கேள்வி : போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவனின் முகத்தை மங்கலாக்கி தினமலர் வெளியிட்டுள்ளதே..”உண்மையின் உரைகல்லை” என்ன செய்யலாம்?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

தினமலர் மட்டுமல்லாமல் இந்து தமிழ் திசை, ஸ்க்ரால் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் அந்தக் காவித் தீவிரவாதியின் புகைப்படத்தை முகத்தை மங்கலாக்கியே வெளியிட்டிருந்தனர். காரணம் சுட்டவனுக்கு வயது 18 நெருங்கவில்லையாம்.

சும்மாவே காவிகளைக் காப்பாற்றும் பத்திரிகை, இப்படி ஒரு முகாந்திரம் இருக்கையில் அந்த காவித் தீவிரவாதியின் முகத்தைக் காட்டுவார்களா என்ன? நீங்கள் கூறுவது போல, பொய்மையின் உரைகல் மட்டுமல்ல, த்மிழ் திசை உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளும் நடுநிலை எனக் கூறிக்கொண்டு காவிகளுக்குச் சேவை புரிகின்றன. குறிப்பாக, ‘பொய்மையின் உரைகல்” காவிகளுக்காக நடத்தப்படும் ‘கட்சி’ சார்பற்ற நாளிதழ்! ‘நடுநிலைமையில்’ நின்று கொண்டு சங்கிகளுக்காக பஜனை செய்யும் தினசரி! நாமும் நடுநிலை என்ற பெயரில் வெளிவரும் காவிகளின் தினசரி தினமலரையும், இந்து தமிழ் திசையையும் அம்பலப்படுத்துவதை கடமையாகச் செய்ய வேண்டும்.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : ஆதித்ய வர்மா.. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மற்றும் ஹிந்தி கன்னடம் என்று பல மொழிகளில் பரவிக் கொண்டிருக்கும் திரைப்படம். இளைஞர்களை குறிவைக்கும் இப்படம் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரின் சீரழிவு திரைப்படங்களைக் காட்டிலும் ஆபாச வக்கிரமாக இருக்கிறது என்று என் மனைவி கூறுகிறார்.

கல்லூரி மாணவர்களிடையே தாக்கத்தை உண்டாக்கிய இப்படம் ஏன் வினவால் கவனிக்கப்படாமல் இருக்கிறது?

S. கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

முற்றிலும் கவனிக்ககாமல் இல்லை. அர்ஜூன் ரெட்டி படம் குறித்து தமிழரசி என்பவரால் தனது அனுபவத்தோடு இணைத்து எழுதப்பட்ட இக்கட்டுரை ஓரளவு பேசுகிறது.

இன்றைய ஃபாஸ்ட் புட், டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு அடிமைப்படும் இளைஞர்களின் கோபம், பெண்களை வேட்டையாடி காதலிக்கும் அநாகரிகம், இவையெல்லாம் ஒரு படமாக நம் இளைஞர்களை ஏன் ஈர்க்கிறது என்பது தனியே பேசப்பட வேண்டிய விசயம். அர்ஜூன் ரெட்டி ஒரு ஆணழகன், முன் கோபி, குடிப்பான், நினைத்ததை சாதிப்பான் போன்றவை ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் என்பதை மேற்கண்ட கட்டுரையில் தமிழரசி விளக்கியிருக்கிறார்.

இத்தகைய எழுதத்தக்க படங்கள் குறித்து அவ்வப்போது நினைவுபடுத்துங்களேன்! கண்டிப்பாக எழுதுகிறோம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொரோனா வைரஸை சீனாவே உருவாக்கி வைத்திருந்ததாக செய்திகள் வருகிறதே அது உண்மைதானா?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

பாம்பு, பல்லிகளை சாப்பிடும் தேசமென்று பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் சீனா குறித்த வாட்சப் வதந்தி இது. கொரோனா வைரஸ் குறித்தும், அதன் வரலாற்றையும் விளக்கும் விக்கி பீடியாவின் ஆங்கில தமிழ் கட்டுரைகளை படித்துப் பாருங்கள்!

