சென்னை டாக்ஸ் யூ ட்யூபர்கள் கைதாகக் காரணமான மூவருடன் உறவுகொள்வது தொடர்பாக பேட்டி கொடுத்த பெண்ணின் நேர்காணலை பிஹைண்ட் வுட்ஸ் யூ ட்யூப் சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டி சுவாரசியமான ஒன்று. ஒரு சிறுகதை அல்லது நாவலில் வரும் பேட்டிபோல மிகுந்த புனைவுத்தன்மை கொண்டது.

முதலாவதாக, பிஹைண்ட் வுட்ஸில் அந்தப் பெண்ணை பேட்டி எடுக்கும் நபரின் அணுகுமுறை மிகவும் மோசமானது. தன்னை ஒரு காவல் துறை அதிகாரி அல்லது சினிமாவில் வரும் ரங்கராஜ் பாண்டே போன்ற எதிர்தரப்பு வக்கீலாக கற்பனை செய்துகொண்டு பேட்டி எடுக்கிறார். அந்தப் பெண்ணை மிக மோசமாக சித்தரிக்கும் நோக்கம் மட்டுமே அவரிடம் வெளிப்படுகிறது.

ஒரு இதழியலாளனாக நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும் பேட்டி காண்பவரின் அடிப்படை கண்ணியத்தை மதிக்க வேண்டும். யூ ட்யூப் சீரழிவுக் கலாச்சாரத்தின் மற்றொரு அம்சம்தான் ஏதோ சமூகப்பொறுப்புடன் கேள்வி கேட்பதுபோன்ற இந்த பேட்டியும்.

இரண்டாவதாக, அந்தப்பெண் மிகுந்த குழப்பத்துடன் பேசுகிறார். இது ஒரு வேடிக்கை என்ற அளவில் கடந்து போய்விடும் என்று நினைத்த விஷயம் வைரலானதும் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் காவல்துறைக்கு போகிறார். அவர் கொடுத்த ஒரு பேட்டிக்கு எதிராக அவரே புகார் செய்கிறார். ஒரு அபத்த நாடகத்தின் காட்சி இது. ஆனால் அந்தப் பெண் மோசமான நோக்கங்கள் உடையவராக தெரியவில்லை. கவன ஈர்ப்பிற்காக எதையாவது பேசுகிற , செய்கிற தலைமுறையின் பிரதிநிதி அவர். ஒரு வெற்று கேளிக்கை அல்லது எதிர் மனநிலை. இந்த மனநிலையின் விக்டிம் அவர்.

 

(பிஹைண்ட் உட்ஸ் நேர்காணல் வீடியோ)

மூன்றாவதாக, அந்தபெண் தனது செயல் குறித்து அளிக்கும் விளக்கங்கள். சென்னை டாக்ஸ்-சிற்காக எடுத்த ப்ராங் வீடியோவை பல சேனல்களுக்கும் அவர்கள் கொடுத்ததுதான் பிரச்சினை என அவர் திரும்பத் திரும்ப கூறுகிறார். அதில் எந்த அர்த்தமும் இல்லை. 1500 ரூபாய் ஊதியமாக சென்னை டாக்ஸால் தனக்கு கொடுக்கப்பட்டு ஒரு ஸ்க்ரிப்டட் வீடியோவாகத்தான் தான் பேசியதாக குறிப்பிடுகிறார். அது உண்மை எனில் மக்களின் இயல்பான வெளிப்பாடுகளை காட்டுவதாகச் சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் என்பது புலனாகிறது.

அது தனக்கு அளிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் என்று சொல்லும் அந்தப்பெண் தான் பலராலும் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாகவும் அதை வெளிப்படுத்தவே இப்படி பேசினேன் என ஒரு கட்டத்தில் அழுகிறார். அந்த அழுகை மனதை தொடுவதாக இருக்கிறது. ஆனால் இதில் எது ஸ்க்ரிப்டட் எது உண்மை என்ற குழப்பமும் உண்டாகிறது.
அந்தபெண் தன்னைப்பற்றி கூறும் தகவல்கள் சுவாரசியமானவை. தனக்கு யாருமில்லை என்று கூறும் அவர் அந்த வீடியோவில் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் தன் பெற்றோரைப்பற்றி மோசமாக எழுதப்பட்டதாலேயே புகார் கொடுத்ததாக கூறுகிறார்.

மேலும் தான் ஒரு ஆர்டிஸ்ட் என்றும், ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் மெஹந்தி போடுவதில் தான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் இப்படி பல்வேறு திறன்களைக்கொண்ட தனது பெயர் இதனால் கெட்டுவிட்டதாகக் கூறுகிறார். உண்மையில் இது வருந்தத்தக்க ஒன்று.

‘1500 ரூபாய்க்காகவா இப்படி பேசினீர்கள் ?’ என செய்தியாளர் கேட்கும்போது ‘ ஆமாம் நான் 33 ஏழைக்குழந்தைகளை வளர்க்கிறேன். அவர்களுக்கு பிஸ்கட் வாங்கவாவது அந்தப்பணம் பயன்படுமே” என்கிறார். நான் மிகவும் ஜெர்க் ஆன இடம் இதுதான். இது ஒரு பிரமாதமான சினிமா ஸ்க்ரிப்டுக்கான இடம்.

