ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் !

லக வரைபடத்தில் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இடங்கள் மூன்று.

தென் அமெரிக்காவின் தென் கோடியிலுள்ள கேப் ஹார்ண் என்ற கொம்பு முனை, ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் என்ற நன்னம்பிக்கை முனை, இந்தியாவின் தென் முனையான கேப் காமரின் என்ற குமரிமுனை.

அங்கிருந்து மேற்காக ஒரு கிலோமீட்டர் மேற்கு கடற்கரை சாலையில் தென் மேற்கிலிருந்து வீசும் இதமான பருவக்காற்றின் ஊடே பயணித்து உண்மையான தென்முனையான கல்முனையைத் தாண்டி, கடல் மணல் சூழ்ந்த கோவளம் கிராமத்தில் மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தை கடந்து, நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் நடித்த வருடம் முழுக்க தளும்பிக் கிடக்கும் தலைக்குளத்திற்கு அருகே இலந்தையடிவிளை ஊருக்கு முன் சற்று விலகி வடக்கே ஒரு கிலோமீட்டர் பயணித்தால் மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியல் , ரெட் டீ அல்லது எரியும் பனிக்காடு நூலாசிரியர் பி.எச்.டேனியல், குமரி அனந்தன் ஆகியோரது ஊரான ஏறத்தாழ ஒன்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட அகஸ்தீஸ்வரம் கிராமத்தை அடைய முடியும்.

அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் ஊர் முழுக்க ஓலைப் புரைகள் என்ற தென்னை ஓலை கூரை வீடுகளே இருந்தன, திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் பிரதிநிதியாக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மாவின் ராம ராஜ்யத்தில் அவ்வூரில் வசித்தவர்கள் ஓட்டு வீடுகள் அமைக்க அனுமதியில்லை. அவ்வூரின் முதல் ஓட்டு வீடு 1935 ஆம் ஆண்டில் மன்னராட்சி புதைக்கப்பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் கீழச்சாலையில் கட்டப்பட்டது.

அவ்வூர் மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டது 12.11.1936 ஆம் நாளில்தான். 1933 ஆம் ஆண்டில் கோவில் நுழைவை அவ்வூர் மக்களுக்கு மறுத்த அதே சி.பி.ராமசாமி ஐயர் 1936 ஆம் ஆண்டு அனுமதித்த மனமாற்றத்திற்கு காரணம் முன்னதாக
ஈழவர், தீயர், பில்லவர்கள், நாடார்கள் ஆகியோர் மதம்மாற தீர்மானித்து கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ தழுவுவது குறித்து மாநாடு ஒன்று நடத்தியதால் என டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். (1)

படம் உதவி: திரு.அய்யாசாமி பாண்டியன், அகஸ்தீஸ்வரம். 1935 ஆம் ஆண்டின் அகஸ்தீஸ்வரம் ஊரின் முதல் ஓட்டுப்புரை.

1952 ஆம்ஆண்டு வரை அங்கு ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது. அது 24.05.1954 அன்று நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. 10.06.1959 ஆம் ஆண்டு கு. காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த போது உயர்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது.

11.08.1965 ஆம் ஆண்டு 165 பியூசி மாணவர்களோடு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்ளூர் பெரியவர்களால் நிலமும் பணமும் வழங்கப்பட்டு அரசு மானியத்துடன் தொடங்கப்பட்டது. கல்கத்தா ராமகிருஷ்ணா மிஷனுக்கும் இக்கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தி.மு.க ஆட்சியின் போது 1968 ஆம் ஆண்டில் அக்கல்லூரியில் பெண்களையும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. பிஎஸ்சி வேதியியல் , உயிரியியல் ஆகிய பிரிவுகள் தொடங்கின. பணியாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட்டது.

அகஸ்தீஸ்வரத்தில் இன்று ஞான தீபம் என்ற ஆங்கிலப் பள்ளி ஒன்று இயங்குகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி விட்டது.

விவேகானந்தா கல்லூரி முதுகலை கல்லூரியாகவும், தொழில் நுட்பக் கல்லூரியாகவும், கல்வியியல் கல்லூரியாகவும் விரிவடைந்து விட்டது.

ஊரின் தெற்கே கல்லூரிச் சாலையில் அமைந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமும் சுதந்திரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டதுதான்.

படிக்க:
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
♦ இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

சுதந்திரத்திற்கு முன் மருந்துக்கு மூன்று அரசு ஊழியர்கள் என்ற எண்ணிக்கை இன்று முற்றிலுமாக மாறி இன்று அகஸ்தீஸ்வரத்தின் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், முதல்வர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் கல்வி அதிகாரிகள் என அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கை நூறுகளைத் தொடும்.

பாம்பே இயற்கை வரலாற்று சங்க இயக்குனர் பாலச்சந்திரன், வசந்த் அன்ட் கோ வசந்த குமார், எல்லோரும் பயின்றது அரசு பள்ளிகளில்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் சாதியினரும் மட்டுமே வாழும் மாடிவீடுகள் நிறைந்த இவ்வூரில் இன்று ஒரு ஓலைப்புரை வீட்டை பார்ப்பது அரிது.

ஏறத்தாழ அகஸ்தீஸ்வரத்தைப் போன்ற கிராமங்கள்தான் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க. 2011 கணக்கெடுப்பின்படி 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 460.(2)

33 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பக்கத்து மாவட்டமான திருவனந்தபுரத்திலேயே அதே வருட கணக்கெடுப்பின்படி மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 181.

காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் 92% கல்வியைப்பெற்றது இம்மாவட்டம்.

