வேறு வழியில்லாமல் பள்ளியிலிருந்து நின்ற அப்துல் கரீம், சைக்கிள் பழுதுபார்ப்பது போன்ற கிடைக்கிற வேலையை தன் குடும்பத்துக்காக செய்து வந்தார். இறுதியாக ஒரு சிறிய ட்ரக் மூலம் பொருட்களை இந்திய நகரங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், தன்னுடைய குடும்பத்தை வறுமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்.

வேலை, மற்றும் அதனுடன் சிறிய அளவிலான நிதி பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைக்கான முதல் படியாக இருந்தது.

இவை அனைத்தும் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீடித்த கொரோனா வைரஸ் ஊரடங்கால் காணாமல் போயின. கரீம் தனது வேலையை விட்டு வெளியேறி, வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தவிக்கிறார். மாதம் ரூ. 9,000 ஆயிரம் வருமானத்திலிருந்து சேமிக்கப்பட்ட சொற்ப பணமும் தீர்ந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி செலவுக்காக வைத்திருந்த பணமும் செலவழிக்கப்பட்டு விட்டது.

“நாங்கள் மீண்டும் திரும்பிச் சென்றதும் டெல்லியில் வேலை நிலைமை என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது” என கரீம் கவலை கொள்கிறார். “நாங்கள் பசியுடன் இருக்க முடியாது, அதனால் நான் கிடைக்கிற வேலையைச் செய்வேன்” என்கிறார் அவர்.

தொற்று நோயின் பொருளாதார அழிவின் நேரடி விளைவாக, ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும் உலகெங்கிலும் வாழும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது. இதில் கணிசமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டுக்குள் சுமார் 12 மில்லியன் இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி கூறுகிறது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 122 மில்லியன் இந்தியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களில் பணியாற்றியவர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர விற்பனையாளர்கள், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் என பலர் அடங்குவர்.

இந்தியாவின் ஏழ்மையான குடிமக்களை வறுமையிலிருந்து உயர்த்துவதாக உறுதியளித்து 2014 ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஊரடங்கிலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பிடத்தக்க அரசியல் அபாயத்தைக் கொண்டுவரலாம். சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மின்சாரம் மற்றும் பொது வீட்டுவசதி போன்ற ஏழைகளை நேரடியாக குறிவைக்கும் தனது அரசாங்கத்தின் பிரபலமான சமூக திட்டங்களின் பலத்தின் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு, ஏக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட பொருளாதார வலியின் அகலமும் ஆழமும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழிக்குக் கொண்டு செல்ல அவரது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

படிக்க:
♦ ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் ! | தி. லஜபதி ராய்
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

“பல ஆண்டுகளாக வறுமையைத் தணிப்பதற்கான இந்திய அரசாங்கம் எடுத்த பெரும்பாலான முயற்சிகள் சில மாதங்களில் நிராகரிக்கப்படலாம்” என்று பல பன்னாட்டு உதவி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் மேம்பாட்டுத் துறை ஆலோசகரான அஸ்வாஜித் சிங் கூறுகிறார்.

இந்த ஆண்டு வேலையின்மை விகிதங்கள் மேம்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட சிங், “வைரஸை விட அதிகமான மக்கள் பசியால் இறக்கக்கூடும்” என எச்சரிக்கிறார்.

குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 104 மில்லியன் இந்தியர்கள் உலக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு 3.2 டாலருக்கு கீழே வரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழக ஆய்வை சிங் சுட்டிக்காட்டுகிறார். இது வறுமையில் வாடும் மக்களின் விகிதத்தை 60% அல்லது 812 மில்லியனிலிருந்து 68% அல்லது 920 மில்லியனாக எடுத்துக் கொள்ளும் – இது பத்தாண்டுகளுக்கு முன்னர் நாட்டில் கடைசியாக காணப்பட்ட ஒரு நிலைமை என சிங் கூறுகிறார்.

உலக வங்கி அறிக்கை ஒன்று, இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மிகவும் ஏழை குடிமக்களைக் கொண்ட நாடு என்ற நிலையை இழப்பதற்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறியது. மோடியின் ஊரடங்கு அபாயங்களின் தாக்கம் அந்த ஆதாயங்களை மாற்றியமைக்கக்கூடும்.

