சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.

4

த்திரைப்படத்தை ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கு அர்ப்பணித்துள்ளார் இயக்குநர். விதவிதமான கொலைகாரர்களை கதைப்படுத்தி உலக அளவில் த்ரில்லர் வகைப் படங்களுக்கு புகழ்பெற்ற ஹிட்சாக்கோடு தனது படம் அணி சேரவேண்டும் என்பது இயக்குநரது ஆசை. இந்த ஆசை நிராசையானதா, நியாயமானதா?

இளம் பெண்களது தலையை வெட்டி முண்டமாகவும் அரை நிர்வாணமாகவும் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கும் கொடூரமான கொலைகாரன். அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஒரு பெரிய போலீசு கூட்டம். அவனைப் பற்றி ஒரு மனநல மருத்துவரோடு விவாதிக்கும் ஆர்.ஜே-வாக அதிதி ராவ். அவளை ஒருதலையாக காதலிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி. பிறகு அதிதியையே கொலைகாரன் கடத்துகிறான். கொல்லும் தருணத்தில் பயப்படாமல் விரைவில் அவனைக் கண்டுபிடிக்க கவுதம் (உதயநிதி) வருவான் என அவள் சொல்ல கொலைகாரன் அவளை ஒரு வாரம் விட்டுவிடுகிறான். தன்னைக் கவுதம் கண்டுபிடித்துவிடுவானோ என்று பயப்படுகிறான். இடை ஆத்திரத்தில் விலை மாதையும் வேறு ஒரு பெண்ணையும் அவனது வழக்கப்படி கொல்கிறான்.

அதிதியை தேடி உதயநிதி செல்லும் போது இதே வழக்கை முன்னர் விசாரித்த காவல்துறை அதிகாரி நித்யா மேனன் வருகிறாள். மாடிப்படியில் தவறி விழுந்து இடுப்புக்கு கீழ் செயலற்று இருக்கிறாள். இருவரும் சேர்ந்து கொலைகாரனைக் கண்டுபிடித்து அதிதியை மீட்கிறார்கள்.

படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையே பெரும்பாலான விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பார்வையற்ற கவுதம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கும் போது போலீசு பெருங்கூட்டமாக வெறும் பார்வையாளராக இருப்பது, பொதுமக்கள், மீடியா அனைவரும் இருக்கும் போது காவல்துறை ஆணையர் உடலை பார்க்கும் வரை அரை நிர்வாணத்தோடு முண்டமாக பார்வைக்கு வைத்திருப்பது, கொலை நடக்கும் கோயம்புத்தூரில் சிசிடிவிக்கள் இல்லாதது, பின்பாதி முன்பாதி போல விறுவிறுப்பாக இல்லாமல் இருப்பதாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை.

கொலைகாரன் ஏன் அப்படி கொடூரமான கொலைகாரனாக சைக்கோபாத்தாக மாறிப்போனான்? அந்தக் காரணத்தைக் கேட்டு அதிதியே அவனை இறுதிக் காட்சியில் மன்னிக்கிறாள். அவனிடம் ஒரு குழந்தையை கண்டதாகவும் அவனை ஒரு தாய் அல்லது சகோதரி போல காப்பாற்றுவேன் எனவும் கூறுகிறாள். இத்தனைக்கும் அவள் முன்னாலேயே சில பெண்களது தலையை அவன் வெட்டுகிறான்.

படிக்க:
NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !
சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

தலைவெட்டும் இடத்தில் சிறை போன்ற அமைப்பில் ஒரு வயதான பெண்ணும், ஆணும் அடைபட்டிருக்கிறார்கள். பெண்ணாகப்பட்டவர் கொலைகாரனது ஆசிரியர். பள்ளியிலேயே சுய இன்பம் செய்ததாக அவனைக் குற்றம் சாட்டி அடித்து சீர்திருத்தப் பள்ளியில் குற்றவாளியாக சேர்த்தவர். சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு சென்ற போலீசுக்காரன் அச்சிறுவனை பாலியல் வன்முறை செய்கிறான். அந்த ஆசிரியோ இன்னும் அவன் தவறு செய்திருப்பதாக கூக்குரலிடுகிறாள். இத்தனை ‘ஒழுக்கம்’ பார்க்கும் அவள் அதிதியிடம் புகைப்பதற்கு பீடியும் கேட்கிறாள்.

