விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45); இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் முறையே தேவதானம், சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினர்.

இவர்களது மகள் ஆனந்தவல்லி (27). இவருக்குத் திருமணமாகி 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இவர்களது மகன் ஆதித்யா(14).

6 நபர்களிடம் லட்சக்கணக்கில் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், இந்தக் கடனை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் வந்ததால் தனது மகள், மகன் மற்றும் பேத்தியைக் கொலை செய்து விட்டு, லிங்கம் – பழனியம்மாள் தம்பதியினர் 22.05.2024 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்து இருந்தார். அப்பொழுதே லிங்கம் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது போலீசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஐந்து பேர் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.

மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51). அச்சக தொழிலாளியான இவரது மனைவி ஞானபிரகாசி (48) பட்டாசுக்கான காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியரின் மகள் ஷர்மிளா( 24) எம்.ஏ முதுகலை பட்டம் பெற்ற நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணத்திற்கு பூ வைத்துள்ளனர். மகன் ஜெயசூர்யா (23) பொறியியல் பட்டப்படிப்பு படித்து ஓசூரில் பணிபுரிந்து வருகிறார்.

கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் அதிகமான வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர்.

ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கந்து வட்டி கொடுத்தவர்கள் தகாத முறையில் திட்டியும் வேறு எந்த தொழிலாவது செய்து (விபச்சாரம் செய்தாவது) பணத்தைக் கொடுக்குமாறு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு வாரத்திற்கு முன்பு குமார் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


படிக்க: இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !


“பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் நம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் 05.06.2024 முதல் 05.07.2024 வரை கடன் வசூலிக்க வர வேண்டாம் என தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்” என்று மீனம்பட்டி கிராம பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

மீனம்பட்டி கிராமத்தில் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு பட்டாசு தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். பட்டாசு தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. பட்டாசு ஆலைகளை நான்கு மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

தங்களது வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள் உணவிற்குக் கூட வழியில்லாமலும் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு என நெருக்கடியில் உள்ளனர். அதனால், மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

“அருகில் உள்ள வீட்டில் திருமணத்திற்கு மொய் செய்வதற்கு கூட பணம் இல்லாததால், திருமணத்திற்கு செல்லாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்தோம்” என ஜெஸ்ஸி என்ற பெண் கூறுகிறார்.

“இரண்டு வேலை மட்டும் தான் சாப்பிடுகிறோம்; ஊறுகாய்க்கு கூட வழியில்லை. நான்கு மாதம் வேலை இல்லாமல் வார வட்டி ,மாதவட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லை. எங்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் குழுக்காரர்களும் கந்து வட்டிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். கேவலமாக திட்டுகிறார்கள் வீட்டை எழுதிதரச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்!” என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மக்களின் நிலை கொரோனா ஊரடங்கில் இருந்த நிலைமையை விட தற்போது மிகவும் மோசமாக உள்ளது என்பதை கள ஆய்வில் “வினவு தோழர்களால்” உணர முடிந்தது.

மகளிர் சுய உதவி குழுக்காரர்கள், கந்து வட்டிக்காரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசினால் அடுத்து அவர்களிடம் கடன் வாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான இழி நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


படிக்க: விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?


தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் சிவகாசியில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் சிவகாசியில்தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுப்பணிகளில் 60 சதவிகிதம் இங்கு நடைபெறுகிறது. சிவகாசியில் உள்ள 90 சதவிகித மக்கள் இந்த தொழில்களைச் சார்ந்து தான் உள்ளனர். இங்கு இதைத் தவிர மற்ற வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால், இன்று இந்தத் தொழில்கள் நலிவடைந்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகள் தவிர்க்க முடியாமல் இருக்கின்றன. ஆனால், வருமானம் மிகவும் குறைவு. இதுதான் இங்குள்ள மக்களின் இன்றைய நிலை.

இதனால், இயல்பாகவே மக்கள் கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதனைக் கட்ட முடியாமல் நெருக்கடிக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து, தரமான கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் மக்கள் யாரும் கடன் வாங்கப் போவதில்லை. ஏனென்றால், இதுதான் மக்களின் அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. இதை மக்களுக்கு அரசு செய்ய வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இலாப வெறி பிடித்த முன்னணியான பட்டாசு ஆலைகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரிகள், சிறு குறு பட்டாசு ஆலைகளை முடக்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு கடனை கட்ட முடியாமல் தற்கொலையை நோக்கி மக்களைத் தள்ளப்படுகின்றனர்.

இது போன்று தொடரும் தற்கொலைகளில் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த கிரிமினல்தனத்தை அதிகார வர்க்கம் பாதுகாக்கிறது. இதற்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடுவதன் மூலமாகத்தான் கந்து வட்டி கும்பலை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்ட முடியும்.


வினவு களச்செய்தியாளர்,
மதுரை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க