ரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற முதல் ஆண்டில் நரேந்திரமோடி இந்தியாவிற்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளம்வயதினரின் வேறுபட்ட தலைவிதியை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன்.

பெங்களூருவில் நடந்த ஒரு பொது நிகழ்வின் மேடையில், “பாகிஸ்தான் வாழ்க, இந்தியா வாழ்க” என முழக்கமிட்டதற்காக, தேச விரோதம் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிறையில் இருக்கிறார், பதின்பருவப் பெண்ணான லியோனா.

லியோனா வாழ்வதைப் பற்றிப் பேசினாரெனில், மோடி அரசின் நிதித்துறையின் இளம் அமைச்சரான தாக்கூர் கொல்வதைப் பற்றி பேசியிருக்கிறார்.
டில்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியின் மேடையிலிருந்து பாஜக ஆதரவாளர்களைக் கொண்ட பெரும் கூட்டத்தை, “துரோகிகளைச் சுடுங்கள்” என்று முழக்கமிடத் தூண்டினார். அவர் கூறும் ”துரோகிகள்” என்பது வெறும் கருதுபொருள் அல்ல. மாறாக, ஷாகின் பாக் மற்றும் பிற இடங்களில் அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பெண்களும் ஆண்களும்தான்.

ஷாஹின் பாக் போராளிகளை மிரட்டும் பாஜக தலைவர்கள். அனுராக் தாகூர், அமித் ஷா, பர்வேஸ் வர்மா.

சில நாட்களுக்குப் பிறகு, ஜாமியா மிலியா பல்கலையில் போராட்டக்காரர்கள் மீது உண்மையில் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், போலீசு இதுவரை தாக்கூருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரை காவலில் எடுக்கவும் கோரவில்லை. அமைச்சரின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசு முனைந்ததா என டில்லி கோர்ட்டில் கேட்கப்பட்டதற்கு, அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரி “இது சரியான தருணமல்ல” என பதிலளித்துள்ளார்.
லியோனாவும் தாக்கூரும் தனியாக இல்லை.

இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு கடந்த ஆண்டை விட வேறு எந்த ஆண்டிலும், இந்தியா முழுவதும் நிறையபேர் அரசியல் காரணங்களுக்காக போலீசு காவலில் காலத்தைச் செலவிட்டது இல்லை. அதேபோல, கைது மற்றும் தடுப்புக் காவல் எனும் வாள் பலரின் தலைகளுக்கு மேல் தொங்கியதும் இல்லை. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தற்போது ஒன்பதாவது மாதமாக சிறைக் காவலில் இருக்கிறார்.

படிக்க:
♦ கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

அதே சமயத்தில் இதற்கு முன்னர், சுதந்திர இந்தியாவில் அரசுக் கட்டமைப்போடு இணைந்திருப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவதும் எப்போதும் இந்த அளவிற்கு இருந்ததில்லை. நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஆதரவாளராகவோ இருந்தால், சட்ட நீதிமன்றத்தின் முன்னால் நின்று பதிலளிக்க வேண்டியிருக்கும் என்ற கவலையின்றி, நீங்கள் ஒரு வன்முறைக்கு வழிகாட்டுதல் கொடுக்கலாம்; அதை நடைமுறைப்படுத்தவும் செய்யலாம்; மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்பலாம்; ஏழைகளை கிண்டலும் அசிங்கப்படுத்தவும் செய்யலாம்.

இந்தியாவில் உள்ள முசுலீம்களை பொருளாதாரரீதியாக புறக்கணிக்குமாறு ஆலோசனை கூறிய காரணத்துக்காக, நியூசிலாந்தில் வாழும் இந்திய பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் “அமைதிக்கான நீதிபதி” என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், கேமராவுக்கு முன்னர் நின்று கொண்டு இதையே பேசியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களது பணியில் அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்க எவ்விதக் காரணமும் இல்லை என போலீசு வலிந்து கூறுகிறது.

