நூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்

கேளாத செவிகள் கேட்கட்டும் ... நூலில் பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்களைத் தொடுத்து எளிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் த. சிவக்குமார். படிக்கத் தவறாதீர்கள் ..

”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை – விதைக்கப்படுகிறார்கள்” என்று காலங்காலமாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? விதைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்களின் வேர்களைப் பற்றிக் கொண்டு, இன்றைய காலகட்டத்தின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் புதிய புரட்சியாளர்கள் தானாகவே உருவாகி விடுவார்களா? நிச்சயம் உருவாக முடியாது. இங்கே அப்புரட்சியாளர்களோடு அவர்களது கொள்கைகளும் சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கையில் அது எப்படி நடக்கும்! புதைக்கப்பட்ட – மறைக்கப்பட்ட அவர்களது கொள்கைகள், கருத்துக்களின் சாரத்தை உட்கொண்டு ஜீரணிக்கும் ஒரு தலைமுறையில் இருந்து மட்டுமே அத்தகைய புதிய புரட்சியாளர்கள் உருவாகி வரமுடியும். (நூலிலிருந்து பக்-9)

பகத்சிங் தூக்கிலடப்பட்டு ஏறத்தாழ 55 ஆண்டுகள் முடிந்த பின்னரே முதன் முதலாக பகத்சிங்கின் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. (நூலிலிருந்து பக்-11)

பகத்சிங்கைப் பற்றி, அவரது கொள்கைகள் பற்றி அவர் வழிநடப்பது பற்றி ஏன் இத்தனை குழப்பங்கள் – தவறான அபிப்ராயங்கள்? காரணம், பகத்சிங்கின் தியாகம் தெரிந்த அளவிற்கு அவரது மார்க்சிய கொள்கையின் ஆழம் சாதாரண மக்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி, ஆளும் வர்க்கங்கள் பகத்சிங்கைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருவது ஒருபுறம் இருக்க பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றுபவர்களும் தங்கள் பங்கிற்கு தவறான அபிப்ராயங்களை உருவாக்கி வருகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் உண்மையில் பகத்சிங்கின் கொள்கைகள்தான் என்ன என்பதை உழைக்கும் மக்கள் உணருமாறு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் பகத்சிங்கைப் பற்றிய தங்களது சொந்த அபிப்ராயங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். (நூலிலிருந்து பக்-22)

எனவே, பகத்சிங்கின் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் போது கருத்துச் சிதைவிற்கோ, தவறான பொருள் கொள்வதற்கோ வாய்ப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டோம். (பக்-23) – முன்னுரையில் த.சிவக்குமார்.

பகத்சிங் சாதிக்க முயற்சித்த புரட்சி பற்றிய அவரது சொந்த புரிதல் என்னவாக இருந்தது என்பதை தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவரது படைப்புகள், அவரது பல்வேறு அறிக்கைகள் மற்றும் எழுத்துக்களை ஆராய்ந்துப் பார்த்தால், பகத்சிங்கை அவரது சமகாலத்தில் இருந்த மற்ற புரட்சியாளர்களோடு ஒன்றாகக் கருதுவதற்கு எவருக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. மற்ற புரட்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தால் உணர்ச்சிப் பூர்வமாக தூண்டப்பட்டிருந்தனர்; அதற்குத் தேவைப்படும் எந்த தியாகங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருந்தனர்.

இவற்றைத் தவிர, அவ்விடுதலையைச் சாதிப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மீதோ பரந்துபட்ட மக்களின் மீதோ அவர்கள் எவரும் பத்தியை சிறிதளவும் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் பகத்சிங்கின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. அவர், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அத்துடன் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். பகத்சிங்கின் இந்த அம்சம்தான் பகத்சிங் ஓர் கம்யூனிஸ்டாக இருந்தார் என்ற முடிவுக்கு பலரையும் வரச்செய்தது. (நூலிலிருந்து பக்-31,32)

” புரட்சி என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்… இந்தப்போர் தொடர்ந்தே தீரும்… அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்… இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சூழ்நிலைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்.” – பகத்சிங்.

அப்படியே இன்றைய சூழலோடுப் பொருந்திப் போகக்கூடிய, பகத்சிங்கின் தீர்க்க தரிசனமான வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. நூலின் வழியே பகத்சிங்கோடு உரையாடி பாருங்கள், உண்மை புரியும்.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க