உலக வங்கி மற்றும் இந்திய பொருளாதார கண்காணிக்கப்பகத்தின் மதிப்பீடுகள் முறையே ஏப்ரல் பிற்பகுதியிலும் மே மாத தொடக்கத்திலும் வெளியிடப்பட்டன. அப்போதிருந்து, இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, மக்கள் தங்கள் கிராமங்களை அடைய, நெரிசலான பேருந்துகள், லாரிகளிலும், நடந்தும் மிதிவண்டிகளிலோ கூட அடைய முயற்சிப்பது ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் உள்ள சமூக துறை கண்டுபிடிப்புகளுக்கான ருஸ்டாண்டி மையம், ஏப்ரல் மாதத்தில் 27 இந்திய மாநிலங்களில் சுமார் 5,800 வீடுகளை உள்ளடக்கிய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட CMIE இன் வேலையின்மை தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

கிராமப்புறங்களில் மிகக் கடுமையான பாதிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த பொருளாதார துயரங்கள் தொற்று நோய் பரவலைக் காட்டிலும் ஊரடங்கின் விளைவால் ஏற்பட்டதாகும். 80% க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வருமான இழப்பை அனுபவித்திருக்கிறார்கள். மேலும் பலர் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு மலிவான கடன், ஏழைகளுக்கு நேரடியாக பணம் பரிமாற்றம் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை எளிதில் அணுகுவதை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால் இவை சில ஆவணங்களைக் கொண்ட மக்களுக்கு உதவுகின்றன, அவை பல ஏழைகளிடம் இல்லை. மில்லியன் கணக்கான வறிய இந்தியர்கள் இப்போது நாடு முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. குவியல்களில் உள்ள அழுகும் பழங்கள் அல்லது இலைகளை மக்கள் உண்பதாக செய்திகள் கூறுகின்றன.

வைரஸ் தாக்கிய நேரத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கனவே பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து கொண்டுவந்தது. மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு, அதை ஆணி அடித்து, வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, நுகர்வை மூடி வைத்து, பொருளாதாரத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னதான நிலைக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

மே 4 முதல் இந்தியாவின் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், ஊரடங்கிலிருந்து வெளியேற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தியா இப்போது ஆசியாவின் வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆகும்.

இந்தியாவின் ஏழைகளின் மீது சுமத்திய வலி என விமர்சனத்திற்கு உள்ளான மோடி, தொற்றுநோய்களின் பொருளாதாரா இழப்பை மீளமைக்க, தனது அரசாங்கம் 265 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% செலவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் வல்லுநர்கள் கூறுகையில், அதன் ஒரு பகுதி மட்டுமே நேரடி நிதி தூண்டுதல் தரக்கூடியது என்றும் ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மொத்த சேதத்தைவிட இது சிறிய தொகை என்றும் கூறினர்.

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ரீதிகா கெரா கூறுகையில், “குறிப்பாக கவலைக்குரியது என்னவெனில் அரசாங்கத்தின் எதிர்வினைதான்”. “இந்த தொற்றுநோய் இந்தியாவில் தற்போதுள்ள மற்றும் ஏற்கனவே உள்ள உயர்ந்த ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக்கும்” என்கிறார் அவர்.

இருப்பினும், பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க சில காலம் பிடிக்கும், இந்தியாவின் தொழில்துறை மையங்களிலிருந்து தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தால், தொழில் மீண்டும் தொடங்க போராட்டத்தை சந்திக்கும்.

கடுமையான இந்திய கோடை காலம் வேறு உள்ளதால், கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கூடுதல் வலியை கொடுக்கும்.

“இங்கு எந்த தொழிற்சாலையோ அல்லது தொழில்களோ இல்லை. இங்கிருப்பது வெறும் மலைதான்” என்கிறார் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் (62 மைல்) தூரம் நடந்து வந்த சுரேந்திர ஹதியா டாமர்.
“நாங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் உயிர்வாழ முடியும், பின்னர் முயற்சி செய்து அருகிலேயே ஒரு வேலையைத் தேட வேண்டும் . என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் அவர்.

20 லட்சம் கோடி ரூபாய் என வெற்று எண்ணிக்கைகளை வாரம் இருமுறை வெவ்வேறு அமைச்சர்கள் மூலம், ஊரடங்கு பொருளாதார இழப்பை ஈடுகட்ட செலவழிக்க உள்ளதாக மோடி அரசு சொல்கிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஒற்றை ரூபாய்கூட போய் சேரவில்லை என்பதை யதார்த்தம் காட்டுகிறது. மக்களின் மீது அவலங்களை கட்டவிழ்த்துவிட்டு, கண்மூடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை தட்டி எழுப்பப் போவது யார்?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க