இன்று மக்களுக்குத் தங்களது தலைவர்களைக் கிண்டல் அல்லது விமர்சனம் செய்வதற்கான உரிமைகூட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிடையாது. அல்லது ஒரு மெல்லிய நூலிழையில்தான் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில், பிரதம மந்திரியை “கப்பு” (பெருமை பீற்றி) என குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கை மத்திய பிரதேச போலீசு பதிவு செய்துள்ளது. உத்தர பிரதேச முதலமைச்சரை நாய் என்று அழைத்த நபர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் புகைப்படக்காரர் ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்துக்காக, தீவிரவாதி என முத்திரைகுத்தி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகக் கூறி கடந்த மாதம் மிரட்டப்பட்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆலை விபத்து குறித்து தொடர்ச்சியாக சங்கடமான கேள்விகளைக் கேட்டதற்காக ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டார். இத்தகைய ‘தனிநபர்’ வழக்குகள், பிறரை பயமுறுத்தி அமைதியாக இருக்கச் செய்யும் நோக்கத்துக்கு சேவை புரிகின்றன. திருத்தம் செய்யப்பட்ட ஊபா சட்டமானது, எவ்வித விசாரணையோ அல்லது வழக்குப் பதிவோ இல்லாமலும் கூட, எந்த ஒரு தனிநபரையும் ‘தீவிரவாதி’ என தீர்மானிக்கும் அதிகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கியுள்ளது.

எவ்வித தயாரிப்பும் திட்டமும் இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் மோடியால் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரழிவு மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று என இரண்டையும் அவர் கையாண்ட விதத்திலிருந்து ஒரு நிர்வாகியாக அவரது கேடுகெட்ட தோல்வி கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் கூர்மையாக கவனத்திற்கு வந்த – பயங்கரமான வகையில் உச்சநிலையடைந்த மறைநோய்க்கூறான – “ஜனநாயகத்தின் மீதான அவரது அவமரியாதை”தான், அவர் தோற்றுவித்த பேரிடர்.
அத்தகைய அவமரியாதை கொண்ட – தான் செய்வதையெல்லாம் தாண்டி தன்னால் அதிகாரத்தில் நீடிக்கமுடியும் என்று நம்பும் – ஒரு தலைவர் மட்டுமே ஓட்டுரிமை கொண்ட கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பத்தை சீர்செய்வதற்காக ஏதேனும் முயற்சி செய்வது பற்றி கண்டுகொள்ளாமலிருக்கத் துணியமுடியும்.

ஜனநாயகத்தின் மீதான மோடியின் அவமரியாதை, ஆழமாகவும் அகலமாகவும் சென்று ஆட்சித்துறையின் அதிகாரப் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தவல்ல ஒவ்வொரு அரசு நிறுவனங்களுக்கும் விரிவடைந்துள்ளது. அவர் பிரதமராக பதவிவகித்த முதல் ஐந்தாண்டுகளில் நீதித்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு நிறுவனம், நாட்டின் பல்கலைக்கழக அமைப்பு, மத்திய கண்காணிப்புக் கமிசன், தகவலறியும் உரிமை, நாடாளுமன்றம் மற்றும் அதன் கமிட்டிகள் அனைத்திற்கும் குழிபறித்தார்.
தனது இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்ததும், இந்தியாவின் ஆட்சியமைப்பு முறையில் இருக்கும் கூட்டாட்சித் தன்மையின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளார். மேலும், மத்திய தகவல் கமிசனின் உட்கூறுகளை உருவி எடுத்துவிட்டார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதான அவரது தாக்குதலை உறுதிசெய்யும் வகையில் நீதித்துறை சுதந்திரத்திற்கு குழிபறித்துள்ளார்.

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், பாஜகவின் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலின் எதிர்வினைகளைத் தவிர்க்க மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்ற போலிப்பகட்டை ஏமாற்று ஆயுதமாக வைத்திருந்தது. மோடியின் இரண்டாவது முறை ஆட்சியின் முதலாம் ஆண்டில் முசுலீம் விரோத மனநிலை தொடர்பானவை அனைத்தையும்தான் தனது சாதனைகளாக பாஜக சுட்டிக் காட்ட முடியும்.

தங்களது மனைவிகளை முறையாக விவாகரத்து செய்யாமல் அவர்களைக் கைவிடும் முசுலீம் கணவர்களை வலிந்து குற்றவாளியாக்கியதுதான் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (அதேசமயம், இந்து கணவர்கள் இதையே செய்திருந்தால் அவர்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை). பின்னர்தான், ஆகஸ்ட் 5 அன்று அரசியல்சாசனத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஆறுமாதங்களுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது செய்தித் தொடர்புத் தடை திணிக்கப்பட்டது. இன்றுவரை அது முழுமையாக நீக்கப்படவில்லை.

