கடை திறப்பதும் போலீசைக் கேள்வி கேட்பதும் கிரிமினல் குற்றமாம் ! போலீசு வழங்கும் நீதி – மரண தண்டனை !

• கொட்டடிக்கொலையில் ஈடுபட்ட அத்தனை கிரிமினல் போலீசையும் கைது செய்து சிறையில்அடை!
• துணை போன மருத்துவர், சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோரை உடன் குற்றவாளிகளாக சேர்த்து கைது செய்! பணி நீக்கம் செய்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 03. 07.2020 வெள்ளிகிழமை காலை 11 மணி,
இடம் : திருச்சி மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில்.

***

ன்பார்ந்த வழக்கறிஞர்களே, மனித உரிமை ஆர்வலர்களே,

போலீசு சட்டபூர்வ கிரிமினல் கும்பல் என்று அரைநூற்றாண்டுக்கு முன்பே அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் நரேன்முல்லா கூறினார்.

AnandNarainMulla, a justice of Allahabad High Court, had once famously observed, “I say with all sense of responsibility that there is not a single lawless group in the whole country whose record of crime is anywhere near the record of that organized units which is known as the Indian Police Force.”

அனைத்து போலீசையும் எப்படி அவ்வாறு கூறமுடியும்? என பத்திரிக்கையாளர்கள்  மேலும் கேட்டதற்கு, “ஒரு கூடை அழுகிய மீன்களில் ஒரு நல்ல மீனைத் தேடும் முட்டாளல்ல நான்” என்று பதிலளித்தார்.

காவல் கொட்டகைக் கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனிடம், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று கீழ்நிலைக் காவலர் மகாராஜன் பேசியதும் DSP, ASP வரை அங்கிருந்த அத்தனை காவல்துறையினரும் திமிராக நடந்துகொண்டதும் மேற்கூறிய நீதிபதியின் கூற்றை நிரூபிக்கிறது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இன்று வரை காவல்துறை ஜனநாயகப்படுத்தப்படாமல் காலனியகால மனநிலையிலேயே இருப்பதைத்தான் உறுதி செய்கிறது.  கடையை கால்மணிநேரம் கூடுதலாகத் திறந்த ‘குற்றத்துக்காக’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் இருவரையும் கொடூரமாகக் கொன்றுவிட்டு காவல்துறையால் இவ்வளவு திமிராக நடக்கமுடிகிறது என்றால் நமது ஜனநாயக உரிமையின் கதிஎன்ன?

சாத்தான்குளம் காவல்துறையினர் நிகழ்த்திய ஜெயராஜ் – பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலைக்கு சிபிஐ விசாரணை என தமிழக அரசு அறிவித்திருப்பது, குற்ற விசாரணையை தாமதித்து, குற்ற ஆவணங்களை அழித்து, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் தமிழக அரசின் அறிவிப்பு மோசடியானது, மக்களை ஏமாற்றுவது, அடித்துக் கொன்ற காவல்துறையினரை பாதுகாப்பதற்கானது,
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் – நீதிபதிகள் மீதான தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை, ஸ்டெர்லைட் படுகொலை என சிபிஐ எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் முறையான விசாரணையோ, குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையோ இல்லை.

குவிநச பிரிவு 174 – சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்துக் கொன்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபின், கொலை வழக்கு உடனே பதிவு செய்தாக வேண்டும்.
காவல்துறை நேரடியாக புலன் விசாரணை செய்யக் கூடிய வழக்குகளில், புகார் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 2013-ஆம் ஆண்டு LalitaKumari vs Govt.Of U.P.&Orsஎன்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய், பாப்டே ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு. “Registration of FIR is mandatory under Section 154 of the Code, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation”எனத் தீர்ப்பளித்துள்ளது.

படிக்க:
சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
♦ கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது !

ஆனால், சாத்தான்குளம் சம்பவத்தில் உரிய புகார், நேரடி சாட்சிகள், அடித்ததற்கான மருத்துவ சிகிச்சை ஆதாரங்கள் மிக வலுவாக இருக்கிறது. இதன் பிறகும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தடுப்பது யார்? கைது செய்யாமல் காப்பாற்றுவது எந்த சக்தி? என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

அமைச்சர் கடம்பூர் ராஜீ நடந்தது “லாக்-அப் டெத் அல்ல” என்று பேசுவதும், முதல்வர் பழனிச்சாமி “உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்” என்று கூறியதும் பிரச்சனையை நீதிமன்றத்தின் பக்கம் தள்ளி விடுவதாகும்.

