சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை பயங்கர வெடிவிபத்து – 30 வீடுகள் சேதம்!

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் உற்பத்தியை அதிகப்படுத்த கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. இது தொடர்ச்சியாக விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி எனும் கிராமத்தில் கந்தசாமி என்பவரின் திருமுருகன் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்துடன் வேலை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி காலை 6.50 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தானது 4 மணி நேரத்திற்கும் மேலாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. அதனால் அந்நேரத்தில் அருகில் யாரும் செல்ல முடியவில்லை எனவும் தெரிகிறது.

இந்த பயங்கர வெடி விபத்தால் அதை சுற்றியுள்ள 30 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் அவ்வீட்டில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்ததாகவும் குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவித்தனர்.

படிக்க : உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?

இந்த தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருவதாக தெரிந்த நிலையில் உரிமையாளர் கந்தசாமி தலைமறைவாகியுள்ளார். (மாவட்ட அளவில் வழங்கப்படும் டி.ஆர்.ஓ. லைசென்ஸ் தவிர மற்ற இரண்டும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பெசோ அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. டி.ஆர்.ஓ., உரிமத்திற்கு 25 கிலோ, சென்னை உரிமத்திற்கு 200 கிலோ, இதற்கும் மேல் வரையரையின்றி உற்பத்தி செய்வற்கான உரிமம் நாக்பூர் அலுவலகம் மூலம் கொடுக்கப்படுகின்றன).

தொழிற்சாலையின் மேலாளரான சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவ்வூர் மக்களை கேட்ட பொழுது விதிகளை மீறி இரவும் பகலாக இந்த ஆலை இயங்கி வந்ததாகவும் பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்த ஆலை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் போராட்டம் செய்துள்ளனர். ஆனால், அதற்கு பட்டாசு தொழிற்சாலையை ஆட்சியர் அலுவலகத்திலா வைக்க முடியும் என்ற கேள்வியுடன் தொழிற்சாலையில் தொடக்க ஆட்சியர் மற்றும் அரசு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளதையும் ஆட்சியரிடம் தெரிவித்த நிலையில் அதற்கும் செவி சாய்க்கவில்லை என்பது தெரியவந்தது. இதைப்பற்றி ஆட்சியர் வெளியிட்ட ஆடியோவில் வெடிவிபத்து ஏற்பட்டபோது பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் உயிர் சேதம் இல்லை என்றும் தகவல் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்த வடமாநிலத்தவர்கள் எங்கு எப்படி உள்ளார்கள் என்றும் அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கும் பதில் தெரியவில்லை….

இரவு பகலாக வேலை நடந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றபோது அங்கு யாரும் இல்லை என்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது..

இது மாதிரி விபத்துகள் ஏற்படும்போது விதிமுறைகள் பற்றி பேசி வருகிறோம். ஆனால், அனைத்து இடங்களிலும் அரசின் துணையோடுதான் இந்த விதிமுறைகள் மீறப்படுகிறது..

அப்படி விதிமுறைகள் மீறப்படும் இடங்களில் நடக்கும் விபத்துகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை முறையாக விசாரித்து நடவடிக்கைக்கு போவதற்கு பதிலாக இந்த பிரச்சினையே வெளியில் தெரியவிடாமல் மறைக்கவே முயற்சிக்கின்றனர்..

தொடர்ந்து பட்டாசு அலைகளில் வெடி விபத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் பட்டாசு  வெடிவிபத்தால் ஒரே ஆலையில் 12 பெண்கள், ஒரு ஆண் உள்பட மொத்தம் 13 பேர் பலியானார்கள். அதேபோல், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் முக்கியமானதாக பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது ஒரு நடவடிக்கையாகும். ஆனால், அதை எந்த தொழில்ச்சாளையும் முறையாக கடைபிடிக்கபடுவதில்லை. காரணம் அதற்கான செலவு அதிகமாக இருப்பதால் அதை தவிர்த்து விட்டு அதிகாரிகளை சரிகட்டி கம்பெனியை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் உற்பத்தியை அதிகப்படுத்த கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. இது தொடர்ச்சியாக விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

விபத்துகள் நடக்கும்போது பேசிவிட்டு கலந்து செல்லும் போக்கு மிகவும் ஆபத்தானது தொடர்ச்சியாக நடந்துவரும் விபத்துகளுக்கு அரசு சிறப்பு கவனம் கொடுத்து பட்டாசு உற்பத்தியில் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விபத்துகளை தவிர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

சித்தப்பள்ளியில் பாதிக்கப்பட்டு வீடுகள் மற்றும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையாக முறையான இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

நற்சோணை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க