மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை!
இன்னும் எத்தனை இசக்கிமுத்துவைத்தான் இந்த தேசம் பார்ப்பது!
30 ஜனவரி 2020 இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் அலையையும் இரண்டாம் அலையையும் கையாள்வதில் தோற்றுப்போய், உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவைக் கொண்டு சென்று சாதனை படைத்தது மோடி அரசு.
ஒரு பக்கம் கண்ணுக்குத் தெரியாத வைரஸினால் நோய் பாதிப்பு, மறுபக்கம் இந்தப் பெருந்தொற்று காலத்திலும் கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்து கொண்டு இருக்கும் அரசு என மக்கள் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
படிக்க :
♦ விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?
♦ சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாகக் கூறி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று ஊரடங்கு. 2020 மார்ச் மாதம் 24 தேதி மோடி திடிரென்று முழு ஊரடங்கை அறிவித்தார். “திடீர் அறிவிப்புகள்” மோடி அரசுக்கு புதிது இல்லை என்றாலும் அந்த அறிவிப்பினால் எப்பொழுதும் போல சாதரண உழைக்கும் மக்களின் நிலை தான் மிகவும் மோசமடைந்தது. லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், இருக்க இடம் இல்லாமல், சோறு தண்ணீர் இன்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப நேர்ந்தது.
இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் ஊரடங்கை அறிவித்துள்ளது. அறிவித்து இரண்டு நாட்களே ஆன நிலையில் தொழில் நசிந்து, வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் 3 குழந்தைகளுடன், தம்பதி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
மே 11 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, ஆர்.கே.தெருவை சேர்ந்தவர் சரவணன் (37). இவர் உசிலம்பட்டி நகைக்கடைத் தெருவில் நகை பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை (30), மகள்கள் மாகலட்சமி (10), அபிராமி (7), மகன் அமுதன் (5). கடந்த சில ஆண்டுகளாகவே இவரது தொழில் நலிவடைந்து வந்துள்ளது. போனா கொரோனா ஊரடங்கு இவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனால் கடன் வாங்கி தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். குடும்பச் செலவிற்கே பணம் இல்லாத நிலையில் மீண்டும் அறிவித்த ஊரடங்கு இவருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கடனை அடைக்க முடியவில்லை, குடும்பத்தை நடத்த வழியிலாததால், மே 11 அதிகாலையில் மனைவி ஸ்ரீநிதி பூங்கோதையை பால் வாங்கி வரச் சொல்லி, அதில் நகைகளுக்கு பாலீஸ் செய்யும் ஆசிட்டை கலந்து தன் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, அவர்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நேற்று நீண்ட நேரமாகியும் சரவணன் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்த போது 5 பேரும் இறந்து கிடந்துள்ளனர்.
மேலும், சரவணன் வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அக்கடிதத்தில், “என் சாவுக்கு நான் வாங்கிய கடனே காரணம். என் மனைவி குழந்தைகளின் சாவுக்கு நானே காரணம்” என்றும் எழுதியிருந்தது.
சென்ற ஊரடங்குக்கு முன்பே மோடி அரசால் அமுல்படுத்தப்பட்ட, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற திட்டங்களால் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியது. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கடன் தான் வாங்க வேண்டும் என்று நிலையை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கோ மொத்தமாகவே அவர்களின் தொழிலை சவக்குழியை நோக்கித் தள்ளியது.
சென்ற ஊரடங்குக்கு முன்பே “விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்ததை இந்த தேசம் பார்த்தது போல, இனி சிறுகுறு வணிகர்களின் தற்கொலையையும் பார்க்கும்” என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அக்டோபர் 23-ம் தேதி தன் பிஞ்சு குழந்தயைத் தன் கையாலேயே கொளுத்திவிட்டு, தானும் கொளுத்திக் கொண்ட இசக்கி முத்துவை நமக்கு நினைவிருக்கும். அவர் தன் தொழில் திவாலாகி வாங்கிய கடனைக் கட்ட திருப்பூரில் பனியன் வேலைக்குச் சென்றார். அப்படியும் மீள முடியாத நிலை ஏற்படவே இந்த முடிவை எடுத்தார். இது குறித்து அவரின் தந்தை கூறுகையில் “என் மகன் குடும்பத்தோட தற்கொலை செஞ்சதுக்குக் காரணமாக இருந்தவங்க ஒரு அரசியல் பிரமுகரும் ஓய்வுபெற்ற போலீசு அதிகாரியும் தான்” என்று கூறுகிறார்.
விழுப்புரம் அருகே அருண் என்பவர் கந்துவட்டிக் கடனை அடைக்க நம்பர் லாட்டரியில் ஈடுபட்டு மேலும் கடனாளியாகி இவர் மனைவி, குழந்தைகள் என குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர். இந்த நம்பர் லாட்டரிச் சீட்டு ஆளுங்கட்சியினர், போலீசின் ஆசியோடுதான் விற்பனை நடந்து வருகிறது என்பதும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எதைச் சொல்கிறது. சிறுகுறு தொழில்கள் நசிந்து, வாழ்க்கை நடத்த முடியாமல் ஒருவர் திருப்பூருக்கு வேலைக்குச் செல்கிறார். இன்னொருவர் லாட்டரி வாங்குகிறார். இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அவர்கள் தொழிலை அழித்த இந்த அரசின் கார்ப்பரேட் கொள்கைகளானப் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்கைகளே.
மோடி அரசினால் விவசாயிகளும் தொழில் முனைவோரும் மட்டுமல்ல, கல்வியிலும் நீட் போன்ற தேர்வினால் எத்தனையோ மாணவர்கள் தங்களையும் தங்கள் மருத்துவக் கனவையும் பலி கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ நெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி ?
இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையுமின்றி, புதிய வேளாண் சட்டம், புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம் என அடுத்தடுத்து இந்த நாட்டையே கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு பலியாக்கி கொண்டு இருக்கிறது மோடி அரசு. மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் தடுப்பூசியை அரசுடைமை ஆக்காமல் கார்ப்பரேட்டுகள் கொள்ளை இலாபமடிக்க திறந்து விட்டிருப்பது, இதற்கு எடுப்பான உதாரணம். இத்தகைய மக்கள் விரோத காவி-கார்ப்பரேட் பாசிச அரசை வீழ்த்தும் வரை இது போன்ற தற்கொலைக்களுக்கு முடிவில்லை.
மதி