கொலை வழக்கு பதிவு செய்வதையோ சாத்தான்குளம் போலீசாரை கைது செய்வதையோ நீதிமன்றம் தடுத்ததா? மற்ற கொலை வழக்குகளில் உடனே வழக்கு, கைது, ஒப்புதல் வாக்குமூலம், அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் என்பதே வழக்கமான சட்ட நடைமுறை.

கொலை வழக்கில் உடனடி விசாரணை மிக முக்கியமானது. காவல்துறைக்கு இது பொருந்தாதா? காவல்துறையினர் சட்டத்திற்கு மேலானவர்களா? காவல்துறையினருக்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளதா? இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பன தண்டனை அல்ல! வேலை செய்யாமலே சம்பளம் வாங்குவதற்கான ஏற்பாடு.

மேலும் இவ்வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன? முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பை மீறியுள்ளார். அர்னேஷ் குமார் வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பிரிவுகளின் கீழான வழக்குகளில் தேவையின்றி ரிமாண்ட் செய்யக் கூடாது; அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நக்கீரன் கோபால் மற்றும் ஜீவானந்தம் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் “தேவையற்ற கைது கூடாது” – பிரிவு 188-ன் கீழ் காவல்துறை வழக்கே பதியக்கூடாது என உத்தரவிட்ட பின்பும் – சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கவில்லை. கொரானா பேரிடர் காலத்தில் தேவையற்ற கைது கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர்களில் 80% பேர் காவல்துறையின் எந்தக் கைதையும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.

காவல்துறையில் கீழிருந்து மேல்மட்டம்வரை லஞ்சம்-ஊழல் மலிந்துள்ளது; கீழ்நிலைப் போலீசார்தான் வசூல் செய்து கொடுப்பவர்கள் என்பதோடு, தாங்கள் கோடி, கோடியாய் கொள்ளையடிப்பதற்கு காவல்துறையின் உதவி தேவை. வாரம் இத்தனை கேஸ் பிடித்துக்கொடுத்து தண்டம் வசூலிக்கவும், ஆயுத பூஜைக்கு பொரி வாங்கித் தருவது முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கறி வாங்கித் தருவது வரை எல்லா வேலைகளையும் செய்து தர நீதிபதிகளுக்கும் காவல் துறையின் தயவு தேவைப் படுகிறது. காவல் உயர் அதிகாரிகளும், நீதிபதிகளும், தமிழக அரசும் சாத்தான்குளம் போலீசாரைக் காப்பதற்கு இது தான் அடிப்படை. விதிவிலக்காக சில நீதித்துறை நடுவர்கள் போலீசை கேள்வி கேட்டால், அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது காவல்துறை.

குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.

கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்தி காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் கொடுப்பது அரசியல் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். அரசியல் சட்டத்தின் அனைத்து உறுப்புகளும் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்குள் நிற்பதே சரி. ஆனால் காவல்துறை மட்டும் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. காரணம், தங்களை அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கைதான்.இந்த நிலையை நீடிக்கவிட்டால் காவல் கொட்டடிக் கொலைகளில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்திலும், இந்திய அளிவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருப்பதை மாற்ற முடியாது.

அரசியல் அமைப்பு சட்ட அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், ஒன்றின் தவறை மற்றது முறைப்படுத்தும் என்பதாக பேசுகிறோம். ஆனால், காவல் துறையின் தவறை நீதித்துறையும், சிறைத்துறையும் சுகாதாரத் துறையும் மட்டுமல்ல, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் உடந்தையாக இருந்து பாதுகாக்கவே செய்கின்றனர். சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவை கேலிக்கூத்தாக்கப்பட்டு போலிசு ஆட்சிதான் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சீழ் பிடித்த இந்த நிலைக்கு அறுவை சிகிச்சைதான் அவசர தேவையாக உள்ளது.

“போலீஸ் துறையை கலைத்து விடு” என்ற கலகம்தான், அமெரிக்க போலீஸ் அதிகாரிகளை மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரும் நிலையை உருவாக்கியது. உலகமே கண்டித்த சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறை மீது உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், வேறு எந்த வழக்கிலும் நீதி கிட்டாது! கண்ணெதிரே நடந்த கொடுமையை கண்டுகொள்ளாமல் விட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது! நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி கிளை.
தொடர்புக்கு : 9444253030

1 மறுமொழி

  1. கொலைக்கு உடந்தையாக இருந்த Friends of Police ஐப் பற்றி ஒரு வரியும் இல்லையே?

Leave a Reply to அதி. அழகு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க