மாதவிலக்கு இல்லை என நிரூபிக்க 68 இளங்கலை மாணவர்களின் உள்ளாடைகளை அகற்றுமாறு ஃபிப்ரவரி 13 அன்று குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக அகமதாபாத் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மாதவிலக்கு சமயத்தில் இந்து மத விதிமுறைகளை மாணவர்களில் சிலர் மீறுவதாக விடுதி மேற்பார்வையாளார் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததையடுத்து புஜ் நகரில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் (Shree Sahajanand Girls Institute) இந்த வக்கிர நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிரந்திகுரு ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா கட்ச் பல்கலைக்கழகத்தின் (Krantiguru Shyamji Krishna Verma Kutch University) கீழ் இயங்கும் இந்த கல்லூரி 2012 இல் தொடங்கப்பட்டது. இதை சுவாமிநாராயண் மந்திரைப் (Swaminarayan Mandir) பின்பற்றுபவர்கள் நடத்துகிறார்கள். இதன் விதிகளின்படி மாதவிடாய் சமயத்தில் கோயில் மற்றும் சமையலறை வளாகங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. விடுதி மாணவிகள் ஒருவருக்கொருவர் சேர்ந்து பழக கூட அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் மாதவிலக்கு சமயங்களில் மூன்று நாட்களுக்கு தரைத்தளத்திலுள்ள அறையில் பூட்டி வைத்து உணவு வழங்கப்படுவதாகவும் விடுதி மாணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூரி நேரத்தில் தங்கள் வகுப்பறைகளை விட்டுவிட்டு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர்களில் ஒருவர் அகமதாபாத் மிரரிடம் கூறினார். “கல்லூரி முதல்வர் எங்களை அவமதித்ததுடன் எங்களில் யாருக்கெல்லாம் மாதவிலக்கு இருக்கிறது என்று கேட்டார். மாதவிலக்கு இருப்பதாக நானும் மற்றொருப்பெண்ணும் ஒப்புக்கொண்டாலும் நாங்கள் அனைவருமே குளியலறைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு பெண் ஆசிரியர்கள் எங்கள் உள்ளாடைகளை தனித்தனியாக அகற்றினால் தான் நாங்கள் மாதவிடாய் இருக்கிறோமா என்று சோதிக்க முடியும் என்று கூறினார்கள்” என்று மேலும் கூறினார்.

படிக்க:
வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான மாணவர்கள் வெகு தொலைவிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று மற்றொரு மாணவர் கூறினார். “மாதவிலக்கு பிரச்சினை தொடர்பாக கல்லூரி முதல்வர், விடுதிக்காப்பாளார் மற்றும் அறங்காவலர்கள் தொடர்ந்து எங்களை துன்புறுத்துகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் மாதவிலக்கில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறோம். அவர்களின் மத விதிகளை நாங்கள் பின்பற்றினாலும் இது நிகழ்கிறது. எங்களில் சிலருக்கு மாதவிலக்கு இருப்பதாகவும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் பழகியதாகவும் சந்தேகித்ததால் எங்கள் அனைவரது உடைகளையும் கலைய சொன்னார்கள். கடைசி அவமானமாக இது இருக்கட்டும். இதற்கு மேலும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

விடுதியை காலி செய்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினரான பிரவீன் பிண்டோரியா மாணவர்களிடம் கூறினார். மேலும் அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று ஒரு கடிதத்தில் கையெழுத்திட பிண்டோரியா கட்டாயப்படுத்தியதாக அந்த மாணவர் குற்றம் சாட்டினார்.

கல்லூரி நிர்வாகத்தின் மூன்று அதிகாரிகள் மற்றும் விடுதி மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூஜின் போலீஸ் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். “இரண்டு பெண் அதிகாரிகளும் பெண் மாணவர்களுடன் பேசியுள்ளனர்” என்று ஒரு அதிகாரி ANI இடம் கூறினார்.

“நாங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதன் அதனடிப்படையில் வெறுமனே பேருக்காக ஒரு சிறிய கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம்” என்று கல்லூரி அறங்காவலர் பி.எச்.ஹிரானி கூறினார். “இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு கோயில் இருப்பதால், மாணவர்களுக்கு இந்த மதப்பிரிவின் விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களுக்கு நடந்தது நியாயமற்றது. நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். குஜராத் சுவாமி நாரயண் மந்திரை சேர்ந்த சாமியார் ராதாராமனுடம் ஐந்து பேர் கும்பல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டதற்காக 2019, நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பொறுப்பாளர் தர்ஷனா தோலாகியா உறுதியளித்தார். பின்னர் இந்த நிகழ்வு விடுதியுடன் தொடர்புடையது என்றும், யாரும் மாணவிகளை தொடவில்லை என்றும் அவர் ANI -யிடம் கூறினார். “இதற்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார். “மாணவிகளின் அனுமதியின் பேரில் தான் இது நடந்தது. யாரும் அதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று அவர் கூறினார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ தொடரும் நேபாளப் பெண்களின் மாதவிடாய் அவலம்

மாணவர்களைச் சந்தித்து ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் குழுவை தேசிய பெண்கள் ஆணையம் அமைத்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த “வெட்கக்கேடான செயல்முறையின்” காரணத்தை விளக்குமாறு ஆணையம் அதிகாரிகளிடம் கேட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தோலகியா மற்றும் காவல்துறை இயக்குனரையும் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையமும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தோ-ஆசியன் செய்திச் சேவை (IANS) கூறியது.

இந்த நாரயண் மந்திர் உலக மகளிர் தினத்தை கொண்டாடவும் அழைப்பு கொடுத்துள்ளது தான் இதில் இன்னும் கொடுமை.

இந்து மதத்திற்கு சீர்திருத்தம் வேண்டும் என்று இன்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்து மதத்தின் நம்பிக்கைகள், விதிமுறைகள் ஒன்று, இரண்டு… என்று நீங்கள் பட்டியலிட்டு பாருங்கள். அத்தனை விதிகளுமே பார்ப்பனியப் பிற்போக்கு சடங்குகளாகவும், ஆபாசப் புளுகுககளாகவும், புராணக்கதைகளாகவும் தான் இருக்கும். இந்த பிற்போக்குத்தனத்திற்கும் இதர பெரும்பாலான இந்து மக்களுக்கும் சம்மந்தமே இருக்காது.


சுகுமார்
நன்றி :  ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க