மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானத்திற்கு தோழர்கள் மார்க்சும் எங்கெல்சும் மாபெரும் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.  தோழர் எங்கெல்ஸ் பிறந்து 200-வது ஆண்டில்  இன்று, முதலாளித்துவத்தின் அனைத்து சுரண்டல்களும், இழிவுகளும் மக்களிடையே வெகுவாக அம்பலமாகியிருக்கின்றன. ஆனாலும் இதற்கு மாற்று வேறு இல்லை என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. அத்தைகயதொரு கருத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதில் மிகவும் மும்முரமாக வேலை பார்க்கின்றது முதலாளித்துவம்.

இந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்காகவே பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அவர்களுக்கும் படியளந்து வருகிறது. இத்தகைய என்.ஜி.ஓ.க்கள், மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதரித்து அவற்றை ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராகத் திசை மாற்றி விடும் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. மக்களின் கோபம், முதலாளித்துவ சமூக அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன. பல்வேறு சீர்திருத்தங்களைக் கோருகின்றன. அவற்றில் சில பல வெற்றிகளை காணச் செய்து அவர்களை அதற்குள் திருப்தியுறச் செய்து விடுகின்றன.

நாம் இன்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதன் ஆணிவேரைத் தேடிச் சென்று  அதனைக் களைய வேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மீதான சமூக அறிவியல் பார்வையைப் பெற வேண்டியதும், அந்த அறிவியல் பார்வையிலிருந்து, இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைப்பதற்கான பணியில், முழுமையான சமூக மாற்றத்திற்கான பணியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. அதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். ரசியாவில் அத்தகையதொரு கட்சியைக் கட்டி அங்கு ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டிய தோழர் லெனின், எங்கெல்சின் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எங்கெல்ஸ் இறந்த 1895-ம் ஆண்டில் எழுதினார். அதனை இங்கே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து படியுங்கள் !

தோழமையுடன்
வினவு

0*0*0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 1

எத்தகைய அறிவுச்சுடர் விளக்கவிந்தது;
எத்தகைய அன்பு மலர் நெஞ்சு நின்றது !

1895-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883-ம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோசலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினர்.

இதுவரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான், ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கத்திற்குரிய ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஓர் அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வுபூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.

இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 1840-50-ம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோசலிஸ்டு இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், ஜார் மன்னர்களின், போலீசின், பாதிரிமார்களின் யதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்தபோதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள பகைமையைப் பார்க்கத் தவறினார்கள்.

சுதந்திரமான சமுதாயச் சக்தியாகத் தொழிலாளர்கள் செயல்புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் மேதைகள்கூட; நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரிய வைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் அமைதியையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோசலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று. அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோசலிஸ்டுகளும், பொதுவாகத் தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு சீழ்வடியும் புண் என்று கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள்.

ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, “வரலாற்றின் சக்கரத்தை” எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பயபீதிகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் வைத்தார்கள்.

பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோசலிசம் நெருங்குவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒருசில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.

ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லா வெளியீடு களையும் போலவே இந்தச் சஞ்சிகையின் நோக்கமும் ரசியத் தொழி லாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால் தான் இச்சஞ்சிகையில் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்திரித்துக் காட்ட வேண்டும்.

(தொடரும்)

நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703