இந்துக்களுக்காகவும் இந்து மதத்தை காப்பதற்காகவும் முக்கியமாக ராமர் கோயில் கட்டுவதற்கென்றே இந்தியாவில் ரத்த ஆறு ஓடவிட்ட சங்க பரிவாரத்தினர், தங்களுடைய மதத்துக்கும் கடவுளுக்கும் நேர்மையாக இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினால், இல்லவே இல்லை என்கிற பதில்தான் வரும். கோவிட் பெருந்தொற்று காலத்தில் கும்பமேளா நடத்தி ஆயிரக்கணக்கான ‘இந்துக்கள்’ ‘ராம பக்தர்கள்’ மரணிக்கக் காரணமாக இருந்ததும் இதே சங்க பரிவார்த்தினர்தான். ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிலம் வாங்கியதில் ஊழல் செய்து கையும் களவுமாக சிக்கியதும் இதே சங்க பரிவாரக் கும்பல்தான்.
ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் விஷ்வ இந்து பரிசத்தின் முக்கியத் ‘தலை’களுள் ஒருவரான சம்பத் ராய், ரூ.2 கோடிக்கு விற்கப்பட்ட நிலத்தை 10 நிமிட இடைவெளியில் ரூ.18.5 கோடிக்கு வாங்கி ஊழல் செய்ததாக உத்தரப்பிரதேச மாநில எதிர்கட்சிகள் அம்பலப்படுத்தின.
படிக்க :
♦ அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
இதுவரை இந்த விவகாரத்தில் ராமர் கோயில் அறக்கட்டளையினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அதே ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் சம்பத் ராய் மற்றும் அவருடைய உறவினர்கள், உ.பி. மாநிலம் பிஜ்னோரில் கௌசாலா எனப்படும் பசு பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வினித் நரேன் என்ற பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் இந்த நில அபகரிப்பை அம்பலப்படுத்திய நிலையில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.
சம்பத் ராயின் சகோதரர் சஞ்சய் பன்சால் அளித்த புகாரின் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது குறித்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது, பிஜ்னோர் போலீசார் தங்களை குற்றமற்றவர்கள் என ‘சான்றிதழ்’ அளித்துவிட்டதாகவும், ஆனால் ஃபேஸ்புக்கில் சிலர் இந்தக் குற்றச்சாட்டை சொல்வதாகவும் சஞ்சய் பன்சால் தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் மீது ஒன்றல்ல, இரண்டல்ல 18 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு. மோசடி, சட்டவிரோத உள்நுழைதல், பகைமையை வளர்த்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பத் ராய், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பிஜ்னோரில் உள்ள தனது சகோதரர்களின் நில அபகரிப்பை எளிதாக்கியதாக பத்திரிகையாளர் வினீத் நரேன் தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார். அல்கா லஹோட்டி என்பவருக்குச் சொந்தமான 20,000 ஏக்கர் பசு பாதுகாப்பு கொட்டகை நிலத்தை அபகரித்ததாக நரேன் குற்றம் சாட்டியிருந்தார்.
நரேன் பதிவின் படி, அல்கா தனது நிலத்திலிருந்து “ஆக்கிரமிப்பாளர்களை” அகற்ற சில காலமாக முயற்சித்து வந்ததும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் உதவி கோரியதும் தெரிகிறது. ‘லவுட் க்ரைஸிஸ்’ என்ற யூடியூப் நிகழ்ச்சியிலும் நில அபகரிப்பு குறித்து நரேன் பேசியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒட்டுமொத்தமாக மறைக்க பத்திரிகையாளர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் ‘கதை’ கட்டியுள்ளார் சஞ்சய் பன்சால். மேலும், இதுகுறித்து பிஜ்னோரின் தலைமை காவலர் தாமாக முன்வந்து, “வி.எச்.பி-யின் மூத்த தலைவரும் ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினருமான சம்பத் ராய் மற்றும் அவருடைய உறவினர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை, முகாந்திரம் அற்றவை” என சான்றிதழ் அளித்துவிட்டு, ”நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து வருகிறோம்” என்கிறார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டப் பகலில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது இந்த காவிக் கும்பல். தனது சொந்த நிலத்தில் பசுக்களை பாதுகாக்க கொட்டகை அமைத்த பெண்ணிடம் நிலத்தை அபகரித்து இதுதான் பசு பாதுகாப்புப் போர்வையின் பின்னுள்ள உண்மை முகம் என இந்த கும்பல் காட்டியுள்ளது. மதத்தின் பெயரால் ரத்த ஆறு ஓடவேண்டும்; அதைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதைத்தான் சங்க பரிவாரக் கும்பல் கடந்த காலங்களில் அயோத்தி, குஜராத், உத்தரப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது.
இராமர் கோவில் நிலத்திலேயே மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பது முதல், தற்போது அப்பாவிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பது வரை, சங்க பரிவாரக் கும்பலின் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தக் கும்பல் ஏமாற்றியிருப்பது முழுக்க முழுக்க இந்துக்களின் பணத்தையும் நிலத்தையும்தான். ஆகவே சங்க பரிவாரத்தின் ஆர்.எஸ்.எஸ். முதல் பாஜக வரை அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்துக்களுக்கும் இந்துக்களின் நல்வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கான சான்று இது !
அனிதா
நன்றி : The Wire