தோழர் அம்பிகாபதி

ருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தற்போது பிரிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் உள்ள பெருந்தோட்ட கிராமத்தில் பிறந்தவர் தோழர் அம்பிகாபதி. இவர் விவசாயத்தை பின்னணியாக கொண்ட நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் சிறு வயதில் இருந்தே சுயமரியாதை, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வு கொண்டவர். திராவிட இயக்க தோழர்களை வரவழைத்து கிராமத்தில் இலக்கியக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி மக்கள் மத்தியில் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்.

இளம் வயதில் தி.மு..வில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். 1983-ல் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில்தான் அவருக்கு மார்க்சியலெனினியமாவோ சிந்தனை கொண்ட நக்சல்பாரி இயக்கத் தோழர்களுடன் தொடர்பு கிடைத்தது. புதிய கலாச்சாரம் இதழ்களை படித்து மார்க்சியலெனினியமாவோ சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பிறகு சீர்காழி பகுதியில் புதிய கலாச்சாரம் இதழை விற்பனை செய்வது, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சீர்காழி பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பைக் கட்டி, பகுதி உழைக்கும் மக்களிடம் மார்க்சியலெனினிய அரசியலை பிரச்சாரம் செய்தார். பிறகு தமிழக அளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு துவங்கப்பட்டபோது நாகை மாவட்ட அமைப்பாளராக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து மக்களை அணி திரட்டினார்.

விவசாயிகளை பாதிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களை அணி திரட்டி போராடி வந்தார். அதில் ஒரு முக்கியமான போராட்டம்தான் சீர்காழியில் நடைபெற்ற இறால் பண்ணை அழிப்பு போராட்டம். இந்த பேராட்டத்தை ஒடுக்குவதற்கு, இறால் பண்ணை முதலாளிகளால் பகிரங்கமாய் தோழர் அம்பிகாபதிக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தேவாரம் தலைமையிலான போலீசு படையின் பல்வேறு நெருக்கடிகள் வந்த போதும் அதையெல்லாம் எதிர்த்து உறுதியாக போராடியவர்தான் தோழர் அம்பிகாபதி. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தார்.

அதேபோல, கருவறை நுழைவுப் போராட்டம், வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், தில்லை நடராஜர் கோவிலில் தமிழில் பாடும் உரிமைக்கான போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம்… இப்படி அமைப்பு முன்னெடுத்த அனைத்து போராட்டங்களிலும் ஒரு முன்னணி தோழராக தனது மரணம் வரை செயல்பட்டு வந்தார். பல்வேறு போராட்டங்களில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.

மரணமடைந்தபோது தோழர் அம்பிகாபதிக்கு வயது 69. ஆனாலும் ஒரு இளைஞரை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். 27.06.21 அன்று தனது வீட்டில் உள்ள மாமரத்தில் ஏறி கீழே விழுந்து அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் அன்று மாலை 6.30 மணிக்கே தோழர் மரணமடைந்தார்.

28.06.2021 அன்று கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊர்ப் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், 20-க்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் அம்பிகாபதி தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியலெனினிய சித்தாந்தத்தில் சரியான திசை வழியில் உறுதியாக ஊன்றி நின்றார். 1980-களில் அமைப்பில் ஓடுகாலிகள் ஏற்படுத்திய பிளவு குழப்பத்தின் போதும் சரி, சமீபத்தில் 2020-ல் சீர்குலைவுவாதிகள் ஏற்படுத்திய பிளவு மற்றும் சதியின்போதும் சரி, அவர்களுக்கு எதிராக கறாராக போராடி மாலெமா சிந்தைனையை உயர்த்தி பிடித்து அமைப்பின் பக்கம் நின்று அமைப்பை பாதுகாத்தார்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர்கள், ஜனநாயக சக்திகள, மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் அவருடைய எளிமையான வாழ்க்கை, அவர் தாம் ஏற்றுக் கொண்ட மார்க்சியலெனினிய அரசியலை அனைவரும் ஏற்கும் வகையில் பிறருக்கு தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைப்பது பற்றியும், அவரது கடினமான உழைப்பு பற்றியும் பேசினார்கள்.

‘புரட்சிதான் தீர்வு, மார்க்சியலெனினிய சித்தாந்தம்தான் சரியானது, இறுதியானது என்பதை கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதற்கு மார்க்சியலெனினிய சித்தாந்தத்தைப் பற்றி எங்களுக்கு அறிமுகப்படுத்தி கற்றுக் கொடுத்தவர் தோழர் அம்பிகாபதி’ என்று பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் பேசினர். பல பேர் நான் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் செயல்பட்டாலும் மக்களை பாதிக்கின்ற சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் தோழர் அமபிகாபதி என்று கூறினர். தங்களைப் போல பல பேரை உருவாக்கியவர் அவர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவருமே “தோழர் அம்பிகாபதி விட்டுச்சென்ற பணியை நாம் எடுத்து செல்வதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை – அதை தொடர்ந்து செய்வோம்” என்று உறுதியேற்றனர்.

இறுதியாக தோழருக்கு 2 நிமிடம் சிவப்பு அஞ்சலி செலுத்தி அவர் மேல் சிவப்புக் கொடி போர்த்தப்பட்டு ‘தோழர் அம்பிகாபதிக்கு சிவப்பஞ்சலி, நக்சல்பாரி இயக்கத் தோழர் அம்பிகாபதிக்கு வீர வணக்கம், மார்க்சியலெனினியமாவோ சிந்தனை வெல்லட்டும்’ ஆகிய முழக்கங்களோடு ஊர்வலமாக கொண்டு சென்று எந்த ஒரு பார்ப்பனிய சாதிய சடங்குகள் எதுவும் இல்லாமல் அமைப்பு முறைப்படி தாடாலம் காமராஜபுரம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.
தொடர்பு எண் : 9791286994.