ருபக்கம் ஒழுக்கம், கற்பு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பாடம் எடுக்கிறோம். மறுபக்கம் தினசரி செய்தித்தாள்களில் குழந்தைகளையும் வன்புணர்வு செய்கிறார்கள், பெண்களை மானபங்கப்பபடுத்தி தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். எய்ட்ஸ் நோயில் இந்தியா தான் முதலிடம். இவை கூறும் செய்தி தான் என்ன?

நம் குழந்தைகளுக்கு பாலுறவு சார்ந்த கல்வியை நாம் முறையாக பயிற்றுவிப்பதில்லை.

நமது உடலில் ஜீரண மண்டலம் இருக்கிறது, சுவாச மண்டலம் இருக்கிறது,
நரம்பு மண்டலம் இருக்கிறது. எலும்புகளும் தசைகளும் இணைந்து நம் உடலை இன்னதென்று கண்டுகொள்ளுமாறு நிற்கச்செய்கிறது.

ஆனால் இந்த இனப்பெருக்க உறுப்புகள் எதற்காக இருக்கின்றன ? என்ற கேள்வி வளரும் ஒவ்வொரு வளர்இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லாமல் இல்லை.

எனக்கு பதினொன்றாம்; பனிரெண்டாம் வகுப்பு எடுத்த ஆசிரியர் விலங்கியலில் வந்த இந்த பாடங்களை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ஸ்கிப் செய்து விட்டார். சமூகத்தில் ஒரே ஒருவரிடம் இருந்து கூட இது குறித்த சரியான பார்வை தருமாறு ஒரு கட்டுரையையோ ஒரு பேச்சையோ நான் கேட்டு வளர்ந்ததில்லை.

ஒரு பெண் பூப்பெய்துவாள், மாதா மாதம் மாதவிடாய் காண்பாள்
ஆனால் ஏன் அவளுக்கு மாதவிடாய் வருகிறது என்று கேட்டால் தெரியாது. மேலும் மாதவிடாய் காலத்தில் தன் நலன் எப்படி பேசுவது என்று தெரியாமல் 90% தமிழக வளர்இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போது நாம் இன்னும் எத்தனை பின் தங்கியிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

வளர்இளம் பருவத்தில்
பல கனவுகள் பூக்கும்.
புலரா வானில்
பல வண்ணங்களை தீட்டும் கதிரவனைப்போல
மலரா வயதில் பல எண்ணங்களை தீட்டும் மனது.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் தான் தங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நல்லமுறையில் கடந்து வரும் நிகழ்வுகளும் நடக்கும்.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
♦ இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில மூடநம்பிக்கைகளும் ! | ஃபரூக் அப்துல்லா

ஒரு குழந்தை பிறந்த மூன்று வயது வரை தன் பாலினம் அறியாது. பிறகு தன் பாலின வேறுபாட்டை உணர ஆரம்பிக்கும். தனக்கு இருப்பது போல் அடுத்த பாலினத்திடம் இல்லை என்பதையும், அடுத்த பாலினத்தில் இல்லாதது நமக்கு இருக்கிறது என்றும் சமூகம் அதற்கு முறையாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னமே, சினிமா மூலமும்
அதில் காட்டப்படும் அதீத மசாலா பூசப்பட்ட காட்சிகள் மூலமும்
ஓ.. எதிர் பாலினம் என்றால் இப்படித்தான் போல..

 • சினிமா ஹீரோயின் போல கொஞ்சம் அரை லூசாக இருந்தா தான் பசங்களுக்கு புடிக்கும் போல..
 • சைஸ் ஜீரோ தான் நல்லது போல..
 • இந்த க்ரீம் தடவுனா தான் கொஞ்சம் அழகா இருக்கும் போல..

என்று வளர்இளம் பெண்கள் நினைப்பார்கள்.

வளர் இளம் பையன்களும் மீசை அரும்பாத வயதில் கூட தங்களை பெண்களிடம் எப்படி அழகாக முன்னிறுத்துவது என்று சிந்திப்பார்கள். இயற்கையாக ஹார்மோன் மாற்றங்களால் பரு வந்தால்.. அதைக்கூட சில பெண்கள் தங்களை பார்ப்பதால் தான் வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள்.

கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஏதோ ஒரு உருண்டை உருள்வது போல உணர்வார்கள்.

ஒரு சக வயது பெண் பார்த்து சிரித்தால்
உலகை மறப்பார்கள்
பேசிவிட்டாலோ ஊன் உறக்கம் துறப்பார்கள்
சிறகுகள் கூட்டி வானில் பறப்பார்கள்

உண்மையில் வளர்இளம் பெண்கள் தாங்கள் பூப்பெய்தும் வரை பெண்ணுறுப்பு குறித்து அறிவதில்லை. அறிந்து கொள்ளவும் முடியாது. சொல்லித்தர ஆள் இல்லை என்பதே முக்கியமான விசயம் இங்கு.

 • ஏன் காயமே ஏற்படாமல் உதிரம் வருகிறது?
 • காரணமே இன்றி மார்பகம் வளர்கிறது?
 • சுருக்கமே இல்லாத முகத்தில் ஏன் பருக்கள் வருகின்றன?
 • இதுவரை நண்பனாக இருந்தவனிடம் இருந்து தாய் தூரமாக இருக்க சொல்கிறாளே?
 • தந்தை அருகிலே படுத்த என்னை ஏன் திடீரென தாய் தன் அருகில் படுக்க கட்டளையிடுகிறாள்?
 • சக தோழிகளுக்கும் இதே உணர்வு வருகிறதா?
 • இந்த வழியாக தான் குழந்தை வருமா? அத்தனை பெரிய தலை எப்படி இந்த சிறிய ஓட்டை வழியாக வரும்?
 • இறைவா.. என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?

இப்படி பல கேள்விகள் எழும்.

பெண்களுக்காவது பூப்பெய்திய நாளில் இருந்து தாய் தனக்கு தெரிந்ததை கூறிவருவார். அது சரியா தவறா விடுங்கள். ஒரு ப்ரைமரி செக்ஸ் கல்வி அங்கு தாயிடம் இருந்து கிடைக்கும் .

ஆனால் வளர் இளம் ஆண்களுக்கோ அதுகூட இல்லை.

 • நேற்று வரை சுருங்கிக்கிடந்த உறுப்பு ஏன் திடீரென இத்தனை வேகமாக வளர்கிறது.?
 • ஏன் மீசை முளைக்கிறது?
 • ஏன் சக பெண் தோழிகளை பார்க்கும் போது திடீரென்று ஆசை துளிர்க்கிறது?
 • ஏன் விடியா காலையில் குறியில் இருந்து வெண்ணிற நீர் வடிகிறது? இது நோயா?
 • எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? சக நண்பர்களுக்கும் நடக்கிறதா?

இதில் எந்த கேள்விக்கும் ஆண்களுக்கு விடையே கிடைக்காது.

தங்களுக்குள்ளேயே ஃபேண்டசைஸ் செய்வார்கள். அதனால் ஒரு தியரி உருவாகும். அது சரியோ பொய்யோ நம்புவார்கள். இப்படியாக ஒரு மாய உலகில் வாழ்வார்கள்.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
♦ நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

பசி தாகம் போன்று பாலுறவும் முக்கிய தேவைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. உணவு பற்றி பேசுகிறோம். ஆனால் பாலுறவு பற்றி பேசுவதே இல்லை. இனி பேச வேண்டும்.

இந்த பகுதிகளை உங்களின் 13 வயது மற்றும் அதற்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.

இறைவன் நாடினால்…
தொடர்ந்து பேசுவோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

 1. மூடி வைத்து பாதுகாப்பு சேவைகள் செய்ய வேண்டியது எது….. திறந்த வெளி உலகத்திற்கு தெரியவரும் விஷயங்களை கூட மூடிக்கொண்டு இருந்து வரும் சமூகத்திற்கு கலாச்சார பெயர் சூட்டி கண்கட்டு வித்தை காட்டி கண்மூடித்தனமாக வாழும் வாழ்க்கை உளவியல் ரீதியாக நாகரிகம் அற்ற சமூகம் தான் இது……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க