டந்த ஆண்டு (2019) மனச்சோர்வுடன் முடிந்தாலும் நம்பிக்கையான ஒரு குறிப்பையும் அது விட்டுச் சென்றுள்ளது. அரசாங்கம் அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதை அது காட்டியுள்ளது. மேலும், தான் விரும்பியதைச் செய்வதற்கான முழுமையான உரிமையை தேர்தல் வெற்றி அளிக்கிறது என்பதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இது சாத்தியமான எல்லா வழிகளிலும் முசுலீம்களையே குறிவைக்க விரும்புகிறது. ஏனென்றால் சங்க பரிவாரின் முக்கியக் கோட்பாடே எப்போதும் அதுதான். அந்த திசையில் குடியுரிமை திருத்த சட்டம் – குடிமக்கள் தேசிய பதிவேடு ஒரு முக்கியமான படியாகும்.

இது இந்தியாவுக்கு மிகவும் கவலையளிக்கும் நிலையாகும். ஆனால், மக்கள் பெருமளவில் இதற்கு எதிர்வினையாற்றிய விதத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. நாடு முழுவதும் குடிமக்கள் சினத்தில் எழுந்துள்ளனர், CAA – NRC-க்கு எதிராக மட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்குள் வளர்ந்து வரும் ஆபத்தான பிரிவினை நிலைமைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர். எதிர்ப்பு அணிவகுப்புகளில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்படுவது தற்செயலானவை அல்ல – 70 ஆண்டுகளாக நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் கொள்கைகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்பைக் காப்பாற்றுவதற்கே இந்த யுத்தம் என்பதை குடிமக்கள் அறிவார்கள். பாஜகவும் அதன் அதிகாரம் மிக்க தலைவர்களும் அந்த மதிப்புகளை அழிக்க விரும்புகிறார்கள். ஆனால் குடிமக்கள் அவற்றைக் காக்கவும் பாதுகாக்கவும் விரும்புகிறார்கள்.

எல்லோரும் பரபரப்புக்கும் சோர்வுக்கும் உள்ளாகி போராட்டங்கள் சோர்வை எட்டினாலும் இந்த உள்ளொலி தொடர வேண்டும்; சிதறக்கூடாது.  சங்க பரிவாரம் தாம் கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான தனது இடைவிடாத பயணத்தை எப்போதும் நிறுத்தாது என்பது தெளிவாகிறது. அவர்கள் உருவாக்க விரும்பும் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான பார்வையும், எதையும் தங்கள் வழியில் வர விடக்கூடாது என்பதற்கான  உறுதியும் கொண்ட மொத்த விசுவாசிகளின் பரந்த இராணுவத்தையும் கடந்த தொண்ணூறு ஆண்டுகால மூளைச் சலவை உருவாக்கியுள்ளது.

படிக்க :
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !
♦ குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

அவர்களைப் பொறுத்தவரை, அது வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல; மதச்சார்பற்ற, தாராளமய ஜனநாயகத்திலிருந்து தொடங்கி அவர்கள் வெறுக்கிற அனைத்தையும் மொத்தமாக அழிப்பதும் ஆகும். குடிமக்கள் அதைப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த ஆண்டு, அரச அதிகாரத்தால் உயர்த்தப்பட்ட, சங்க இயந்திரங்கள் அந்த இலக்குகளை இன்னும் தீவிரமாகவும் இரக்கமின்றியும் தொடரும். நேரம் முடிந்துவிட்டதைப் போல, ஒரு அவசர உணர்வு அவர்களிடம் இருக்கிறது.

நரேந்திர மோடியின் முதல் அரசாங்கத்தில் அது தடத்தைக் கண்டுபிடித்தது; இப்போது இது தரையில் ஓடுகிறது. 2019-ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சில மாதங்களுக்குள், புதிய அரசாங்கம் காஷ்மீருடனான 70 ஆண்டுகால அரசியலமைப்பு ஏற்பாட்டை மாற்றுவதாக அறிவித்து ஒரு முழு மாநிலத்தையும் முடக்கியது. பின்னர் டிசம்பரில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இடையில், அயோத்தியில் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது; பொது சிவில் சட்டம் போன்ற முடிக்கப்படாத பணியும், இன்னும் பலவும் உள்ளன. அவை விரைவில் அடையப்படும்.

பொது சமூகமும் இந்திய குடிமக்களும் அதை எவ்வாறு எதிர்ப்பார்கள்? இது முக்கியமான கேள்வியாக இருக்கும், ஏனென்றால் போராட்டங்களுக்கு அவற்றிற்குரிய இடம் உண்டு; நிச்சயமாக அரசாங்கத்தை அவை திணறடித்தன. ஆனால், அவை மட்டும் போதுமானதாக இருக்காது. வீதியில் உருவாகும் அழுத்தம் ஒரு பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, ஆனால் அது அடிப்படையில் விஷயங்களை மாற்றாது. அரசாங்கம் இப்போது தனது அடியில் பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படையானது. CAA-க்கு ஆதரவாக தொண்டர்களின் பலவீனமான அணிவகுப்புகளையோ அல்லது ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் ஆதரவையோ மட்டும் கொண்டு மிகவும் அவநம்பிக்கையுடன் இருக்கிறது அரசாங்கம். ஆனால், ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட்டாலோ அல்லது மெதுவாக வந்தாலோ, அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் முன்னேறும்.

