மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க இருக்கிற நிலையில், “பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
65 வயதான ஈஸ்வர் சந்த் சர்மா, உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் 8-ம் தேதி விசத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவசாயம் பொய்த்துப் போனதில் கடும் கடன் சுமையில் இருந்த அவர், தன்னுடைய சாவுக்கு அரசே காரணம் என கடிதம் எழுதியிருக்கிறார். “ஐந்தாண்டுகளில் பாஜக அரசு விவசாயிகளை அழித்துவிட்டது. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள், இல்லையென்றால் அவர்கள் உங்கள் எல்லோரையும் டீ விற்க வைத்துவிடுவார்கள்” என தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
படிக்க:
♦ துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்
மேலும் அந்தக் கடிதத்தில், ஒரு இடைத்தரகர் மூலம் ரூ. 5 லட்சம் வங்கிக் கடன் பெற்றதாகவும் தற்போது அவர் தன்னை மிரட்டுவதாகவும் எழுதியுள்ளார். பூர்த்தி செய்யப்படாத காசோலை ஒன்றை அந்த நபரிடம் கொடுத்ததாகவும், கடனை வங்கிக்கு திரும்பச் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் அந்த நபர் காசோலையைக் காட்டி, விளைப்பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை சுருட்டப் பார்ப்பதாகவும் சர்மா தனது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சர்மாவின் தற்கொலையையும் சேர்த்தால், கடந்த இரண்டாண்டுகளில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 17 உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
‘ஜெய் கிசான்’ என முழங்கி ஆட்சியைப் பிடித்த மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக வாக்குறுதி அளித்தார். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை ஆட்சியமைந்தவுடன் அமலாக்குவதாக அறைகூவல் விடுத்தார். அதையெல்லாம் செய்தாரா?
மோடிக்கும் அவர் சார்ந்த இந்துத்துவ கும்பலுக்கும் மாட்டை பாதுகாப்பதும், பெருநிறுவனங்களுக்கு காவல் காப்பதுமே முழு நேர பணியாக இருந்தது. இந்த கும்பலின் வெற்று பேச்சுக்களை நம்பி சர்மா போன்ற விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே தொடர்ந்து நடக்கிறது.
அனிதா
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா