PP Letter headபத்திரிகைச் செய்தி

30.05.2021

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரமாக்கு ! முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

தமிழகத்தில் 48 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. மேலும் பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் மருத்துவர், செவிலியர் தவிர மற்ற அனைவரையும் தனியார் மனிதவள முகமைகள் (Man Power Agency) மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆளெடுப்பு செய்யப்படுகிறது.

அதாவது மேனேஜர், சூப்ரவைசர், எலக்ட்ரிசியன், ப்ளம்பர், குக் அசிஸ்டென்ட், டோஃபி அசிஸ்டென்ட், தோட்ட வேலையாள், தச்சர், செக்யூரிட்டி, தூய்மை பணியாளர் என பல பணியாளர்கள் ஆளெடுக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனமும், அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் ஸ்மித் என்ற தனியார் நிறுவனமும் இந்த பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

இதற்கு முன்னர் இந்தப் பணியாளர்கள் பத்மாவதி ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் வேலைசெய்தனர். இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்தத் பணியாளர்களாகவே இவர்கள் வேலை செய்துவருகின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ. 18000-க்கும் அதிகமான தொகையை அந்த தனியார் முகமைகளுக்கு அரசு கொடுத்து வருகிறது. ஆனால் பணியாளர்களுக்கோ,  ரூபாய் 5000 முதல் 6000 வரைதான் ஒப்பந்த கம்பெனியால் வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் கொள்ளைக்காக குறைவான ஆட்களை நியமித்து அதிக வேலைகளை வாங்கி கொள்ளை அடிக்கின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு மிகை நேர கூலி, விடுமுறை சம்பளம் போன்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து பத்மாவதி மேன் பவர் ஏஜென்சியானது கிரிஸ்டல் ஏஜென்சிக்கு மாற்றிக்கொடுத்தது. அதே போல் 2017-ம் ஆண்டு கிரிஸ்டல் என்ற மேன் பவர் ஏஜென்சி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய பணியாளர்களை ஸ்மித் என்ற ஏஜென்சிக்கு கைமாற்றி கொடுத்தது. இந்த ஏஜென்சிகள் தங்களுக்குள் சுழற்சி முறையில் இவ்வாறு மாற்றி ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றனர். தொழிலாளர்கள் மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களாக எப்போதும் நிரந்தரமாக இருக்கிறார்கள்.

மாதிரி படம்

தொழிலாளர்களை நிரந்தரமாக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை இந்த நிறுவனங்களும் அரசும் செய்கின்றன. இவ்வாறு தமிழகத்தில் 45,000 பேர் பணியாற்றுகின்றனர். ஸ்மித் என்ற நிறுவனம் தனது ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் வைக்க கூடாது என்று கையெழுத்து வாங்கிகொண்டுதான் வேலைக்கே எடுக்கிறது. பல ஆண்டுகளாக இவர்களுக்கு சம்பள உயர்வு என்பதே இல்லை.

கொரானா வந்த பிறகு இவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சுகாதாரத்தைப் பேணி பாதுகாத்து மருத்துவ மனைகளை பராமரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் நோய் தொற்றும் இடமாக இருந்தநிலையிலிருந்து சற்று தூய்மையாக இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் இவர்களின் கடும் உழைப்பு உள்ளது. இவர்களுக்கு பல அரசு மருத்துவமனைகளில் கவச உடைகள் கொடுக்கப்படுவதில்லை. இவர்கள் முன்களப்பணியாளர்களாக அரசால் அறிவிக்கப்படவும் இல்லை.

சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு முன்களப்பணியாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இந்தப் பணியாளர்கள், ஊழியர்கள், காவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தங்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து மருத்துவ காப்பீடு, கொரானா தொற்று ஏற்பட்டு இறந்தால் இழப்பீடு போன்ற சலுகைகளை தங்களுக்கும் தரவேண்டும் என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இந்த பணியாளர்கள், ஊழியர்கள் சமீப காலமாக போராடிவருகின்றனர்.

இவர்களுடைய போராட்டம் ஊடகங்களாலும் ஆளும்கட்சிகளாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இந்த பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மட்டும் அல்ல, நாம் அனைவரும் போராடுவதே நமது சமூகக் கடமை. ஆகவே கீழ்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனே நிறைவேற்றித் தரும்படி மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .

தமிழக அரசே !
♠ அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்திடு! அவர்களை பணிநிரந்தரம் செய்!
♠ அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு மருத்துவ காப்பீடு வழங்கு!
♠ கொரானா கால ஊக்கத்தொகை வழங்கு!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க