சரி, பள்ளி நாட்களில் இப்படி சுய இன்பம் செய்து ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு அதனால் மனவதைக்கு ஆளாகி இப்படி ஒரு கொலைகாரனாக மாற முடியுமா? இந்த கேள்விதான் மிகப்பெரிய லாஜிக் மீறல். இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் பாலியல் சார்ந்த விசயங்கள் கைக்கு அடக்கமாய் அனைத்து பிரிவினரிடமும் சென்று சேரும் போது சிறு வயதில் கரப்பழக்கம் காரணமாக தவறு செய்து விட்டதாக கதைக்கும் சேலம் சிவராஜ் வைத்தியரை பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை, பொருட்படுத்தும் சிலர் இருக்கிறார்கள் என்பது நமது மக்களிடம் ஹீலர் பாஸ்கருக்குரிய மார்க்கெட் இன்னமும் இருப்பதைக் காட்டுகிறது. இயக்குநர் மிஷ்கினும் சேலம் சிவராஜின் சீடராக இக்கதையின் அடிச்சரடை வடித்துள்ளார்.

மேலும் கொலைகாரன் தனது இடத்தில் சர்ச் போன்று வடிவமைத்துள்ள இடத்தில் ஆசிரியரை கன்னியாஸ்திரி வேடத்தில் அமரச்செய்து தான் தவறு செய்யவில்லை ஜிப் மாட்டிக் கொண்டுவிட்டதால் கை அந்த இடத்தில் இருக்கிறது என்று கதறுகிறான். ஆசிரியரோ அவனுக்கு அறுபது சவுக்கடி கொடுக்க வேண்டுமென கத்துகிறாள். அதிதி மட்டும் மாடர்ன் கேர்ளாக சுய இன்பம் என்பது சாதாரண விசயமாயிற்றே என்று சுட்டிக் காட்டுகிறாள்.

இதன்படி கொலைகாரன் சுய இன்பமே செய்யாமல் சிறு வயதில் தண்டனை பெற்று கொலைகாரனாக மாறினான் என்றோ, சுய இன்பம் செய்து அதனால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்க முயற்சித்து தோல்வியுற்று பின்னர் கொலைகாரனாக மாறினான் என்றோ வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் இந்த பிளாஷ் பேக் தலையை வெட்டும் ஒரு கொலைகாரனாக ஒருவனை மாற்றும் பாரிய சக்தி வாய்ந்த சம்பவமல்ல.

இந்தியா டுடே-வில் நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதை இந்த மையச்சரடை சரியாக முன்வைக்கிறது. பள்ளியின் இறுதி பெஞ்சில் சுய இன்பம் செய்யும் மாணவனை கண்டிக்கும் ஆசிரியர் அவனை தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று பெற்றோரை அழைக்க வைக்கிறார். மாணவனின் தந்தையோ நீங்களெல்லாம் பிள்ளை குட்டிகளை பெற்றவர்களில்லையா என்று வைது விட்டு மகனை அழைத்துச் செல்வார். கதை முழுக்க ஆசிரியர்களின் போலியான ஒழுக்கத்தை நையாண்டி செய்திருப்பார் நாஞ்சில் நாடன்.

