உயர்நீதிமன்றத்தில் தமிழ்

யர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டி எட்டாவது நாளாக சென்னையில் தொடர் உண்ணவிரத போராட்டத்தில் வழக்கறிஞர் பகத்சிங், அவரது தந்தை, மகன் மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற பதாககைகள் தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளன. தமிழ்நாடு முழுக்க வழக்கறிஞர்களும் ஆங்காங்கே மாணவர் அமைப்புகளும் போராடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கும் அதிகாரம் யாருக்கு என்றக் கேள்வி பிறக்கிறது.

1963 ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை அம்மாநிலத்தின் அலுவல் மொழியில் வழங்க இயலும். அவ்வாறு வழங்கும் போது ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைக்க வேண்டுமென அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 7 கூறுகிறது. அவ்வாறான உத்தரவை பெற குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இது தவிர அரசியலமைப்பு சட்ட உறுப்பு 348 ன்படி அம்மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை அம்மாநில மொழியிலேயே நடக்க அனுமதிக்கலாம்.எனவே மாநில அரசு தீர்மானித்தால் கூட இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.


படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!


பிமாரு (BIMARU) மாநிலங்கள் என்று கூறக்கூடிய பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கின் தீர்ப்புகளிலும் உத்தரவுகளிலும் இந்தி பயன்பாடு கொண்டு வரப்பட்டு பல வருடங்களாகிறது.

ஆனால் மேற்குவங்கம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அம்மாநில மக்களின் மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்த போது 1965 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் குழுவில் கருத்துரைக்காக மத்திய அரசு அனுப்பியது. முதலில் 2012 ஆம் ஆண்டிலும் பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் மாநில மொழிகளை மேற்சொன்ன நீதிமன்றங்களில் பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்துரைத்தது.

உச்சநீதிமன்ற கருத்துரை 1965 மத்திய அமைச்சரவை முடிவின் அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர அதற்கு வேறு சட்ட அடிப்படை எதுவுமில்லை.

மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும்.

ஏறு தழுவுதல் என்ற ஜல்லிகட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இராதாகிருஷ்ணன் அளித்த அத்தீர்ப்பு மே, 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது எனினும் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரும் போராட்டத்தின் விளைவாக பின்னாட்களில் மத்திய அரசால் விலங்கு வதை சட்டத்தில் செய்யப்பட்ட 2017 தமிழ்நாடு சட்ட திருத்தம் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளான போது உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அச் சட்டம் சரியானது என்று கூறிய தீர்ப்பு நம் நினைவுக்கு வரும், அச்சட்டம் உருவாக ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் காரணம் என்றால் மிகையாகாது.


படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை


அரசியலமைப்புச் சட்ட எட்டாவது பட்டியலில் அஸ்ஸாமிய, பெங்காலி, போடா, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, மைதிலி, மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, சந்தாலி, தமிழ், தெலுங்கு, உருது என 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன இதில் இந்திக்கு சிறப்பிடமளிக்க சட்டமின்றி வேறு காரணம் ஏதுமில்லை. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் வட இந்திய மொழிகளுக்கு ஈடாக சொல் வளமும், இலக்கிய வளமும், தொன்மையும் கொண்டவையே.

இந்தியா எனும் நாடு பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம் என்ற பாடத்தை சோவியத் யூனியனிடமிருந்து மைய அரசு பெறுவது அவசியம்.

சோவியத் யூனியன் சிதைந்து பல நாடுகளை உருவாக்கியதைப் போல இந்தியாவிலும் நிகழாமலிருக்க, அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்குவது அவசியம்.

இந்நிலையில் தமிழை நீதிமன்ற மொழியாக்கு என்ற முழக்கங்களுக்கு முன்னால் மத்திய அரசே! என்ற சொற்களை சேர்ப்பது அவசியம்.

மத்திய அரசே! தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!! என்ற தீவிர முழக்கம் தமிழை நேசிப்பதாகக் கூறும் மத்திய ஆட்சியாளர்கள் காதில் விழுமா எனத் தெரியவில்லை.


தி.லஜபதி ராய்
உலகனேரி
06.03.2024

disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க