எனவே, பரந்த அளவிலான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுக் கருத்தை உருவாக்குதல், பிரச்சாரத்தை எதிர்கொள்வது, சக்திவாய்ந்த பொதுக் குரல்களின் ஆதரவைப் பெறுதல், சட்ட நடவடிக்கைகள் கூட – இவை அனைத்தும் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட வேண்டும். போராட்ட அணிவகுப்புகளின் ஆற்றல் உண்மையின் அடிப்படையிலும் தன்னிச்சையாகவும் அடையாளம் காணக்கூடிய தலைவர்கள் இல்லாமல் இருக்கிறது – எல்லோரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்னால், குடிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மக்களை ஊக்குவிக்க கடுமையாக பணியாற்றுவதோடு தொண்டர்களை வழங்குகின்றனர்.

இப்போது தலைவர்கள் தோன்ற வேண்டும், கட்டமைப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்தியா என்கிற கருத்தாக்கத்துக்காக யோசனைக்காக போராட விரும்பும் அனைவருக்கும் இது நெருக்கடி நேரமாக இருக்கும்.

ஏற்கெனவே சிவில் சமூக அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு பற்றிய பேச்சு உள்ளது, ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல், அவர்களால் சிறிய அளவிலேயே செயல்பட முடியும். அரசியல்வாதிகளின் வலிமை என்னவென்றால், அவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செய்தியை எடுத்துச் செல்ல முடியும். அரசியல்வாதிகள் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களை வெளியே வைக்க வேண்டும் என்று சிவில் சமூக ஆர்வலர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நம்பிக்கை உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயணனின் ‘முழுமையான புரட்சி’ மற்றும் உலகெங்கிலும் இதுபோன்ற பல இயக்கங்கள் அந்த கருத்தை பரப்பியுள்ளன. இந்தியாவில் அரசியல்வாதிகளை கேலி செய்வது எளிதானது, பெரும்பாலும் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். ஆனால் அவை ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும். கேரளாவில் பினராயி விஜயன் அல்லது உண்மையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்ற அரசியல்வாதிகள் இல்லாமல், பாஜகவுக்கு ஆதரவாக நின்றிருந்தால், CAA-NRC க்கு எதிரான எந்தவொரு போராட்டமும் மிகவும் பலவீனமாக இருந்திருக்கும்.

படிக்க:
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை. ஒழுங்காக பயன்படுத்தப்பட்டால், அரசியல் அமைப்புகள் ஒரு சிறந்த வளமாக இருக்கக்கூடும். ஏனென்றால் ஒருகட்டத்தில், போர் என்பது அரசியல் ரீதியாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் பங்கில், அரசியல்வாதிகள் எழுந்து நிற்க வேண்டும் – அவர்களில் பலர் இதுவரை கலவையான செய்தியை அனுப்பியுள்ளனர் அல்லது பாஜகவை எதிர்ப்பதில் தெளிவற்ற தன்மையைக் காட்டியுள்ளனர், மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்தப் பக்கத்தை ஆதரிப்பார்கள் என்று கூறப்படவில்லை.

குடிமக்கள் சக்தியுடன் இணைந்து அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் உள்ளடக்கிய நன்கு திட்டமிடப்பட்ட ஒரு திட்டத்தின் கலவையானது, தீங்கு விளைவிக்கும் CAA-NRC-ன் தாக்குதலை எதிர்ப்பதில் நிச்சயமாக ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருக்கக்கூடும். ஆனால், இது உடனடியாக எதிர்கொள்ளவிருக்கிற தேசிய மக்கள் தொகைப் பதிவை மறந்துவிடக் கூடாது.

மாசேதுங் கூறியிருப்பது போல, “புரட்சி என்பது ஒரு மாலைநேர விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது.”

இது ஒரு புரட்சி அல்ல, அது ஒரு துணிகர முயற்சியும் அல்ல. ஆனால் அது ஒரு போர், இந்திய விழுமியங்களையும், அடிப்படைக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்கான போர். தேசபக்தி கொண்ட இந்தியர் முசுலீம்களை – அல்லது வேறு யாரையும் – இரண்டாம் தர குடிமக்களாக குறைக்க விரும்பமாட்டார். எல்லா மதத்தினரும் தெருவுக்கு வந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் ஒரு ‘முஸ்லீம்’ காரணத்திற்காக போராடவில்லை; ஆனால் அவர்கள் இந்தியாவுக்காக நிற்கிறார்கள். இந்த அளவிலான அகில இந்திய உற்சாகம் நீண்டகாலமாக இல்லாத ஒன்று.

அதுவே தன்னளவில் புரட்சிகரமானது.  அந்த உள்ளொலியுடன்  இந்த நாடு புதிய ஆண்டிற்குள் நுழைய வேண்டும்.

கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர்.