உண்மையில் சுய இன்பம் குறித்த சமூகத்தின் பார்வையை குத்திக் காட்ட வேண்டுமென்றால் அதை அப்படி ஒரு நகைச்சுவையாக காட்டி உபதேசித்திருக்கலாம். ஆனால் இருட்டுக்கடை அல்வாவை சாப்பிடுவதற்கு நாஞ்சில் நாடன் பயன்படுத்திய ஒரு சில்வர் ஸ்பூன் போதாது திருப்பாச்சி அருவாள் இருந்தால்தான் வெட்ட முடியும் என்று மிஷ்கின் யோசித்திருக்கிறார்.

பாலியல் வன்முறைகள் கொடூரமான நடக்கும் நிர்பயாக்கள் காலத்தில் வாழ்கிறோம். குற்றச் செய்திகளையே வைத்து டிஆர்பி ரேட்டிங்கில் பாலிமர் செய்தி தொலைக்காட்சியும், ஒன் இண்டியா இணைய தளமும் முன்னணி வகிக்கின்றன. சமூகத்தில் அனைத்து விதமான குற்றங்களும் கொடூரங்களும் நடக்கும் காலத்தில் இப்படி ஒரு கதை அமைத்து அதற்கு பின்னணியாக இப்படி ஒரு சப்பை காரணத்தை முன்வைக்கும் இயக்குநரது புத்தாக்க சிந்தனை அறுவெறுப்பை ஊட்டுகிறது.

மிஷ்கினது சிந்தனையில் கொலையை எப்படி தத்ரூபமாக காட்டுவது, அக்காட்சிகளை எப்படி ஒரு காவியம் போல சித்தரிப்பது என்பதே இருக்கிறது. சிந்தனைக்கு வழியில்லாத போது சித்தரிப்புகள் விஸ்வரூபமெடுக்கின்றன. சமூகவியல், உளவியல், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், இன்றைய சமூக இயக்கம், நவீன வாழ்க்கை குறித்து அவருக்கு அக்கறையில்லை. கொலை செய்யும் பெண்ணொருத்தியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்யச் சொல்கிறான் கொலைகாரன். ஹேக்கரோ அந்தப் பெண்ணின் ஐ.பி நம்பரை கண்டுபிடித்து மாபெரும் சாதனையைச் செய்தது போலச் சொல்கிறான். ஐ.பி நம்பரை கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான இலவச சேவைகள் இருக்கின்றன. அதையே ஒரு ஹேக்கர் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் ஹேக்கர் குலமே வெட்கித் தலைகுனியும். அதனால்தான் என்னமோ ஹேக்கரையே கொலைகாரன் கொன்று விடுகிறான். தடயம் இருக்கக் கூடாதாம்.

இயக்குநர் மிஷ்கின்

தலையை வெட்டி முண்டமாக்கி பொது இடத்தில் வீசுவதையும், அதற்காக பெண்களை வேட்டையாடுவதை ஒரு நவீன இளைஞனது பாணியில் செய்வதற்கும் பாரிய குற்ற மனது வேண்டும். அதை ஏதோ மனநோய் என்று காட்டுவது குற்றவாளியின் மனநிலையை எளிமைப்படுத்தும் மனநிலை. பொதுவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இப்படி தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரர்களாக இருப்பதில்லை. அவர்கள் அதிகமும் தங்களை அறியாமல் வதைத்துக் கொள்கிறார்களே அன்றி உடன் இருப்பவர்களை அல்ல. உடன் இருப்பவர்களது சிரமம் மனநிலை பாதிப்படைந்தவர்களை புரிந்து கொள்வதும் அவர்களை தொடர்ந்து நிதானமாக பராமரிப்பதும்தான்.

கொலைகாரன், தொடர் கொலைகாரன் என்றால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றொரு ஸ்டீரியோ டைப் அபத்தத்தை தமிழ் சினிமா தொன்று தொட்டு கடைபிடித்து வருகிறது. அந்த ஸ்டீரியோவில் மிஷ்கினும் எட்டுக் கட்டையில் ஒலிக்கிறார்.

