குடியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என இந்தியா முழுவதும் பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடும் இந்த அரசியல் சூழலில் மதவெறிக்கு எதிரான தோழர் பகத்சிங்கின் பார்வையை வினவு வாசகர்களின் முன் வைக்கிறோம் ! தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே

“பகத்சிங் சிறையில் இருந்தபோதுதான் மார்க்சியத்தை கற்றுக் கொண்டார்; போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற போதும் அவர் தனி நபர் பயங்கர வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்; உண்மையான புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்போது அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை” என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்பிக் கொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையை சற்று கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும்.

ஏனென்றால் இக்கட்டுரை அவர்களது முன் கணிப்புகளில் பல அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இது, சாண்டர்ஸ் கொலைக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இக்கட்டுரையில் மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே என்பதை ஒரு தீர்க்கமான மார்க்சிய வாதியின் வர்க்கப் பார்வையுடன் முன் வைக்கிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

♦ ♦ ♦

மதக் கலவரங்களும் நமது கடமையும்

இந்தியாவின் நிலைமை தற்போது வருந்தத்தக்க ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஜென்ம விரோதிகளாக ஆகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மட்டுமே நீங்கள் மற்ற மதத்தவர்களுக்கு எதிரியாக கருதப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பவில்லையென்றால் தயவுசெய்து லாகூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களைப் பாருங்கள். சீக்கியர்களையும் இந்துக்களையும் எவ்வளவு கொடூரமாக முஸ்லீம்கள் கொலை செய்தனர். சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தனர். இந்தக் கொலைகள் சில மனிதர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் என்பதற்காக நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம்களால் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் சீக்கியர்களாகவோ இந்துக்களாகவோ இருந்தாலே போதும். அதே போன்று இந்துக்களாலும் சீக்கியர்களாலும் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலே போதும்.

மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. இந்த மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன. இந்த வெறுப்புகளின் பிடியில் இருந்து நாடு என்றைக்கு விடுபடும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்தக் கலவரங்கள் உலகத்தின் பார்வையில் இந்தியாவின் நன்மதிப்பை குலைத்து விட்டன. இந்த மதவாத வெறுப்பு எங்கும் பரவிக் கிடக்கும் நிலையில் வெகுசில முஸ்லீம்கள், சீக்கியர்கள் அல்லது இந்துக்கள் மட்டுமே தங்களது மனதை அமைதியாக வைத்திருப்பதைக் காணமுடிகிறது. மற்றவர்கள் தங்கள் கைகளில் எப்போதும் கம்புகளோடும் கத்திகளோடும் வாட்களோடும் தங்களது மதங்கள் என்று சொல்லப்படுவதை பாதுகாக்கத் தயாராக இருக்கின்றனர். முடிவில் ஒருவரையொருவர் கொன்று குவிக்கின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்களில் சிலர் தூக்குமேடையில் மரணமடைகின்றனர் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகு பிரிட்டிஷாரின் குண்டாந்தடிகள் இந்த மதவெறிபிடித்த மனிதர்களின் தலைகளைப் பிளக்கும் போதுதான் அவர்கள் தங்களது சுயநினைவுக்கு வருகின்றனர்.

மதக்கலவரங்களைத் தூண்டுவது மதவாதிகளும் செய்திப் பத்திரிக்கைகளுமே

பொதுவாக, மதவாதத் தலைவர்களும் செய்திப் பத்திரிக்கைகளுமே இக்கலவரங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றனர். இந்தியத் தலைவர்கள் நமக்கு மிக மோசமான துரோகம் செய்துவிட்டனர். யாரும் இதை மறுக்க முடியாது. இந்தியாவை விடுதலை செய்வதற்கான பொறுப்பை உடைய இத்தலைவர்கள், “ஒரே தேசியம்” (Common Nationality) “சுயராஜ்யம்” போன்ற முழக்கங்களை முழங்கினர். ஆனால் இவர்கள் ஒன்று தங்களது மௌனத்தின் மூலம் மதக்கலவரங்களில் முனைப்புடன் இருக்கின்றனர் அல்லது குருட்டுத்தனமான மதவெறிவாத நீரோட்டத்தின் போக்கில் நீந்திக் கொண்டுள்ளனர். மௌனமாக இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. ஆனால் மதவாத இயக்கத்தில் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் அதிகம். அனைத்து மக்களின் நன்மையை விரும்பும் தலைவர்கள் வெகுசிலரே. இந்த மதவாதப் பேரலை அவர்கள் அனைவரையும் அடித்துச் சென்று விட்டது. வழிகாட்டும் தலைமை இல்லாத நாடாக இந்தியா ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது.

தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.

