அமேசன் தொலைக்காட்சித் தொடர் ஃபேமிலி மேன் 2 பற்றிய விமர்சனம்.

சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்ததுதான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு ஃபேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம்தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும், காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

படிக்க :
♦ ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்
♦ ஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் !! || கலையரசன்

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called “புலி ஆதரவாளர்கள்”, அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப்படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். “புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்ற கணக்காக பொரிந்து தள்ளிவிட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே, காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்துதான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

உண்மையில் ஃபேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து “குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்” படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்துவிட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம்தான்.

ஏற்கனவே, செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால், ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் ஃபேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப்படம்.

உண்மையில், வடஇந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் ஃபேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு “காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்” என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல்தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும், அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக, சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் ஃபேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.

கவனிக்கவும்: “தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை” என்று தமிழினவாதிகள் (வலதுசாரிகள்) மட்டும்தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள் !

இதை “ஆரிய – திராவிட முரண்பாடு” என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் “சிங்கள – தமிழ் முரண்பாடு” அல்லது “ஹிந்தி – தமிழ் முரண்பாடு” என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை ஃபேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வடஇந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போதுதான் மக்கள் நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். “இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். ஃபேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

ஃபேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே “பழைய பஞ்சாங்கம்” தானாம் ! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப்படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித்தான், வடஇந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது !

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே, வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வடஇந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வடஇந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் “தொப்புள்கொடி உறவு பாசம்” கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு “போட்டுக்” கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் ஃபேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு, புலனாய்வுத் துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்வமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம்தான், லண்டனில் இயங்கும் நாடு கடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த ஃபேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு “தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்…” வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு ஃபேமிலி மேன் சொல்லும் பதில் என்ன?

“நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் ! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம் !”

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம் :

  • இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால், உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி !
  • லண்டனில் மறைந்து வாழும் “புலிகள்”(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் “உப தலைவர்” தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில், தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

படிக்க :
♦ பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை !


கலையரசன்
முகநூலில் : Kalai marx
disclaimer