கொரோனா ஊரடங்கால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு அவர்களது வறுமை நிலையை மட்டுமே கருத்தில்கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பட்டி, நைனாகுளம், ஈசனி, மானாமதுரை, மூங்கிலூரணி, மற்றும் சில கிராமங்கள் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வலையங்குளம், குசவன்குண்டு, குதிரை குத்தி மற்றும் மதுரை நகர் உதிரி தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் மேலவாசல் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

05-04-2020, 07-04-2020, 13-04-2020, 18-04-2020 ஆகிய நாட்களில் நான்கு கட்டமாக செயற்குழு உறுபினர்கள் வி.அய்யாக்காளை, வெ.பிச்சை, உறுப்பினர்கள் பெ.ரா.பெருமாள், சிதம்பரம், ஆதித்தன் டெய்லர் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு எவ்வித பாகுபாடும் பாராமல் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரசிரியர்கள் சிலர் மனமுவந்து அளித்துவரும் நன்கொடைகள் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் அவர் குடியிருக்கும் திரு நகர் பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து கப சுரக் குடி நீர் மற்றும் உணவுப்பொருள் வினியோகம் செய்துவருகிறார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட நிர்வாகத்தில் தன்னார்வலராகப் பதிவு செய்து கொண்டதுடன் 20 பேர் கொண்ட “மதுரை மா நகர் கொரோனா உதவிக்குழு” அமைத்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

படிக்க:
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

காவல்துறையின் கெடுபிடிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காதது, விலைவாசி உயர்வு, போக்குவரத்துப் பிரச்சினை இத்தனையும் தாண்டி பாதிக்கப்பட்டவரை அணுகும் போது அங்கே இருக்கும் தேவையும் நமது உதவியும் எதிர்விகிதத்தில் காணப்படுகிறது. அத்தனை பேருக்கும் எப்படித் தருவது. அரசு என்ன செய்கிறது?

அரசு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டும் ரூ.1000/- மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை இலவசமாக வழங்கியுள்ளது. கூலி ஏழை மக்கள் நெருங்கி வாழும் சில பகுதிகளில் ரூ.200/- க்கு மற்ற மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிற அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கியுள்ளது. நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000/- மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு கஷ்டப்படுகிற அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கிவிட்டதாக திருப்தி அடைந்துகொள்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஒரு மாதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இது போதுமானது தானா என்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.

வளையங்குளம் பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குடும்ப அட்டை இல்லாமலும், நலவாரியங்களில் உறுப்பினராக இல்லாமலும் பல ஆயிரம் உள்ளுர் மக்கள், புலம் பெயர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களைப் பற்றி அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. எந்த உதவியும் இல்லாமல் பட்டினி கிடப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களைப் பற்றி நமது மைய உறுப்பினர்கள் தகவல் தெரிவிக்கும் போது அவர்கள் அரசின் எந்த உதவியும் பெறாதவர்கள் என்பதை உறுதி செய்த பின்பே உதவ முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிந்துகொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அப்படிபட்டவர்களின் பட்டியல் ஏதாவது வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. தொடக்கத்தில் அழைப்பை ஏற்றுப் பேசிய அதிகாரிகள் தற்போது லைனில் வருவது அரிதாகி வருகிறது. கொரோனாவுக்கு முந்திய அதே அரசு நிர்வாகம் தான் இப்போதும் இருந்துவருகிறது. ‘அதே மணம்; அதே குணம்!’

இவை தவிர நகர்ப் புறங்களில் கவனிப்பாரற்று சுற்றித் திரிந்தவர்கள் பிடிக்கப்பட்டு அரசு நிர்வாகத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவை தவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் நீண்ட வரிசையில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாடம் உழைத்துப் பிழைத்துவரும் கோடிக்கணக்கான மக்களின் பசிப் பிணியைப் போக்க இவை போதுமா என்றால் அரசு இது போதும் என்றுதான் சொல்கிறது. ஆனால் யாரோ சிலருக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கலாம். பெரும்பான்மை மக்களுக்கு இது போதுமானது இல்லை. யாருடைய வேண்டுகோளும் இல்லாமல் தாமாக முன்வந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற தொண்டுள்ளம் கொண்ட பலரும், பல இயக்கங்கள், நிறுவனங்களும் மனமுவந்து உதவுவதன் காரணமாகவே கொரோனா பசிப்பிணி தமிழ் நாட்டில் ஓரளவு துடைக்கப்படுகிறது. இதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசு அதற்கும் தடைவிதிக்க முயன்று தோற்றுள்ளது.

இந்தச் சூழலில் நம்முடைய இயக்கத் தோழர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து இப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு வழிகாட்டப்பட்டுள்ளனர். “அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அரசைத் தட்டிக்கேட்க நம்மோடு மக்கள் வரவேண்டும் அல்லவா?”

மானாமதுரை மூங்கிலூரணி பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :

This slideshow requires JavaScript.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
உதவிக்கு : கொடுக்க – வாங்க : 73393 26807.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க