இத்தலைவர்களைத் தவிர, மதக்கலவரங்களைத் தூண்டிவிடும் மற்றவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஒருகாலத்தில் உன்னதமான தொழிலாக கருதப்பட்ட பத்திரிக்கையாளர் தொழில் இன்று மிக மோசமாக சீரழிந்து விட்டது பத்திரிக்கைகள் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உண்டாக்குகின்றன. பத்திரிக்கைகளில் வெளிவந்த உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளால் வெடித்த கலவரங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் எழுத்தாளர்கள் வெகுசிலரே.

மக்களுக்கு அறிவூட்டுவதும், குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவிப்பதும், அவர்களது மதவாத உணர்வுகளை மட்டுப்படுத்தி மத நல்லிணக்கத்தை ஊக்குவித்து அனைவருக்கும் பொதுவான ஒரே (இந்திய) தேசியத்தை கட்டியமைக்க வேண்டியதும் பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் அவர்கள், மக்கள் மத்தியில் அறிவீனத்தையும், குறுகிய மனப்பான்மையையும் மதவாதத்தையும் பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்டாகும் அத்தகைய கலவரங்களின் மூலம் ஒரே (இந்திய) தேசியத்தைச் சிதைக்கின்றனர். பத்திரிக்கைகளின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் இன்றைய நிலையை நினைக்கும் போது நமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நம் இதயத்தைப் பிளக்கின்றது.

ஒத்துழையாமை இயக்க காலத்தின் போது மக்களிடம் இருந்த கிளர்ச்சி உணர்வைப் பார்த்தவர்களுக்கு இன்றைய சூழ்நிலை பெரும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது. அன்றைய காலத்தில் சுதந்திரம் நமது வாயிற்படி வரை வந்ததை நாம் காணமுடிந்தது. இன்றோ அது வெறும் கனவாக மட்டுமே ஆகிவிட்டது. இது பிரிட்டிஷார் பெற்ற வெற்றிகளுள் ஒன்று. தனது இறுதிக் கட்டத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் ஒரு பாறையைப் போல் உறுதி பெற்றுவிட்டது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையே

இந்த மதக்கலவரங்களின் ஆணிவேர் எங்கிருக்கிறது என்று நாம் ஆழமாகச் சென்று பார்த்தால், அவை பொருளாதாரக் காரணங்களில் இருப்பதை நாம் காணலாம். தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது நிறைய தியாகங்கள் செய்தனர். அவர்களது பொருளாதார நிலைமை சீரழிந்து போனது. ஆனால் ஒத்துழையாமை இயக்கம் தோல்வியடைந்ததால் அவர்கள் நம்பிக்கையிழந்தனர். தங்களது வேலைகளை இழந்த பெரும்பாலான மதவாதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி தங்களது தொழிலை மறுபடியும் தொடங்கினர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக பொருளாதாரப் பிரச்சனையே இருக்கும். இது கார்ல் மார்க்ஸின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று. இதுவே, நிலைமையை மோசமானதாக்கிய, தாப்லிக் (Tablique), தாம்கீன் (Tamkeen), சுத்தி (Shuddhi) போன்ற அமைப்புகள் உருவானதற்கான காரணம்.

எனவே, இத்தகைய கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே, ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து, மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் (Marta kya na karta) என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேயப் பேரரசால் ஆளப்படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

மதக்கலவரங்களுக்குத் தீர்வு

வர்க்க உணர்வை உருவாக்குவதே நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும். ஏழை உழைப்பாளிகளும் விவசாயிகளும் தங்களது உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முதலாளித்துவவாதிகளின் கைப்பாவை களாக ஆகி விடக்கூடாது. தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.


அந்த வீரன் இன்னும் சாகவில்லை ! கோவன் பாடல்!


ரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலைமையும் நம்முடைய நிலைமையைப் போன்றே இருந்தது என்பதை அறிவார்கள். ஜாரின் ஆட்சியின்போது நம்மைப்போலவே அந்த மக்களும் பல குழுக்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. இப்பொழுது அங்கே, கலவரங்கள் நடப்பதில்லை. பொருளாதார வறுமையின் காரணமாகவே ஜார் ஆட்சிக் காலத்தில் கலவரங்கள் ஏற்பட்டன. (சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு இப்பொழுது அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளது. “மனிதர்கள்” ஒவ்வொருவரும் “மனிதர்களாகவே” நடத்தப்படுகின்றனர். அவர்கள் “பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக” நடத்தப்படுவதில்லை. மக்கள் வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே இப்பொழுது அங்கே கலவரங்கள் பற்றிய செய்தியை எங்குமே கேட்க முடியாது

வர்க்கப் போராட்டங்களே மக்களின் ஒற்றுமையை சாதிக்கும்

மாறாக நமது நாட்டில் கலவரங்களின் போது பொதுவாக நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யும் செய்திகளே நமக்கு வருகின்றன. ஆனால் கல்கத்தா கலவரங்களில் ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குத் தென்படுகிறது. அங்கே, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததுடன் கலவரங்களை அமைதிப்படுத்தவும் முயன்றனர். அவர்கள் வர்க்க உணர்வு பெற்றவர்களாக இருந்ததனாலேயே அவர்களால் இதைச் செய்ய முடிந்தது. அவர்களுடைய நலன் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வர்க்க உணர்வு மட்டுமே இத்தகைய கலவரங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி.

