மார்க்சியம் லெனினியம் பற்றிக் கூறும் “மார்க்சியத்தின் அடிப்படைகள்” என்னும் சிறு தொகுதியில் 11 கட்டுரைகள் உள்ளன … 70 ஆண்டுகள் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாக, புது வாழ்க்கையின் பேரொளியாக இயங்கி வந்த சோவியத் நாடு சிதைந்து 15 (2006-இல் இந்நூல் வெளியானது) ஆண்டுகள் ஆகின்றன. அந்நிகழ்ச்சிக்குப் பின் மார்க்சியத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மார்க்சியம் ஓர் அறிவியல். அறிவியலுக்கு அழிவில்லை ; வாழும், வளரும், வெற்றிபெறும் என்பது உறுதி.

விலங்கு நிலையிலிருந்து பிரிந்த மனிதன் மட்டுமே தன் உழைப்பால் பல சாதனைகளைப் படைத்து வரலாற்றை உருவாக்கினான். வார்ரோ என்னும் ரோமானிய அறிஞர் கருவிகள் மூவகை ; முதலாவது பேசக்கூடியவை, இரண்டாவது பேச முடியாதவை, மூன்றாவது ஊமை. இவற்றுள் முதல் வகை சார்ந்தவன் மனிதன். இரண்டாம் வகை சார்ந்தவை பிற உயிரினங்கள், மூன்றாவது வண்டி போன்றவை என்றார். இவற்றுள் மனிதனே தன் உழைப்பால் இவ்வுலகில் காணும் செயற்கைப் பொருள்கள் செல்வங்கள் அனைத்தையும் படைத்தான். இப்படைப்பு நிகழ்ச்சிகளில் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டவன் இந்த உழைப்பாளியே. இந்த உழைப்பாளியேதான் குடும்பம், அரசு, சமூக உறவுகளை உருவாக்குவதில் பங்குபெற்றவன். பொருள் உற்பத்தி படைப்பில்-அதில் உள்ள உற்பத்தி உறவுகளில் மையமானவன்.

வஞ்சகம், சூழ்ச்சி, சுரண்டல் என்னும் தீங்குகளை எதிர்த்துச் சமத்துவத்துக்காக நீண்ட நெடுங்காலமாக மனிதன் போராடி வந்துள்ளான். ஒவ்வொரு நாட்டிலும் கலகங்கள் பல, எழுச்சிகள் பல, கிளர்ச்சிகள் பல, புரட்சிகள் பல, வெற்றிகள் சில, தோல்விகள் பல. வெற்றிகள் சிலவாயினும் அவையே சமூக மாற்றத்திற்கு வித்திட்டன. தோல்விகள் உரமாயின. வரலாறு தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம்.

தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம் மார்க்சியம் தோற்றது எனில் வரலாறு தோற்றது என்பது பொருள் மார்க்சியம் ஏலாது என்றால் மனிதன் மனிதனாகக் கருதப்படுவதற்குத் தகுதியற்றவன் என்பது பொருள். இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரைகள் பயிலப்படுதல் வேண்டும். ஏறத்தாழ மார்க்சியம் பற்றிய எல்லா அடிப்படை வினாக்களுக்கும் இக்கட்டுரைகள் விடை தருகின்றன.

மார்க்சியம் மாய்ந்துவிட்டது எனத் தம்பட்டம் அடிக்கப்படும் இந்நேரத்தில் தனியார் மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை சூறாவளியாகச் சுழன்று அடித்து வரும் இந்நேரத்தில் மார்க்சியம் எதிர் நிற்குமா என்னும் ஐயப்பாடு பலருக்கு இயல்பாக எழும். இப்புதிய பொருளாதாரக் கொள்கையும் உலக முதலாளித்துவத்தின் நீட்சியே என்னும் உண்மையறியப்பட்டால் மார்க்சியத்தின் மெய்ம்மையும் அதன் தேவையும் உணரப்படும். இந்த மன உறுதியை அளிப்பனவாகவே இக்கட்டுரைகள் அமைகின்றன. குறிப்பாக இதுவரை மார்க்சியம் அறியாதவருக்கு அதனை அறிவிக்கும். அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் இத்தொகுதியை வெளியிடுவதில் என்.சி.பி.எச் பெருமிதம் கொள்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து…)

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
“இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

இந்நூலில், உபரி மதிப்பு என்றால் என்ன? தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? தொழிலாளி வர்க்கம் என்றால் என்ன? இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? அந்நியமாதல் என்றால் என்ன? ஏகாதிபத்தியம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்பது என்ன? பெண்களின் மீதான ஒடுக்குமுறை தவிர்க்க முடியாததா? முதலாளித்து வர்க்கம் என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? ஆகிய அடிப்படையான 12 கேள்விகளே உட்தலைப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன?

ஒடுக்குமுறையும் சுரண்டலும் முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்கள். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. முதலாளித்துவ உடைமையாளர்களோ உழைப்போரால் உருவாக்கப்படும் உற்பத்திப் பொருள்களிலிருந்து லாபங்களைப் பெறுகின்றனர். இதுவே பொருளாதாரச் சுரண்டலின் சாராம்சமாகும். ஏறத்தாழ ஒவ்வொரு தொழிலாளியும், ‘சுரண்டல்’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதில்லையென்றாலும் கூட, அது பற்றி அறியாமலில்லை. முதலாளித்துவத்தின் கீழ் அனைத்துத் தொழிலாளர்களும் – அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல உடைமையாளர்களால் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் செல்வம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில வங்கியாளர்களிடமும் உடைமையாளர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயங்களில் அனைத்துச் சட்டங்களும் இந்த ஏற்றத்தாழ்வை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.

மேலும் கூடுதலாக, வர்க்க சமுதாயம் முதலாளித்துவத்தை வரையறுக்கக்கூடிய பொருளாதாரச் சுரண்டலுக்கும் அப்பால் செல்லும் ஒரு தனிச்சிறப்பான ஒடுக்குமுறைகளின் வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை மற்றும் ஒரு பாலின உறவு, இரு இனங்களுக்கிடையே அல்லது பல்வேறு இனங்களுக்கு இடையிலான பாலின உறவுகளை எதிர்த்த பாலியல் அடிப்படையிலான ஒடுக்கு முறை ஆகியவை இருக்கின்றன.

முதலாளித்துவத்தின் கீழ் தனிவகைப்பட்ட ஒடுக்குமுறைகளின் முக்கியமான வடிவங்களில் ஒன்றாக தேசிய ஒடுக்குமுறை – தேசிய இனத்தின் அடிப்படையில் அவ்வின மக்கள் அனைவரையும் சுரண்டுவது இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது மிகவும் பலம் வாய்ந்த ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறபோது, சர்வதேச அரங்கில் இது பரவலாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் சொத்துடைமையாளர்களும் பெரிய வங்கிகளாலும் கூட்டிணைவுக் குழுமங்களாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். (நூலிலிருந்து பக்.7-8)

நூல் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
ஆசிரியர் : நிழல்வண்ணன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 86
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க