கொரோனா வைரசால் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் இந்த வைரசை கட்டுப்படுத்திய சீன அரசை ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமே பாராட்டியிருக்கிறது. ஒருவேளை இந்த வைரஸ் இந்தியாவில் பரவியிருந்தால் நிச்சயம் பேரழிவுதான்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தோழர்களுக்கு வணக்கம். மகேஸ்வரியின் மகள். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் காரணத்தை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். இல்லை நீங்களாவது அவர்களை கேள்வி கேட்பதோடு நிறுத்தி இருக்கலாம். முழு காரணமும் தெரியாமல் பதிலளித்து இருக்க வேண்டியதில்லை. ஒரு பெண் ஒன்று பிடிக்காத ஒன்றை படித்து கொண்டோ அல்லது ஒரு நபருக்கு மனைவியாக இருந்து கொண்டுதான் பொது வெளியில் மக்களுக்காக இருக்க வேண்டுமா என்ன?

குழலி

ன்புள்ள குழலி,

கேள்வியில் இருந்து இன்ன காரணம்தான் என்று குறிப்பாக முடிவெடுக்க முடியவில்லை. குத்துமதிப்பாக மக்களுக்காக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு திருமணம் தேவையில்லை என்று உங்களது வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்கிறோம். அதை பொறுமையாக பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் தெரிவு.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு பெண் ஆளுமை மலருவதற்கு திருமணமும், குடும்பமும் மிகப்பெரும் தடையாக இருப்பது உண்மை. அதை ஆழமாகவும், தத்துவ நோக்கிலும் புரிந்து கொண்டு முடிவெடுத்தால் பிரச்சினையில்லை. இளைமையில் முடிவு வேகமாக இருக்கும். கூடவே அது விவேகமாகவும் இருப்பின் முதுமை வரை நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டிலும் சுதந்திரமாகவும் இருக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி மறுப்பாளராக இருக்கும் பெற்றோர் தம் குழந்தையை சாதியற்றவர் என்று பள்ளியில் சேர்க்கும் போது இட ஒதுக்கீட்டை சொல்லித்தான் பள்ளி நிர்வாகம் பயமுறுத்துகிறது. அதை புறம் தள்ளி பள்ளியில் சேர்க்கும் போது இதர எனும் பிரிவில் சேர்த்துக் கொள்கிறார்கள். பள்ளிப்படிப்பு முடிந்து பட்டப்படிப்பு தொடங்கும் போது இட ஒதுக்கீடு இல்லாதால் நம் குழந்தைகள் ‘அவாள்’ குழந்தைகளுடன் போட்டி போடும் நிலை வரும். மாணவர்களின் எதிர்காலம் என்னாவது?

பூங்கோதை

ன்புள்ள பூங்கோதை,

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மனச் சாந்திக்காக அளிக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு. அதனால் நூற்றுக்கு நூறு மக்கள் முன்னேறி விடுவதில்லை. சாதி என்பது வர்க்கத்தோடும் தொடர்புடையது. எந்தப் பள்ளியில் சேர்க்கிறோம் என்பதிலேயே அது தெரிந்து விடுகிறது. இருப்பினும் அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழைகளாக இருந்தாலும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆங்கில வழிக் கல்வியில் தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகிறார்கள். அப்படியும் வழியில்லாத மக்களே தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசு பள்ளியில் படித்துக் கொண்டு நீட் தேர்வில் போட்டி போட முடியாது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

பார்ப்பன இதர ‘மேல்’சாதி மக்கள் சாதி ரீதியாக மட்டுமல்ல வர்க்க ரீதியாகவே பொதுவில் வசதியாக இருக்கிறார்கள். எனவே இட ஒதுக்கீடு இன்றி அவர்களோடு போட்டி போடுவது என்பது சாதி ரீதியாக மட்டுமல்ல, வர்க்க ரீதியாகவும்தான். இன்றைக்கு பெரும்பான்மை ஏழை மக்கள் சாதி ரீதியாகத்தான் தமது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனாலேயே அவர்களது வாழ்வில் வசந்தம் வந்து விடுவதில்லை. பெண்களாக இருப்பின் பள்ளி இறுதியோடு கல்வி முடிந்து விடும். ஆண்களாக இருந்தால் கொஞ்சம் பச்சையப்பா வரை எட்டிப் பார்க்கலாம். இதை விடுத்து பொறியியலோ, மருத்துவமோ இதர உயர் படிப்புகளோ அவர்களது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