வெறுப்பை விதைக்கும் மதங்களில் இருந்து நமது இளைஞர்கள் விலகியிருக்கின்றனர் என்பது நமக்குக் கிடைத்த மற்றொரு நல்ல செய்தி. அவர்கள் திறந்த மனதுடன் மனிதர்களை மதிப்பிடுகின்றனர். அவர்கள் மக்களை ஹிந்துக்களாக அல்லது முஸ்லீம்களாக அல்லது சீக்கியர்களாகப் பார்ப்பதில்லை. முதலில் மனிதர்களாகவும், பின்னர் இந்தியர்களாகவுமே மக்களை மதிப்பிடுகின்றனர். இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த கலவரங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. மாறாக இது போக கலவரங்களே இனி ஏற்படாதவாறு அத்தகைய வர்க்க உணர் தட்டியெழுப்புவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசியலிலிருந்து மதம் பிரித்து வைக்கப்பட வேண்டும்

1914-1915ம் ஆண்டுகளின் தியாகிகள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்திருந்தனர். மதம் என்பது தனிநபர்களின் விவகாரம். அதனை சமூக வாழ்க்கையில் கலக்க விடக்கூடாது. ஏனென்றால் அது சமூகம் ஒன்று படுவதற்கான வளர்ச்சிப் போக்கை தடைப்படுத்துகிறது என்றனர். அவர்களது இந்த நிலைபாட்டின் காரணமாகவே கெதார் கட்சி ஒன்றுபட்டதாகவும் வலிமையானதாகவும் இருந்தது. அக்கட்சியின் கீழ் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவருமே நாட்டிற்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

தற்காலத்தில் ஒருசில தலைவர்கள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மக்களிடையே உள்ள வெறுப்புகளை மட்டுப்படுத்த இது சரியான வழியே. நாங்கள் அவர்களது முயற்சிகளை ஆதரிக்கிறோம். அரசியலில் இருந்து மதம் பிரித்து வைக்கப்பட்டு விட்டால், நாம் நமது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட முடியும்.

இந்தியாவின் உண்மையான நலம் விரும்பிகள், நாங்கள் முன்வைக்கும் இந்த வழிமுறைகளைப் பற்றி ஆழமாக சிந்திப்பார்கள் என்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். (கேளாத செவிகள் கேட்கட்டும்… நூலிலிருந்து பக்.104-110)

சமன்லால் தொகுத்து வெளியிட்ட “பகத்சிங்கின் முழு ஆவண தொகுப்பு” எனும் ஹிந்தி நூலில் இருந்து நமது நாக்பூர் தோழர் க. ஜாம்தாரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர் தமிழாக்கம். இது பின்னர் K.C. யாதவின் தொகுப்பில் இருந்த மொழிபெயர்ப்புடன் ஒப்பிடப்பட்டு சீர் செய்யப்பட்டது. உட்தலைப்புகள் நம்முடையவை.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

6 மறுமொழிகள்

 1. Yes bank திவால், கொரினோ வைரஸ் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தோழர்களே!!

 2. அந்த வீரன் இன்னும் சாகவில்லை, அவன் தியாகம் இன்னும் முடியவில்லை.

 3. அந்த வீரன் இன்னும் சாகவில்லை…”அஞ்சமாட்டோம் போராடுவோம்…”

 4. மோடி சொன்னாரு புதிய இந்தியா பிறந்ததுனு. நீங்களும் அப்படி தான் சொல்ரீங்களோனு தொனுது. வினவு புதுசா பொறந்துடுச்சுனு நேத்து சொன்னீங்க. நல்லபடியா வளத்தீங்கன்ன சரிதான். சந்து பொந்துலயெல்லாம் நேத்து மொளச்ச விச காளன்கள் எல்லாம் செமயா கல்ல கட்டுதுங்க….நீங்க கடைய ஆரம்பிச்சு பத்து வருசமாச்சு..வெண்ண திரண்டு வரும் போது சட்டிய ஒடச்ச கதையா நாலும் பேரு வெளிய போனாங்க…இப்பொ என்னடான்னா ஒருத்தரு மூலமா கடைய மறுப்படியும் திறந்திருக்கீங்க. சரி நல்லபடியா நடத்துனா சரிதான்.

 5. மகிழ்ச்சியாக இருக்கிறது,

  மறுபடியும் வினவு செயல்படுகிறது , என்பதை நினைக்கும்போது,

  வாழ்த்துகள்,

  சேவைகள் தொடரட்டும்

 6. வினவு மீண்டும் நடைமுறைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் வெல்வோம் காலத்தின் தேவை வினவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க