Tuesday, October 26, 2021
முகப்பு செய்தி தமிழ்நாடு கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் !

கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் !

இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது.

-

கொரோனா தொற்றை காரணம் காட்டி, அரசு எந்தவித முன்தயாரிப்பும் செய்துகொள்ளாமல் ஊரடங்கை அறிவிப்பு செய்துவிட்டது. பெரும்பான்மை மக்களுக்கு முன்தயாரிப்பு செய்துகொள்ள போதிய நேரம் தரவில்லை. விளைவு பெரும்பான்மை மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி, வறுமையிலும் பசியிலும் தள்ளியுள்ளது.

இந்நிலையில் மக்களை காப்பது நமது கடமை என்ற அடிப்படையில், சட்ட மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வமுள்ள இளைஞர்களும் இணைந்து ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சென்னை மக்கள் உதவிக்குழு என்ற பெயரில் உதவிப்பணி செய்யத் தொடங்கினோம்.

குழுவில் உள்ளவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிந்து உதவிப் பணிகளை செய்யமுடியாத நிலையில் இருந்தோம். எனவே அவரவர்களுக்கு தெரிந்த இடங்களில் இருந்து வரும் உதவிகளை பெற்று, மக்களுக்கு விநியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது .

அதனடிப்படையில் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது, மருத்துவ உதவி ஏற்படுத்தி தருவது, கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் சட்ட ரீதியாக தேவைப்படும் உதவிகள் செய்வது என திட்டமிட்டுக் கொண்டோம்.

நாங்களோ மாணவர்கள், இளம் வழக்கறிஞர்கள், இளைஞர்கள். பலரும் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளவர்கள். எங்களது நட்பு வட்டத்தின் நிலைமையும் எங்களது நிலைமையாகத்தான் இருந்தது. இருப்பினும் எப்படியாவது மக்களுக்கு உதவவேண்டும் என்ற உணர்வு மட்டும் எல்லோருக்கும் இருந்தது. துணிந்து இறங்கினோம். வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புவது, வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது என தொடங்கினோம். மெல்ல மெல்ல உதவிகள் பணமாகவும், பொருளாகவும் வர ஆரம்பித்தது. குழுவில் வேலைக்கு செல்லும் ஓரிருவர் குழுவில் இணைந்ததும் நிதி வரவின் அளவும் கூடியது. அதனை துவக்கமாக வைத்து கொண்டு செயல்படத் தொடங்கினோம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, சிட்லபாக்கம், ஜே.ஜே. நகர், கொளத்தூர், எர்ணாவூர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்தும், குழு உறுப்பினர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமும் உதவி கேட்டவர்களுக்கு உதவிகள் செய்தோம்.

மாணவராக, இளைஞராக, இளம் வழக்கறிஞராக, இதுவரை இப்படிபட்ட நிவாரண வேலைகளில் ஏதும் அனுபவங்கள் இல்லாதவர்கள். கொரானா பயம் அச்சுறுத்திய பொழுதும், அதற்குரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, குழு நண்பர்கள் உதவி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

வண்ணாரபேட்டையில் கணவரை இழந்த பெண்கள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க சிரமப்பட்ட 6 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. சாலையோரத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு நண்பர்களிடம் உணவு பெற்று வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு பால், உணவு போன்ற பொருட்களை குறிப்பாக கேட்டு அறிந்து கொடுக்கப்பட்டது

படிக்க:
♦ அயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !
♦ கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

கொருக்குப்பேட்டை ஜே. ஜே நகரில் உள்ள 10 வயது குழந்தை சாப்பாடு தேவை என கேட்டதை அறிந்து உடனடியாக அங்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி உதவியபோது, அக்குழந்தையின் தாயார் காலில் விழுந்து நன்றி தெரிவித்தது மிகுந்த அதிர்ச்சியையும் , மக்கள்படும் வேதனையின் உச்சத்தையும் உணரமுடிந்தது. இதுபோல் எத்தனை பேர் உள்ளனர்? நம்மால் அவர்களுக்கு என்ன செய்யமுடியும்? என்ற கேள்வி நெஞ்சை அழுத்தியது. நமது உதவி பணி கடலில் ஒரு துளி எனவும், அதனால் நாம் இன்னும் முயற்சிகளை பெரிதாக செய்யவேண்டும் என உணர்ந்தோம்.

சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை நீரிழிவு நோயால் (Diabetics) மிகுந்த அவதிப்படுபவர். தாயாரும் தற்போது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவம் பெற்று வருகிறார். மாணவியும் தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு மருந்துகள் வாங்க நிதியுதவி அளிக்கப்பட்டது. அதேபோல் சிட்லப்பாக்கத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு ரூ.2500 நிதி அளிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீ விபத்தில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்த பெயிண்டர், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிகரை தாலுக்கா, ஜாகிர் வரகூர் கிராமத்தை சேர்ந்த தன்னுடைய பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு அங்கு உள்ள இளம் வழக்கறிஞர் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

வடசென்னை, எர்ணாவூர் பகுதியில் வாழும் தினக்கூலி, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் என மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு News 7 மூலம் உணவுப் பொருட்கள் பெற்று, முறையாக வழங்கப்பட்டது.

இவ்வாறு குழுவின் சார்பாக இதுவரை 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், பல தனிநபர்களுக்கும் உதவி பணிகளை கொண்டு சேர்த்திருக்கிறோம்.

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு நண்பரின் நண்பர் நமது வங்கி கணக்கில் செலுத்திய தொகைப் பற்றிய குறுஞ்செய்தி செல்போனில் மிளிர்கிறது. புலம்பெயர்ந்த பீகாரைச் சார்ந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு கேட்டு, ஒரு நண்பர் போனில் உதவிகேட்கிறார். இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது.
இதோ அடுத்தக்கட்ட பணிகளை துவங்கிவிட்டோம். எங்களுடன் நீங்களும் கரம் கோர்க்கலாம் வாருங்கள்.

– சென்னை மக்கள் உதவிக்குழு
தொடர்புக்கு: 99401 57731

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க