எனவே இட ஒதுக்கீடு இருக்கும் போதே இதுதான் ஏழை மக்களின் நிலைமை. மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்திற்கும் அதுதான் யதார்த்தம். இந்நிலையில் இட ஒதுக்கீடு இன்றி நமது குழந்தைகள் எதிர்காலத்தை இழந்து விடும் என்று பயப்படவேண்டியதில்லை. எல்லோருக்கும் கிடைக்கும் வாழ்க்கை நமக்கும் உண்டு. எல்லோருக்கும் இருக்கும் அபாயம் நமக்கும் இருக்கும்.

பிள்ளைகளை சாதியற்றவர்களாக பள்ளிகளில் சேர்ப்பது சாதியற்ற சமூகத்திற்கு தேவைப்படும் ஒரு தொடக்கம். அதன்படி சமூகத்தில் உங்களுக்கு உயர்ந்த இடம் எதிர்காலத்தில் காத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நாகரீக சமூகத்தின் வேர்களாக மாறுவதற்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை இழந்தால்தான் என்ன? எந்த ஒன்றையும் ஏதோ ஒன்றை இழந்துதான் பெற முடியும்.

இன்றைக்கு அரசு அனைத்தையும் தனியார்மயமாக்கி வரும் சூழலில் இட ஒதுக்கீடே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. காசு இருப்பவனே சமூகத்தில் வாழ முடியும் என்று ஆக்கிவிட்டார்கள். இட ஒதுக்கீடு இருப்பதால் நாம் அப்பல்லோவிற்கு போக முடிவதில்லை. அரசு மருத்துவமனைகளை நோக்கியே தள்ளப்படுகிறோம். இட ஒதுக்கீடு இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் மிகப்பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று தமது பொருட்களை வாங்குவதில்லை. ரேசன் கடைகளிலும் அருகாமை அண்ணாச்சி கடைகளில் கடன் வைத்தும்தான் வாங்குகிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

உங்களது பிள்ளை இட ஒதுக்கீட்டினாலும், பொருளாதார வசதியினாலும் ஒரு பல் மருத்துவராகத்தான் ஆகவேண்டுமென்பதில்லை. ஒரு பாலிடெக்னிக்கில் படித்து ஒரு தொழிலாளியாகக் கூட ஆகலாம். இந்த உலகமே தொழிலாளிகளின் வியர்வையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனும் போது நாம் ஏசி அறை மேன் மக்களின் கருத்துகளுக்காக அச்சப்பட வேண்டியதில்லை.

சாதியற்றவர் எனும் பிரச்சினை வெறும் பள்ளியோடு முடிந்து விடும் ஒன்றில்லை. சமூகம் அதை ஆயிரத்தெட்டு முறைகளில் எதிர்த்து பயமுறுத்தும். நல்லது கெட்டது என்றால் எட்டிப் பார்ப்பதற்கு சொந்த பந்தம் இருக்காது. உறவினர் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுவோம். நாளைக்கு திருமணமே பிரச்சினையாகும்.

இப்படியாக சமூகத்தின் முற்போக்கு நகர்விற்கு தடைகள் ஏராளமிருக்கிறது. சாதியற்ற சமூகமாக மாறுவதற்கு இந்த தடைகளை தாண்டினால் மட்டுமே சாத்தியம். அதன் துவக்கப் புள்ளிகளாக இருப்பதற்கு முதலில் பெருமைப்படுங்கள்!

உங்கள் குழந்தைகள் அவற்றின் திறமை விருப்பத்திற்கு ஏற்ப படிக்கட்டும். அதற்கு உங்களால் முடியும் வரை உதவுங்கள்! முடியாத போது விளக்குங்கள். நம் குழந்தைகளை நல்ல சமூக மனிதர்களாக வளர்ப்பதுதான் முதன்மையான பிரச்சினை. அதில் வெற்றி பெறும் போது இந்த மனமாச்சரியங்களுக்கு இடமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்