சென்னை – சைதை மார்க்கெட் வியாபாரிகளிடம் ஒரு நேரடி ரிப்போர்ட் –  பாகம் 1

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, வேலையிழப்பு என பல இன்னல்களோடு இந்த தீபாவளியை சந்தித்திருக்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். ஊரடங்கால் வேலையிழப்பு மட்டுமல்லாமல், சிறு தொழில்கள், ஆட்டோ சவாரி ஆகியவற்றில் ஏற்பட்ட நலிவு ஆகியவை இந்த தீபாவளியை கலையிழந்த தீபாவளியாக்கியிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை, கலைஞர் கருணாநிதி பொன் விழா வளைவிற்குள் உள்ள மார்க்கெட் பகுதி சிறுவியாபாரிகள், தங்களின் தீபாவளி வியாபார அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்கள்

வெங்கடேசன், வயது 58 – காய்கறி வியாபாரி

கொரானாவால் 70% வியாபாரம் கெடையாது. ஜனங்க அங்கங்க காய்கறி வாங்கிக்கிறாங்க யாரும் மார்க்கெட்டுக்கு வர்றது கிடையாது. போன தீபாவளிக்கு 15,000 – 20,000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணேன். இந்தவாட்டி 2,000 – 3,000-க்கு தான் வியாபாரமாச்சு. சரக்கும் அதிகமா எடுக்குறது கெடையாது. விக்கவிக்க ஒரு மூட்டை ரெண்டு மூட்டைன்னு எடுக்குறதுதான். முன்னலாம் 5 மூட்டை 6 மூட்டைன்னு எடுத்துட்டு வருவேன். இப்போ ஒரு மூட்டை விக்கிறதுக்கே ஒரு வாரம் ஆயிடுது.  இந்த மார்க்கெட்டுல ஞாயித்துக்கிழமைன்னா நிக்க முடியாத அளவுக்கு ஜனங்க வரும். அப்போ ஒரு நாளைக்கு மூவாயிரம் நாலாயிரத்துக்கு சரக்கு விக்கும். இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க.

கடையில ஒரு ஆள வேலைக்கு வைச்சோம்னா 500 ரூவா சம்பளம் கொடுக்கனும். வியாபாரம் நல்லா போச்சுனாதான வருமானம் வரும், அதுல இருந்து கடையாளுக்கு சம்பளம் கொடுக்க முடியும். வியாபாரம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?

0o0o0

சுரேஷ், வயது 45 – தெருவோர துணிக்கடை வைத்திருப்பவர்

இந்த தீபாவளி ரொம்ப மோசம்மா. கொழந்தைகளுக்கு ஒரு நல்லதையும் வாங்கி கொடுக்கல. 20-25 வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டுவர்றோம். இந்த கொரானா வந்து எங்க பொழப்ப கெடுத்திருச்சி. வீட்டுல இருந்த நக நட்டு வித்துதான் வயித்த கழுவிகிட்டு இருந்தோம். லாக்டவுன் முடிஞ்சி இப்போ மழக்காலம் வந்திருச்சு. வாரத்துக்கு ஒருநாளு தான் கடைய போடமுடியுது. முன்னல்லாம் தீபாவளிக்கு 20,000 ரூவாக்கு சரக்கு வாங்கிப்போடுவோம்; 10,000-க்கு விக்கும். இப்போ ரெண்டாயிரம் மூவாயிரம் கெடைக்கிறதே கஷ்டமாயிருக்கு.

0o0o0

சாரதி, வயது 53 – காய்கறி வியாபாரி

வண்டி ஒன்னு கருப்பு பிளக்ஸ் போட்டு மூடியிருக்கு பாரு.. அது என்னோட கடதான். மூடி ஒன்றரை மாசமாகுது. பொழப்பில்லாம உட்காந்துட்டு இருக்கேன். கொரானா வந்ததுலருந்து எந்தப் பண்டிகையும் இல்ல. (அடகுக் கடையையும், நகைக் கடையையும் சுட்டிக்காட்டி) இவனுங்களுக்குதான் கொண்டாட்டமே! ரெண்டு மூணு வருஷம் பொறுத்துக்கூட இந்த பொருள (நகை) விக்கலாம். ஆனா தக்காளிய இன்னிக்கு வாங்கி மறுநாளு விக்கமுடியுமா? இதான் நிலம.

போன மாசமே சிறுகுறு தொழிலாளிகளுக்கு பணத்த போடுறன்னு சொன்னாங்க. இதுவரைக்கு எந்த பேங்குல கொடுத்துருக்காங்க? தெருவோர வியாபாரிகளுக்கு கவர்மெண்டு கைக்குடுத்தாதான் ஓரளவுக்கு நடுத்தர மக்கள் சமாளிக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு லோன் குடுக்குறன்னு சொல்றானுங்க பேங்குல போயி கேட்டா அப்படியொரு ஸ்கீமே இல்லன்றா. பணம் இருக்குறவனுக்கு கோடிக்கணக்குல கடன குடுக்குறான். அவன் பணத்த கட்டாம ஓடிடுறான். கடன் வாங்குற பெரிய பணக்காரனுங்கதான் ஏமாத்துறான்; நடுத்தர மக்கள் யாரும் ஏமாத்தமாட்டான். ஏமாத்துறவன எங்க புடிக்கிறாங்க. நடுத்தர மக்களா இருந்தா அதிகாரிகளுக்கு கொஞ்சம் பயப்புடுவாங்க.

கொரோனா காலத்துல குடுத்த கடன கேட்கக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுச்சி. ஆனா இங்க இன்னம்மா நடக்குது? வட்டியோட சேர்த்து மொத்தமா கொள்ளையடிக்கிறாங்க. வயித்தெரிச்சலா இருக்கு.

0o0o0

பூபால், வயது 45 – பழக்கடை வியாபாரி

போனவாட்டி தீபாவளில நல்லா வியாபாரம் ஆச்சு, இந்தவாட்டி கம்மிதான். முன்னாடிலாம் ஞாயித்துக்கிழமைல நல்ல வியாபாரமாகும். இப்போ சுத்தமா இல்ல. பண்டிகை டைம்லலா இந்த இடத்துல நிக்கவே முடியாது. இப்போ பாருங்க வெறிச்சோடி கெடக்கு. ரோட்டுல கடை வச்சிருக்குறவங்களுக்கு எல்லாம் நிவாரணம் கிடைக்கல. பெரிய கடை வச்சிருக்குறவங்களுக்குதான் நிவாரணம்லாம்.

0o0o0

ஸ்ரீதர், வயது 52 – துணிக்கடை முதலாளி

கொரோனாவால வியாபாரம் இல்ல. எங்களோட வியாபாரம்லா மிடில் கிளாஸ் – லோ கிளாஸ் மக்கள நம்பித்தான் இருக்குது. மக்களுக்கு வருமானம் இருந்தாதான துணிய எடுக்க வருவாங்க. அவங்கவங்க சாப்பாடுக்கே வழியில்ல இதுல துணியெடுக்குறதா முக்கியம்? ஜி.எஸ்.டி-ல பாதி வியாபாரம் போச்சு. கொரோனா வந்து முழுசா போச்சு. பஜாருக்கு வர ஜனங்க, வந்து பாத்துட்டு துணிய வாங்க கடைக்குள்ள வரமாட்றாங்க. ரெகுலர் கஸ்டமர் இருக்குறதுனால தான் இங்க உக்காந்துட்டு இருக்கோம். இல்லன்னா எங்களுக்கு இங்க வேலையே கிடையாது.

***


வினவு புகைப்பட செய்தியாளர்கள்

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க