விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த வி.புதுப்பாளையத்தில் மரப்பட்டறைத் தொழில் செய்து வந்த மோகன் (37) என்பவர், கடந்த 14-ம் தேதி அன்று தனது குழந்தைகளான ராஜஸ்ரீ(8), நித்யஸ்ரீ(7), சிவபாலன்(5) ஆகியோரைக் கொன்றுவிட்டு, தனது மனைவி விமலேஸ்வரியுடன் (30) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கை ஒட்டி தமக்கு ஏற்பட்ட தொழில் நசிவில் இருந்து மீளவும், குடும்பத்தைப் பராமரிக்கவும் கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில், கந்துவட்டிக்காரனின் தொடர் நெருக்குதல் மற்றும் அவமரியாதை காரணமாக இந்த கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.

தாய் தந்தையே ஆசையாக வளர்த்த தமது குழந்தைகளைக் கொல்வது என்பதை யாராலும் கனவில் கூட கற்பனை செய்துபார்க்க முடியாதது எனும்போது, தமது கைகளாலேயே தமது பிள்ளைகளைக் கொலை செய்யும் அவலநிலைக்கு மோகன் – விமலேஷ்வரி தம்பதியினரைத் தள்ளியது எது ?

படிக்க :
♦ கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !
♦ கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!

மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமின்றி  சிறு குறு தொழில் முனைவோர்  அனைவரையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

ஏற்கெனவே தொழிலுக்காக கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடனை கட்டமுடியாத சூழலில், அரசாங்கம் வட்டி கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டாலும் பல இடங்களிலும் வட்டி கேட்டு நெருக்கடி கொடுக்கும் நிலை நீடிக்கவே செய்தது. இந்நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் கடன் வாங்குவது ஒன்றுதான் ஒரே வழியாக இருந்தது.

மோகன் – விமலேஷ்வரி

மோகனும் தாம் ஏற்கெனவே வாங்கிய கடன், மற்றும் ஊடங்கு காலத்தில் குடும்பத்த் தேவைகளுக்காக வாங்கிய கடன் ஆகியவற்றை எப்படியாவது அடைத்துவிட வேண்டுமென்று முயன்றும் முழுமையாக கடனை அடைக்க முடியாத நிலையில், கந்து வட்டிக்காரனின் அவமானப்படுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சி இந்த கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.

மோகன்-விமலேஸ்வரி குடும்பத்தினரின் தற்கொலை என்பது தற்செயலானதோ தனியொரு சம்பவமோ அல்ல.. இதை வெறுமனே கந்து வட்டிக் கொடுமை என்று சுருக்கிப் பார்த்துவிடவும் முடியாது. இத்தகைய இழப்புகள் கூடுதலாகவோ, குறைவாகவோ இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடைபெற்றுவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பிருந்தே ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு என மோடி அரசு அமுல்படுத்திவரும் கார்ப்பரேட் ஆதரவு மறுகாலனியாக்க திட்டங்களால் சிறு-குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. கொரோனா கால ஊரடங்கு அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாய் நாடு முழுக்க சிறு-குறு தொழில் செய்வோர் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் ஒரு அங்கமாகத் தான் தொழில் நசிவாலும் அதன் காரணமாக மீளமுடியாத கடன் சுமையாலும் சிக்கி தற்கொலைக்கு தள்ளப்பட்ட மோகன்-விமலேஸ்வரி குடும்பத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக 68,000 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. மேலும் புதிய வேளாண் சட்டம், புதிய சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம் என நாட்டையும் இயற்கையையும் சூறையாடும் கார்ப்பரேட் லாபவெறிக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

விவசாயத்திற்கு அடுத்த படியாக பெருவாரியான மக்கள் சார்ந்துள்ள சிறு-குறு தொழில்களை திட்டமிட்டே அழிப்பது, கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அள்ளிக்கொடுப்பது என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து போராடாதவரை பெருகும் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வு எதையும் எட்ட முடியாது என்பதுதான் உண்மை.

பால்ராஜ்

2 மறுமொழிகள்

  1. உலக பாசிச கொடுங்கொன்மைகள் கைகோர்த்து கட்டவிழ்துவிட்டுல்ல அறிவிக்க படாத அவசரகாலம்((emergency corona)ஆட்சி செய்யும் திட்டமிட்ட சதி வலைபின்னல் …உறுவமே கண்டுபிடிக்கப்படஅத க்கிருமிக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு…அதனை செழுத்தியபின் மரணம்…மாற்று அதை செலுத்தாமலே பல குடும்பங்கள் தனிநபர்கள் தற்கொலை தொடர்கிறது…

Leave a Reply to S S Karthikeyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க