பாகம்

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்