படிக்க:
2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம்
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

அதுவும் சுய இன்பம் காரணமாக ஒருவன் தொடர் கொலைகாரனாக மாறுகிறான் என்பது அபத்தத்தின் உச்சம். சாதாரணமான விசயங்களை சாதாரணமாக பரிலசீப்பதற்கு பதில் இயக்குநர் மிஷ்கின் அசாதாரணமுறையில்  பரிசீலிக்கிறார். அத்தகைய அசாதரணம்தான் அறிவு என்கிறார். இது ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால்தான் அறிவு ஒளிரும் என்பது போல ஒரு வியாதி. நாம் ஒரு தெருவோர தேநீர்க்கடையில் டீக்குடித்துவிட்டு அளவளாவும் போது மிஷ்கின் அதையே இமயமலைச் சிகரங்களில் உள்ள டீக்கடையில் செய்ய நினைக்கிறார். நமது வீட்டறையில் சில்வியா பிளாத்தின் கவிதையை படித்துக் கொண்டால் போதுமானது என நாம் எண்ணுகையில் அதே சில்வியா கவிதையை கரீபியன் தீவுகளில் படிக்க வேண்டும் என எண்ணுகிறார் மிஷ்கின்.

ஒரு குற்றவாளியின் கோணத்தில் நியாயத்தை பேச வேண்டும் என்ற முறையில் இப்படம் இறுதியில் அமைகிறது. ஆனால் அதற்குரிய நியாயத்தை கதையோட்டமும் காட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அல்லது ஒரு குற்றவாளியின் குற்ற மனது கொடூரமாக பரிணாமம் அடைந்ததை காட்ட வேண்டும் என்ற முறையிலும் கதை அமையவில்லை. அதற்குரிய சமூக உளவியலையும் பேசவில்லை. மாறாக குற்றங்களை பூதாகரமாக காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒளிப்பதிவும், அரங்க அமைப்பும், இசையும், மிகை நடிப்பு கதாபாத்திரங்களும் பயன்பட்டிருக்கின்றன. இப்படியாக வடிவத்திற்காக எடுக்கப்பட்ட “சைக்கோ” படம் உள்ளடக்கத்தில் பூஜ்ஜியமாக கரைந்து போகிறது.

செய்தித் தொலைக்காட்சிகளின் மாலை நேர மருத்துவ நேரலை நிகழ்ச்சிகளில் அன்றாடம் சுய இன்பம் என்பது ஒரு தவறல்ல, அது ஒரு இயற்கையான பழக்கம் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள். அதையே ஒரு தொடர் கொலை செய்வதற்கான முகாந்திரம் என்று சுய இன்பத்தை கேலி செய்து கொடூரமாக்கியிருக்கிறார் இயக்குநர். சுய இன்பம் குறித்து சமூகம் கருதும் அறியாமைகளையும், போலி ஒழுக்கங்களையும் பரிசீலிப்பதற்கு இப்படம் முனையவில்லை. அது குறித்து ஒரு எதிர்மறை அதிர்ச்சி வைத்தியத்தையே அளிக்கிறது. இதனால சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. யாரும் இந்த விசயத்தினுள்ளே எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள்.

இறுதிக் காட்சியில் கொலைகாரன் மலை உச்சியில் இருந்து குதிக்கிறான். அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தைக் பார்க்கும் போது அவன் ஒரு சுதந்திரப் பறவை போல காற்றில் பறக்கிறான். ஜெயமோகனது சிறுகதை ஒன்றின் இறுதியில் தற்கொலைக் காட்சி ஒன்று வரும். அதில் பூமித்தாய் அவனை எடுத்து வாரிக் கொண்டாள் என்ற வரி தன்னை கவர்ந்தது என்று மிஷ்கின் கூறியிருக்கிறார். இந்தக் காட்சியும் கூட அந்தக் கவர்ச்சியின் பாற்பட்டதுதான்.

பாவம் இயற்கை!
பாவம் ஹிட்ச்காக்!

இளநம்பி