அடுத்தது, பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் 1992-ம் ஆண்டு இடித்தழித்த பாபர்மசூதியிருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற பாஜகவின் நெடுநாள் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும்வகையிலான ஒரு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து உந்தித் தள்ளிப் பெற்றுள்ளது, மோடி அரசாங்கம்.
அது தொடர்பான கிரிமினல் வழக்கு நலிவுறச் செய்யப்படும் அதேவேளையில், சட்டப் பொதுஅறிவுக்கு நேர்மாறாக, ஒரு மிகக் கொடுங்குற்றத்தை செயல்முறைப்படுத்த வழிவகுத்த ஒரு சொத்துத் தகராறு, மோடியின் வற்புறுத்தலால் விரைவாக விசாரிக்கப்பட்டது.

மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ‘சாதனையான’ குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை கடந்த டிசம்பர் மாதம் கண்டது. முத்தலாக் சட்டத்திற்குப் பின்னால் சொல்லப்பட்ட காரணத்தை, வெறும் முஸ்லீம்களுக்கு மட்டும் என்று இல்லாமல் தங்களது மனைவிகளை எவ்வித முறையான விவாகரத்து நடைமுறையும் இல்லாமல் கைவிடும் எந்த ஒரு கணவனுக்குமானதாகக் கொண்டுவந்திருக்க வேண்டும்; அதைப்போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பின் சொல்லப்பட்டுள்ள நோக்கமும், அண்டை நாடுகளிலிருந்து அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முசுலீம் அல்லாதவர்கள் மட்டும் என்று இல்லாமல், பாதிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியக் குடிமகனாக முடியும் என்று இருந்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் நோக்கமோ, சமூகத்தை முனைவாக்கம் செய்ய மதத்தைக் காரணமாக பயன்படுத்துவதிலேயே இருந்தது. அடுத்ததாக அனைத்திந்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதை நோக்கியே அரசாங்கம் முனைந்திருப்பதையே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இழிவார்ந்த ‘காலவரிசை’ நிகழ்ச்சிநிரல் உறுதி செய்தது. இந்தத் திட்டத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பின் ஆழத்தை உணர்ந்ததை ஒட்டி, அமித்ஷாவும் மோடியும் குறைந்தபட்சம் இத்திட்டத்திலிருந்து தற்காலிகமாகவேனும் பின்வாங்கச் செய்யப்பட்டனர்.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களின் உறுதியை உடைக்க வகுப்புவாதக் கலவரங்களை பயன்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் அடுத்த “சாதனையாக” இருந்தது. இந்த நடைமுறை, தோல்வியைத் தழுவியபோது அல்லது கொரோனா வைரஸால் குறுக்கிடப்பட்டபோது, இந்த வன்முறையை “இசுலாமிய – மார்க்சிய சதி”-யின் விளைவாகத் தோன்றியது என்று கதையளக்கத் தொடங்கியது மோடி அரசு. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில், முன்நின்ற செயல்பாட்டாளர்கள் பலரையும் ஊபா எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

அந்த வன்முறை முழுக்க முழுக்க முஸ்லீம்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டது என மொத்த உலகிற்கும் தெரிந்திருந்தாலும், நாஜி ஜெர்மனியில் யூதர்கள் “கண்ணாடித் துகள் இரவில்” (Kristallnacht)*1 தங்களது வீட்டையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கத் தாங்களே சதி செய்ததாகக் கூறப்பட்டதைப் போல முசுலீம்களும் தங்களது வீட்டையும் வாழ்வாதாரத்தையும் அழித்துக்கொள்ள சதி செய்தார்கள் போலும்.

ஒரு பிரதமராக ஜனநாயகத்தை ஒடுக்குவது மற்றும் முசுலீம்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை வளரச் செய்ததையே, தங்களது தலைவரின் ஆறாம் ஆண்டு ஆட்சியின் பெரும் சாதனைகளாகக் காண அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கும் அதேவேளையில், மோடியின் மூன்று மிகப்பெரும் தோல்வியில் இருந்து தப்பிச் செல்ல முடியாது. மோடி அரசின் காஷ்மீர் கொள்கை, கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் கையாண்ட விதம் மற்றும் ஊரடங்கின் அனுமானிக்கத்தக்க பின்விளைவுகளின் பாதிப்பில் இருந்து ஏழைகளையும் பலவீனமானவர்களையும் பாதுகாக்க முடியாத அவரது திறனின்மை ஆகியவையே அந்த மூன்று பெரும் தோல்விகள் ஆகும்.

