ராம ஜென்ம பூமி என்னும் பெயரில் நாடெங்கும் கலவரத்தை நடத்தி ஆட்சியைப் பிடித்துள்ள சங்க பரிவாரக் கும்பல், தற்போது ராம ஜென்ம பூமியின் பெயரில் பெரும் நில மோசடிகளையும், ஊழலையும் செய்துவருகிறது.இது குறித்த ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. கடந்த வாரம் சுமார் 16 கோடி ஊழல் குறித்த செய்தி வந்த நிலையில், இந்த வாரம் 2 கோடி ஊழல் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 13-ம் தேதி அன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன் பாண்டே அயோத்தியில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பேசுகையில், ராமர் கோவிலுக்காக அயோத்தில் நிலம் வாங்கியதில் மோசடி நடந்துள்ளது. 2 கோடிக்கு நில விற்பனை பதிவு செய்யப்பட்ட அன்றே அதை மீண்டும் 18.5 கோடிக்கு விற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

படிக்க :
♦ நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !
♦ அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய்

அயோத்தியில், ராம ஜென்மபூமி என்று இந்து மதவெறியர்களால் அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் இருக்கும் நிலத்தை பூஜாரி ஹாரிஷ் என்பவரிடமிருந்து மார்ச் 18-ஆம் தேதி சுல்தான் அன்சாரி மற்றும் ரவி மோகன் ஆகியோர் 2 கோடிக்கு வாங்கியுள்ளனர். அதே நிலத்தை சில நிமிடங்களுக்கு பிறகு ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் ரூ.18.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே எந்த நிலத்தின் மதிப்பும் சில நொடிகளில் இவ்வளவு அதிகமாக மாறியதில்லை. இதை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஜ விசாரித்து ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார் பவன் பாண்டே.

“இது பொய் குற்றச்சாட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பே செய்த ஒப்பந்த விலையில் இருந்துதான் நிலத்தின் சொந்தக்காரர்கள் மார்ச் 20 அன்று விற்று பத்திரத்தை பதிவு செய்தனர். அதன் பிறகு நாங்கள் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம்” என்று தன் குற்றத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் செயலரும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவருமான சம்பத் ராய்.

இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திருடனுக்கு தேள் கொட்டினால் கமுக்கமாக இருந்து விடுவது போல, கமுக்கமாக இருந்தது.

இந்த வாரத்தில், அடுத்த நில மோசடி அம்பலமாகியுள்ளது. 30 லட்சத்துக்கு வாங்கிய நிலத்தை ரூ.2.5 கோடிக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யா, மருமகன் தீப் நாராயண்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவிருக்கும் இடத்திற்கு மிகவும் அருகில் தசரதா மஹால் கோயில் மடம் உள்ளது. இந்த மடத்தின் 890 சதுர மீட்டர் நிலத்தை, மடத்தின் தலைவர் மஹந்த் தேவேந்திர பிரசாத் ஆச்சார்யாவிடமிருந்து, ரூ.30 லட்சத்திற்கு பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகன் தீப் நாராயண் வாங்கியுள்ளார். அதன் பிறகு தீப் நாராயண் ரூ.2.5 கோடிக்கு இதை ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு விற்றுள்ளார்.

நாங்கள் விற்பனை செய்த நிலம் நஜுல் நிலம். இது ராமர் கோயிலுக்கு போகிறது என்பதால் 30 லட்சமே இலாபமானது என கருதி விற்றோம். ஆனால், அதை தீப் நாராயண் ரூ.2.5 கோடிக்கு அறக்கட்டளைக்கு விற்றது எங்களுக்கு தெரியாது என்றார் மடத்தின் தலைவர் மஹந்த் தேவேந்திர பிரசாத்.

நஜூம் நிலம் என்பது 1857-ம் ஆண்டு மீரட்டில் நடந்த சிப்பாய் கலகத்திற்கு பிறகு தோல்வி அடைந்த சிற்றரசுகளால் கைவிடப்பட்ட நிலங்களை ஆங்கிலேய அரசு 1861-ல் நஜுல் நிலம் என்றும் இதற்கான ஒரு அரசு துறையையும் உருவாக்கியது.
இந்த நஜூல் நிலங்களை பலருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது நஜுல் துறை. ஆனால், அந்த நிலங்களை யாராலும் விற்க முடியாது. அரசு துறையால் மட்டுமே விற்க முடியும். பல நஜூல் நில மோசடி புகார்கள் சிக்கி வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய மோசடியிலும் தற்போது ராம ஜென்மபூமி அறக்கட்டளை சேர்ந்திருக்கிறது.

எனவே, நிலத்தை வாங்குவதிலும் விற்பதிலும் நடந்த ஊழல் முறைகேடு ஒருபுறமும், அரசு நிலத்தை விற்ற முறைகேடு இன்னொருபுறமும் அரங்கேறியுள்ளது.

சங்க பரிவார கும்பலால் அபகரிக்கப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில், ராமர் கோயிலின் கட்டுமான வேலைகளை ராம ஜென்மபூமி எனும் அறக்கட்டளை தான் செய்து வருகிறது. அந்த அறக்கட்டளையின் பெயரில்  ராமர் கோயில் அமைய உள்ள இடத்தை சுற்றி இருக்கும் மக்களின் நிலங்களை வாங்குவதில் இத்தகைய இடைத்தரகர்களை வைத்து ஊழலை நிகழ்த்துகிறது இந்தக் கும்பல்.

படிக்க :
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
♦ அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !

பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட நிலத்தை அபகரித்தலில் துவங்கி, கலவரம் நடத்துதல், மக்களின் சொத்துக்களையும் அரசின் நிலங்களையும் ஊழல் முறைகேடுகள் மூலம் அபகரித்து மோசடி செய்வது வரை, அரசு மற்றும் நீதிமன்றத்தின் உதவியுடன் செவ்வனே செய்து ஆதாயம் அடைந்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி காவி கும்பல்.


சந்துரு
செய்தி ஆதாரம் : BBC Tamil, Hindu Tamil