டந்த ஜூலை மாதத்தில் ஓரிரு நாட்களில் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தவர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டத்தை வெளியிட்டால், அவருடன் இணைந்து அரசியலில் பயணிக்கத் தயாராக இருப்பதாகப் பேட்டியளித்தார் அண்ணாமலை.

வழக்கம்போல சங்கிகளும், ரஜினிகாந்தின் விசிலடிச்சான் குஞ்சு ரசிகக் கண்மணிகளும் அண்ணாமலையை ஜாக்கி வைத்துத் தூக்கிக் கொண்டாடினர். அண்ணாமலையோ, தாம் ‘நடுநிலைவாதி’ என்றும் எந்தக் கட்சியும் சாராதவர் என்றும் கூறி வந்தார். ஆனால் மோடியை மட்டும் பிடிக்குமாம்.

அண்ணாமலையின் ‘நடுநிலையை’ அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்து சமூக வலைத்தளங்களில் புட்டுப் புட்டு வைத்தனர் முற்போக்காளர்கள். இரண்டு மூன்று நாட்கள் பரபரப்பாகச் சென்ற இந்த விவகாரம் பின்னர் அத்தோடு அடங்கியது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடமிருந்து, அரசியல் கட்சி துவங்கும் செய்தி தன் காதில் வந்து தேனாகப் பாயும் என இலவு காத்த கிளியாகக் காத்திருந்த  ‘சூப்பர் காப்’ அண்ணாமலையின் காதுகளில் “எள்ளுவய பூக்கலையே” பாடல்தான் ரீங்காரமிட்டது. அதனைத் தொடர்ந்து பாஜக-வில் இணைந்துள்ளார் அண்ணாமலை.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! அடுத்து என்ன ? | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை
♦ காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

நமது ‘நடுநிலை’ அண்ணாமலையைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம். 2013-ம் ஆண்டு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பதிவியேற்ற அண்ணாமலை, கடந்த 2019-ம் ஆண்டு வரை அங்கு பல்வேறு பகுதிகளில் போலீசு அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் போலீசு அதிகாரி பதவியிலிருந்து விலகி சொந்த ஊருக்குச் சென்று இயற்கை விவசாயம் செய்துவருவதாக பத்திரிகைகள் செய்தி தெரிவிக்கின்றன. சரி இயற்கை விவசாயம் செய்யும் ஐ.டி இளைஞர்கள் இருக்கையில் ஒரு ஐ.ஏ.எஸ். இருக்கக் கூடாதா ?

தனது பதவி விலகல் கடிதத்தில் பணியிலிருந்து விலகுவதற்கான காரணத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “கடந்த ஆண்டு கைலாஷ் மான்சரோவருக்கு நான் சென்றதுதான் எனது கண்களைத் திறந்தது. அது எனது வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விசயங்களை மறுபரிசீலனை செய்ய உதவியது.” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

பாபா திரைப்படத்தில், ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்று ’அருள்’ பெற்று வந்தது போல, அண்ணாமலையாரும் கைலாஷ் மான்சரோவருக்குச் சென்று “ஞானோதயம்” பெற்றிருக்கிறார். வந்த பின் சில மாதங்களில் பணியை உதறிவிட்டு இயற்கை விவசாயியாகி இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் தமிழக தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இயற்கை விவசாயி அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார்.

சட்டத்தைக் காக்கும் கடமையைத் தோள் மேல் ஏற்றி போலீசு அதிகாரியாக செவ்வனே பணிபுரிந்த அண்ணாமலையார், தற்போது தமிழகத்தைக் காக்க அரசியல்வாதியாக பரிணமித்துள்ளார். ரஜினி கட்சி துவங்குவார் என, பி.பி, சுகர் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு காத்திருக்கும் அவரது ரசிகக் குஞ்சுகளின் நிலைமையை உணர்ந்ததாலோ என்னவோ சட்டென முடிவெடுத்து பட்டென பாஜகவில் சேர்ந்திருக்கிறார் அண்ணாமலை.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிட அரசியல் கட்சிகள் ஊழல் மிக்கதாக இருப்பதாலும், குடும்ப அரசியல் நீடிப்பதாலும், ‘பரிசுத்தமான’ பாஜக-வைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறியிருக்கிறார். “எனது கொள்கைகள் அவர்களுடன் ஒத்துப் போவதால், அவர்கள் இயற்கையாகவே எனக்கு இயைந்தவர்களாக இருக்கின்றனர்”  என்று கூறியிருக்கிறார்.

அதாவது இயற்கையாகவே சங்கியாக வாழ்ந்துவந்த அண்ணாமலை, இப்போது அங்கீகரிக்கப்பட்ட சங்கியாக மாறியிருக்கிறார். அபின் கடத்துபவனும், கலவரம் செய்பவனும் பாஜக-வில்! முன்னாள் போலீசு அதிகாரியும் பாஜகவில்! இப்போது ஒத்துக் கொள்வீர்களா ? பாஜக உண்மையிலேயே அனைவரையும் ‘அரவணைத்துச்’ செல்லும் கட்சிதான் என்று!

நந்தன்

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்