பாதுகாப்புக் காரணங்களின் பெயரில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4G சேவையை திருப்பியளிப்பதற்கும், அனைத்து அரசியல் தலைவர்களையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், ஜனநாயக அரசியல் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கும் விருப்பமின்றி இருக்கிறது மோடி அரசு. மோடியும் அமித்ஷாவும் கூறிக் கொள்வது போல அரசியல் சாசனத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய மாயாஜாலத் தீர்வு கிடையாது என்பதை இந்த விருப்பமின்மை காட்டுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய இந்த அணுகல்முறை தொடரும்வரை, காஷ்மீர் பிரச்சினைக்கு “மக்கள்தொகை வரைவியல்” தீர்வு குறித்த காஷ்மீர் மக்களின் அச்சம் அதிகரிக்கும்.

பெருமளவிலான கைதுகள் அல்லது இணையத் தடை குறித்து எதுவும் செய்ய மறுப்பது, வெறுமனே அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 மற்றும் சி.ஏ.ஏ. நடவடிக்கைகள் ஆகியவற்றின் சட்டரீதியான கேள்விகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் போக்குகளையும் மோடி அரசாங்கத்தின் மற்றொரு பெரும்சாதனையாக கண்டிப்பாக குறிப்பிடலாம். பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் கோகாய் பாராளுமன்றத்தின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி நினைத்து ரசிப்பதும் மோடியின் சாதனைகளில் ஒன்று.

அதிகபட்ச நோய்த்தொற்றும் குறைந்தபட்ச ஆளுமையும்
பிரதம மந்திரியின் இடைக்கால, அவசர கதியிலான, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, ஜனநாயகமற்ற செயல்பாட்டு முறைதான் அவரது செயல்பாட்டுமுறையின் அடையாளமுத்திரையாகும். இந்த நிலைமை இந்தியாவுக்கும் நரேந்திர மோடிக்கும் வருந்தத்தக்க வகையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில், நீதித்துறையே கூட பிரதமரைக் காப்பாற்றமுடியாத அளவுக்கு பெரும் தவறுகளைச் செய்ய வழிவகுத்திருக்கிறது. உண்மையில், புலம்பெயர் தொழிலாளர்களை அரசாங்கம் நடத்திய விதத்திற்கு உச்சநீதிமன்றம் முதலில் அங்கீகாரம் கொடுத்தது. அதன் பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களின் முடிவுறாத் துயரம் இந்தியா முழுவதும் பளீரென வெளித்தெரிந்ததன் விளைவாக தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் நிர்பந்திக்கப்பட்டது.

இப்பிரச்சினை துவங்கியது முதல் இதனை மோடி கையாண்டவிதம் பேரழிவுப் பாதையிலானதாகவே இருக்கிறது. இப்பிரச்சினை துவங்கியபின் மிகத் தாமதமாக மார்ச் 13 அன்று கூட அவரது அரசாங்கம் பொது சுகாதார அவசரநிலை எதுவும் இல்லை என்று கண்மூடித்தனமாக தெரிவிக்கிறது. பின் 11 நாட்கள் கழித்து, பிரதமர் தேசிய ஊரடங்கை அமல்படுத்த அவசியமிருப்பதாக உணர்ந்தார். பொதுமக்களுக்கு வெறும் 4 மணிநேர அவகாசம் கொடுத்து தேசிய ஊரடங்கை அமல்படுத்தினார். நோய் பரவலுக்கான தீர்வாக ஊரடங்கை நம்பியதற்கு மோடியை மட்டுமே குறைசொல்ல முடியாது. உலகின் பல்வேறு தலைவர்களும் இதே போலத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் மோடிதான் எவ்வித தயாரிப்பு இல்லாமல் அதனை அமல்படுத்திய ஒரே தலைவர்.