அந்தப்பேட்டியில் அந்தப்பெண் ” ஒரு பெண் இப்படிப்பேசினாள் என்பதற்காகத்தானே இப்படி தாக்குகிறீர்கள்..இதே ஒரு ஆண் பேசியிருந்தால் கண்டுக்க மாட்டீங்க’ என்ற ரீதியில் ஒரு பெண்ணிய கார்டை எடுக்கிறார். பாலியல் விக்டிம், ஏழைக் குழந்தைகளிடமிருந்து ஸ்க்ரிப்ட் இப்போது பெண்ணிய ஸ்க்ரிப்ட்டாக நகர்கிறது.
இதில் மற்றுமொரு ஹைலைட் “நான் ஐந்து கம்பெனிங்களோட அசோசியெஷன்ல இருக்கேன்…யாருக்காச்சும் வேலை வேணும்னா சொல்லுங்க வாங்கித் தரேன்”. உண்மையிலேயே செம கேரக்டர். சந்தேகமே இல்லை.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சென்னை டாக்ஸில் அந்தப்பெண் பேசிய விஷயங்கள் அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் சகஜமாக உரையாடிக் கொள்ளும் பாலியல் குறித்த அதீத விருப்பங்களும் கதைகளும்தான். ஒரு அலைபேசியில் அந்தப் பெண் பேசிய விஷயங்களை அன்றாடம் பல்லாயிரம் காணொளிகள் வாயிலாக ஒரு சமூகமே கண்டு வாயரிஸத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் திடீரென எங்கிருந்தோ மர்மஸ்தானத்தில் கலாச்சார அதிர்ச்சி வெடித்துக்கொள்ளும். கையில் கிடைக்கும் யாரையாவது போட்டு அடுத்து துவைத்தால்தான் அது அடங்கும்.

அந்தப்பெண் பேசிய விஷயங்கள் எந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும் என்று தெரியவில்லை. அதே சமயம் இதை ஒரு கலாச்சார புரட்சியாக கருதி யாரும் புல்லரிக்க வேண்டாம். மனித உடல்களும் காமமும் அந்தரங்கமும் கேளிக்கைப்பொருளாகும் ஒரு காலத்தின் இன்னொரு நீட்சிதான் இதுபோன்ற வெறும் கவன ஈர்ப்பிற்கான உரையாடல். அந்தப்பெண் மூவருடன் உறவுகொள்வேன் என்று சொல்லும்போது அதைக் கேட்பவர்கள் சில நொடிகள் அதை தாங்கள் கண்ட பல நூறு போர்னோ காட்சிகளோடு மனத்திரையில் விரித்து ஆர்கஸம் அடைவார்கள். அதுதான் இதில் இருக்கும் பிஸினஸ்.

பிரச்சினை, ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பவர்கள்போல மக்களின் இன்னோஸன்ஸை சுரண்டுகிறார்கள் என்பதுதான். ஒருவர் வேடிக்கையாக சொல்லும் ஒரு கமெண்ட் கூட எடிட்டிங்கில் விபரீதமான அர்த்தத்தைக் கொடுக்கும். வைரல் கண்டெண்ட் மூலம் கவனம் ஈர்க்கும் , காசு பார்க்கும் வெறி யூ ட்யூபர்களை எந்த எல்லைக்கும் போகவைக்கிறது. இது ஊடகம் சார்ந்த மாபெரும் சீரழிவு. இந்த சீரழிவு பாலியல் விஷயங்களில் மட்டுமல்ல, மோசனான அரசியல், சாதி, மத பேச்சுகள் என சமூக வலைத்தளங்களில் விரவிக்கிடக்கிறது.

கோவை 360 என்ற யூ ட்யூப் சேனலில் பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் போகிற வருகிறவர்களையெல்லாம் ” நான் உன்னை லவ் பண்ணுகிறேன்’ என்றோ ” நீ என்னை ஏன் சைட் அடித்தாய்?” என்றோ ப்ராங்கிங் என்ற பெயரில் பிராண்டிக்கொண்டிருக்கும். பொதுவாக செருப்பாலடிக்கத்தோன்றும் பல அந்தரங்க அத்துமீறல்களை ஜாலி என்ற பெயரில் யூ ட்யூபர்கள் சரமாரியாக செய்துகொண்டிருக்கிறர்கள்.

கவன ஈர்ப்பிற்காக இன்ஸ்டாக்ராமில், டிக் டாக்கில் எந்த எல்லைக்கும் செல்வதுபோன்ற ஒரு மனநிலைதான் ப்ராங்க் வீடியோவில் இஷ்டத்திற்கும் பேசுவது. பத்து நிமிட புகழுக்காகவும் சில நூறு லைக்குகளுக்காகவும் மனிதர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள், தங்கள் சுய கெளரவத்தையும் கண்ணியத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.

நாம் எல்லோருமே டிக் டாக் இலக்கியா, ஜி.பி முத்து போன்றவர்களின் வெவ்வேறு வடிவங்களாகிக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் இதெல்லாம் இன்னும் கற்பனை செய்ய முடியாத, விபரீத எல்லைகளை நோக்கியே செல்லும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பைத்தியம். உலகமயமாதலுக்குப் பிந்தையை ஒரு உதிரிக் கலாச்சாரத்தின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்

disclaimer