தமிழ்நாட்டில் மிகக்குறைந்த கல்வியறிவான 74 விழுக்காட்டைப் பெற்ற தர்மபுரியை விடக் குறைவான உத்தர பிரதேசத்தின் அலஹபாத் மாவட்டமே அம்மாநிலத்திலேயே மிகையான கல்வியறிவான 72 விழுக்காட்டைப் பெற்ற மாவட்டம்.

உத்தரப்பிதேச ஷிராவதி மாவட்டத்தில் அதே கணக்கெடுப்பில் கல்வியறிவு 49 விழுக்காடு மட்டுமே. ஒரு வேளை மாடுகளுக்கு பள்ளிகள் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசம் கல்வியில் முதன்மை பெற்றிருக்கும் .

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் அகஸ்தீஸ்வரம் போன்றவையே, ஏன் தமிழகம் முழுவதுமே அது போலத்தான்!.

காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்ற மக்கள் தங்களை கோவில்களுக்கும், பள்ளிகளுக்கும் , அரசு வேலைகளுக்கும் வெளியே நிறுத்திய மன்னன் மார்த்தாண்ட வர்மாவின், பசுக்களுக்கும் பிராமணர்களுக்குமான ராமராஜ்யத்தை கனவு காண்பதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசப் பயிற்றுவிக்கப்படுவதும் மிகப்பெரிய வரலாற்று முரண்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய கூட்டத்தினர் இன்று 10 விழுக்காடு உயர்சாதி இட ஒதுக்கீட்டைப் பெற்றது அதைவிட வேடிக்கை.

இன்று குழந்தைகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவதைப் போல திருவிதாங்கூர் அரசரது ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கோவில்கள் தோறும் ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு இருமுறை பிராமணர்களுக்கு மட்டும் சத்துணவு வழங்கப்பட்டது. கோவில் இருக்கும் தெருக்களில் கூட அம்மாவட்டத்தின் மனப்பிறழ்வு கொண்ட உயர்சாதியினரால் பெரும்பான்மையான தீண்டாமை முத்திரை குத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதே காலகட்டத்தில் 02.03.1809 ஆம் நாள் பிறந்த அய்யா வைகுண்டர் அனைத்து மக்களையும் சாதி மத பேதமற்று வழிபடவும் உணவருந்தவும் உருவாக்கிய பதிகளில் ஒன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.

1869 ஆம் ஆண்டு சிறையில் இருந்த பிராமணக் கைதிகளுக்கு தீட்டு ஏற்படாமலிருக்க அவர்கள் தினமும் உணவு வேளைகளில் சிறைக்கு வெளியே சென்று சாப்பிடும் வசதி அரசால் செய்து தரப்பட்டிருந்தது.(3)

ஐ.ஏ.எஸ் என பொதுவாக அறியப்படும் குடிமை உரிமைப் பணிகளில் தேர்வானதும் டேராடூன் பயிற்சியின் ஒரு பகுதியாக பாரத் தர்ஷன் என்றவொரு சுற்றுலா அழைத்து செல்வார்கள். எந்த வட மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், எல்லாவற்றிலும் அவை தமிழகத்தையும் கேரளாவையும் விட பின் தங்கியிருப்பதைக் கண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பயிற்சிப் பணியாளர்கள் கர்வத்துடன் தலை நிமிர்ந்து கொள்வார்கள்.

‘தமிழக பேச்சாளருக்கும் மைக்குக்கும் இடையே பெரும் சண்டை ஒன்று நிகழும், தன் முன்னால் நிற்கும் ஒலிவாங்கியை ஒரு எதிரியாக நினைத்து உரக்க சத்தமிட்டு அதன் கழுத்தை உலுக்கி, திருகி, நெரித்து அதைக் கொன்று போட்டு விடப்போகிறார் என நினைக்கத் தோன்றும்’ என ‘ஊரும் சேரியும்’ என்ற அழகிய தன்வரலாற்று நூலை எழுதிய கவிஞர் சித்தலிங்கையா கூறியிருப்பார்.

இப்போது தமிழகத்தில் பொய் கதைகளை மூலதனமாக்கி, பெரியாரின் போராட்டங்களை, அதன் பயன்களை மறுக்கும், கவிஞர் சித்தலிங்கையா விவரித்ததைப் போன்ற உணர்ச்சிவச பேச்சாளர்கள் மற்றும் பொலிட்டிக்கல் மெர்சனரீஸ் அல்லது அரசியல் கூலிப்படையினர், பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா கிராமங்கள் முழுக்க பாரத் தர்ஷன் சுற்றுலா முடித்து அதன்பின் பச்சைமட்டை அரசியல் பாடம் எடுப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

நல்ல வேளை தமிழ்நாட்டில் திருவாளர்கள் யோகியோ மோடியோ முதல்வராக இருந்ததில்லை ஒருவேளை இருந்திருந்தால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படித்த புலம்பெயர் தொழிலாளர்களாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நடந்து இந்நேரம் ஹைதராபாத் அருகே வந்து கொண்டிருப்பார்கள் .

தி. லஜபதி ராய்
23.05.2020

அடிக்குறிப்புகள் :

1. பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு- தொகுதி 16 பக்கம் 515.
2. கன்னியாகுமரி மாவட்ட அறிக்கை 2016.
3. சாமுவேல் மட்டீர் – லாண்ட் ஆஃப் சாரிட்டி Land of charity 1871 பக்கம் 75 .

நன்றி : ஃபேஸ்புக்கில் Lajapathi Roy 

1 மறுமொழி

  1. அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பிறந்த நான் இந்த கட்டுரையைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசு மற்றும் தனியார் பணிகள் நிமித்தம் காரணமாக அநேக நாஞ்சில் நாட்டு தமிழர்கள் வேறு ஊர்களில் குடியேறி விட்டனர். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க