ஊரடங்குத் திட்டத்தை மார்ச் 19 அன்றே அவர் உறுதிசெய்திருந்தால், ‘மக்கள் ஊரடங்கை’ அவர் அறிவித்த மார்ச் 22-க்குள்ளான, இடைப்பட்ட நாட்கள் தொடர்விளைவுகள் குறித்துத் திட்டமிட அவருக்கு உதவியிருக்கும்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தல், பெருந்தொற்று நோயை மதவாதமாக்குதல் போன்ற அரசியல் நோக்கங்களை தீர்ப்பதில் ஊரடங்குக்கு முன்னர் இருந்த நாட்களை வீணடித்துவிட்டு, அரசு இயந்திரத்தை முரட்டுத்தனமாக பயன்படுத்துவதன் மூலம் தனது குறைந்தபட்ச ஆளுகையைக் கொண்டு இப்பிரச்சினையைக் கடந்து சென்றுவிடலாம் என மோடி அரசாங்கம் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால் பொருளாதாரம் மற்றும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல் பெருந்தொற்றைத் கட்டுப்படுத்துவதற்கும் இந்த ஊரடங்கு தவறிவிட்டது என்பதுதான் எதார்த்தம்.
இதற்கிடையே, சங்கபரிவாரத்தின் அருவெறுக்கத்தக்க முசுலீம் வெறுப்பு நடவடிக்கைகள், வளைகுடா பகுதியுடனான இந்தியாவின் ராஜ்ய உறவை – மோசமான பொருளாதார பின்விளைவுகளை நாட்டிற்கு ஏற்படுத்தியிருக்கத்தக்க வகையில் குழிபறித்தன.

மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில், அருண்ஷோரி பாஜக அரசாங்கத்தை, “மன்மோகன் சிங் மற்றும் கூடுதலாக பசு அரசாங்கம்” என்று பகடிசெய்தார். இன்று ஆளுகையை மத்தியப்படுத்தவும், பெரும் வியாபரங்களின் நலனை முன்தள்ளவும், மக்களின் ஜனநாயக உரிமையை ஏறிமிதிக்கவும் நீதித்துறையை சமாளிக்கவும் பெருந்தொற்று சூழலை மோடி அரசாங்கம் பயன்படுத்தும் விதத்தை வைத்துப் பார்க்கையில், மோடியின் ஆட்சி இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சியை ஒத்ததாக பெருமளவில் மாறத்தொடங்கிவிட்டது.

இந்திராகாந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள், “குறைந்தபட்சம் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடின” என்று சொல்வதுண்டு. ஆனால் மோடியின் இரண்டாவது முறை ஆட்சியால், அதைக்கூட நிர்வகிக்க முடியவில்லை. இத்தகைய விகாரமான ஓட்டத்தைத்தான், ஆறாண்டுகளாக ‘சித்தாந்தரீதியாக’ இயக்கப்பட்ட “ஆளுகை” ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி முதலமைச்சராகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த அனைத்து ஆண்டுகளிலும் நாம் அவரைப் பற்றி கற்றுக்கொண்டது என ஒன்று இருக்குமெனில், அது அவர் தனது தவறுகளில் இருந்து எப்போதும் படிப்பினை கற்றுக் கொள்வதில்லை என்பதுதான். தற்போதைய சூழல், அவரது ஆளுமையின் வழிபாட்டுப்போக்கின் விளைவேயாகும். இதற்கு அவரால் கொடுக்கப்படக் கூடிய ஒரே பதில், தனது மோசமான தாக்குதல்களை உறுதியாகப் பற்றிநிற்பது மட்டும்தான். முன்னர் பிரச்சினைகளைக் கடந்துபோக, அதிகாரத்தை மத்தியத்துவப்படுத்துவது, அதிகாரத்துவப்போக்கு மற்றும் பிரிவினைவாத-முனைவாக்க அரசியல் ஆகியவை அவருக்கு உதவி புரிந்தன. கோவிட்-19 பரவிக் கொண்டிருப்பதாலும், பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருப்பதாலும், இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை நாம் பார்த்திராத அளவுக்கு மிகப்பெரும் சேதம் உண்டாகும் என்பதை எதிர்வரும் ஆண்டு நிரூபிக்கும்.

***

குறிப்பு : Kristallnacht – 1938-ம் ஆண்டு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நாஜி ஜெர்மனி முழுக்க யூதர்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலை நாஜிக்களாலும் துணை இராணுவப்படையினராலும் நிகழ்த்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜி ஜெர்மனி முழுக்க யூதர்களின் கடைகள், இருப்பிடங்கள், தேவாலயங்கள் அடித்து உடைத்தும் தீயிட்டுக் கொளுத்தவும் பட்டன. வீதியெங்கும் நொறுக்கப்பட்ட கண்ணாடித்துகள்கள் நிறைந்திருந்ததால் அந்த இரவுகளை “கண்ணாடித் துகள் இரவு” என்று அழைத்தனர்.

செய்திக்கட்டுரை: சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் – நந்தன்
நன்றி : த வயர்.