ரூரில் தையல் தொழில் செய்து வரும் நாகராஜ் என்பவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடம் ரூபாய் 20,000 வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய கடன் தொகையைவிட பல மடங்கு பணம் ரூபாய் 3,10,000 வட்டியாக செலுத்தியபோதும் கடன் அப்படியே இருப்பதாகக் கூறி நாகராஜை மிரட்டி வருகிறது கந்துவட்டி கும்பல். இவர் மட்டுமின்றி கரூரில் கந்துவட்டி கும்பலால் பலரும் மிரட்டி அச்சுறுத்தப்படுவதாகவும் இக்கும்பலுக்கு போலீசும் உடந்தையாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

அதேபோல, கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி, சென்னை வேப்பேரி போலீசுத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சூளைமேடு பகுதியை சார்ந்த பாய் வியாபாரிகள் 10 பேர், திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை மீட்டு விசாரித்ததில் சூளைமேடு பகுதியில் தொடர்ந்து அரங்கேறும் கந்துவட்டி கொடுமை அம்பலமானது.

படிக்க :
♦ நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
♦ இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற கந்துவட்டிக்காரனிடம், சூளைமேடு பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். பணம் வாங்கியவர்கள் அசல் பணத்தை திருப்பித் தரும்போது “வேண்டாம்” என்று மறுத்து விட்டு வட்டிப் பணத்தை கட்டச் சொல்வது, கடன் வாங்கியவர்களை வியாபாரத்திற்கு போகும்போது வழியில் நிறுத்தி மிரட்டுவது, கத்தியால் குத்துவது, ஆட்களை அனுப்பி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது என சண்முகம் தொடர்ந்து பல அட்டூழியங்களைச் செய்து வருவதால் கடன் வாங்கியவர்கள் தினமும் உயிர் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக ஒருநாள், சேகர் என்பவரைக் கடத்தி இரவு வரை அடித்து மிரட்டி குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பி வைத்துள்ளான் அந்த பணவெறி பிடித்த மிருகம். சேகரின் தந்தை 10 வருடத்திற்கு முன்பு சண்முகத்திடம் ரூபாய் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து ரூபாய் 19.6 லட்சம் திருப்பி தரவேண்டும் என்று சண்முகம் கூறியுள்ளான். சேகரின் தந்தை தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் வட்டிகட்ட முடியாமல் அதனை நிறுத்திவிட்டார்.

எனவே அவரது மகனைக் கடத்தி நாள் முழுவதும் துன்பறுத்தி, அரிவாளால் மண்டையில் வெட்டி, இரும்பு கம்பிகளால் தாக்கி, சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்து ரூபாய் 2 லட்சம் பணம் தந்த பிறகு சேகரை அனுப்பி வைத்துள்ளான். தற்போது பத்துக்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சேகர் மருத்துவமனையில் உள்ளார்.

இதுகுறித்து புகார் எடுக்க போலீசுத்துறை மறுத்ததும் சேகர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் தெரியவந்துள்ளது. மேலும், நீதிகேட்டு வந்த உறவினரை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், முதலமைச்சர் செல்லும் பிரதான சாலை என்று கூறி அவர்களைக் கைது செய்துள்ளது போலீசு.

இதேபோல, கடந்த ஜூன் மாதமும் கடன் வாங்கியவரின் வீட்டையே கந்துவட்டிக்காரன் அபகரித்த இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சுரேஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கந்துவட்டி சிகாமணி என்பவனிடம் தன் வீட்டு பத்திரத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 22 லட்சம் பணத்தை கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் தன் வயிற்றுப் பிழைப்பிற்கே வழி தேடிக் கொள்ள முடியாத அந்தோணி சுரேஷால் வட்டியைக் கட்ட முடியவில்லை.

மொத்தமாக ரூபாய் 38 லட்சம் கேட்ட சிகாமணி 20 பேருடன் அந்தோணியின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அடித்து வெளியே துரத்தி துணிமணி பாத்திரங்களை வெளியில் வீசிவிட்டு வீட்டை அபகரித்துள்ளான். இது குறித்து புகாரளிக்க போலீசாரிடம் போனால் அவர்கள் புகாரை எடுக்கவில்லை.

வீட்டை விற்று கடனை தருவதாக சுரேஷ் சொன்னபோது, ஏதோ தானே உழைத்து கட்டிய வீடுபோல் சிகாமணியும் அதற்கு சம்மதிக்காமல் அடவாடித்தனம் செய்துள்ளான். ஊரடங்கு காலத்தில், தன் சொந்த உழைப்பால் கட்டிய வீட்டை இழந்துவிட்டு மனைவி மக்களோடு செய்வதறியாது நடுத்தெருவில் நின்றார் அந்தோணி சுரேஷ்.

இப்படி கந்துவட்டிக் கொடுமையால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தற்கொலைகள் நடப்பதும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இதேபோல சென்ற மே மாதமும் ஊரடங்கால் தொழில் முடங்கி சரவணன் என்ற நகை பழுது பார்க்கும் தொழிலாளி, நகை பாலிஷ் போடும் ஆசிட்டையே பாலில் கலந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது நமக்கு நினைவிருக்கும். ஊரடங்கு காலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை சொல்லும் அரசுக்கும் ஊடகங்களுக்கும் வறுமையால் செத்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கண்டுகொள்ள நேரமில்லை. கொரோனா மக்களை கார்ப்பரேட் மருத்துவமனைகளிடம் துரத்தியதென்றால், அதற்கான பணத்தேவையும் பசியும் அவர்களை கந்து வட்டிக்காரர்களிடம் துரத்துகிறது.

கார்ப்பரேட்டுக்கு கோடிக்கணக்கில் கடனை அள்ளித் தந்துவிட்டு ஹேர்கட் (haircut) செய்து கொள்ளும் வங்கிகளோ, உழைக்கும் மக்கள் வங்கிக்கு வந்தால் அவர்களிடம் ஆயிரம் ஆவணங்களைக் கேட்கின்றது. ஏற்கனவே வேலை இழப்பு, விவசாய நசிவு, ஊரடங்கால் பட்டினி, பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி – ஆகியவற்றால் நசிந்துபோன மக்கள் இன்னும் வேகமாக கந்துவட்டி கும்பல்களை நோக்கித் துரத்தப்படுகின்றனர்.

2017-ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரு குழந்தைகளுடனும் மனைவியுடனும் துடிதுடிக்கத் தீயில் கருகி இறந்தது இசக்கிமுத்துவின் குடும்பம். அந்தக் கொடூர சம்பவத்துக்குப் பிறகாவது கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க இந்த அரசு ஏதேனும் சிறு நடவடிக்கை எடுத்ததா? அல்லது நீதிமன்றங்கள்தான் அதைக் கண்டுகொண்டதா? அதன்பிறகு, நாளுக்கு நாள் கந்துவட்டி மரணங்கள் பெருகிவருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை.

தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டே கந்துவட்டி தடுப்பு சட்டம் வந்துவிட்டது. “தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கக் கூடாது; அசையும் சொத்தையோ; அசையா சொத்தையோ அபகரிக்கக் கூடாது; இதனை மீறினால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை ரூபாய் 30 ஆயிரம் அபராதம்” என இந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், இச்சட்டத்தை கழிவறைக் காகிதமாகக் கூட இக்கும்பல்கள் மதிப்பதில்லை. மிகப் பெரும்பன்மையான போலீசு நிலையங்கள் இவர்கள் மீது வழக்குகளைக் கூடப் பதிவு செய்வதில்லை.

மேலும், சட்டத்தை அமுலாக்கும் அதிகாரம் கொண்ட உள்ளூர் அதிகாரிகள், போலீசுத்துறையுடனும் உள்ளூர் அரசியல்வாதிகளுடனும் இக்கும்பல்கள் நெருக்கமாக உள்ளன. வட்டிக்கு வாங்கியவர்களை அடிப்பது, உதைப்பது, கடத்திக் கொண்டுபோய் மிரட்டுவது, வீட்டுக்கு தனது அடியாட்களை அனுப்பி அவர்களை அவமானப்படுத்துவது, தற்கொலைக்குத் தூண்டும் வகையில் மானபங்கப்படுத்துவது – இவை அனைத்தும் இந்த அரசமைப்பின் குறிப்பாக போலீசின் துணையில்லாமல் நடைபெற சத்தியமே இல்லை.

படிக்க :
♦ கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
♦ மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

மக்களைக் கந்துவட்டிக் கும்பல்களை நோக்கித் துரத்தும் இந்த தோல்வியடைந்த அரசு கட்டமைப்புதான், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் கந்துவட்டிக் கும்பல்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருந்து சேவை செய்கிறது.

கந்துவட்டிக் கும்பலோடு இணைந்து மக்களை வட்டியின் பெயரால் கொள்ளையிட்டு மிரட்டி சம்பாதிக்கும் போலீசுத் துறையினரையும், அதற்குத் துணைபோகும் பிற அதிகாரிகளையும் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் அமைதிகாக்கும் நீதித்துறையையும், கந்து வட்டிக் கும்பலாக இருக்கும் பெரும்பான்மை அரசியல் கட்சியினரையும் உள்ளடக்கியதுதான் இந்த அரசுக் கட்டமைப்பு.

இந்த அரசுக் கட்டமைப்பு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானதாக இல்லை என்பதையும் இது ஒரு போலி ஜனநாயகம் என்பதையும் இது காட்டுகிறது.

கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து மீள வேண்டுமெனில், கையில் மண்ணெண்ணெய் கேனை எடுப்பது தீர்வல்ல. கந்து வட்டிக் கும்பலையும் அதனுடன் இணைந்த அதிகாரவர்க்கத்தையும் அம்பலப்படுத்த உழைக்கும் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதே அதற்கான முதல்படி.


துலிபா
செய்தி ஆதாரம் : Dinakaran, The Great India News, சன் செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க