பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு−வில் ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு ‘‘சுதந்திர பெரு’’ என்ற இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராகியுள்ளார்.
இது, ‘‘தேர்தல் மோசடி’’ மூலம் அடைந்த வெற்றி என்றும், ‘‘சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாக’’வும் அமெரிக்க வல்லரசு கூப்பாடு போடுகிறது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பொம்மை அரசை நிறுவிக் கொள்வதன் மூலம், கனிம வளங்கள் நிறைந்த லத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகளைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இந்த தேர்தல் வெற்றி ஒரு சரிவாகவே அமைந்துள்ளது.
படிக்க :
தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்
அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திய வலதுசாரிக் கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு, தற்போது முதன்முறையாக புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசுகின்ற சுதந்திர பெரு கட்சி வெற்றி பெற்றிருப்பது, அனைவராலும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த நாடாக பெரு இருந்தபோதிலும், அந்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் உழைக்கும் மக்கள் அவலத்தில் உழல்கின்றனர். மேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் ஒன்றுதான் பெரு. ஏறத்தாழ 3.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், இரண்டு லட்சம் பேர் மாண்டு போயுள்ளனர்.
சுரங்கங்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்கள் அனைத்தும் உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தால், அந்நாட்டில் ஒரு சதவிகிதம் பேர் குபேரர்களாகவும், நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் உள்ளனர். ஊழல் மலிந்த அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள பெரு−வில், கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு அதிபர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தங்களது பதவிகளை இழந்துள்ளனர். கடைசி ஏழு அதிபர்களில், ஐந்து பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆலன் கார்சியா என்ற முன்னாள் அதிபர் சிறையிடப்படுவதற்கு முன்னர் பயந்துபோய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதிபர் பிரான்சிஸ்கோ சகஸ்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எட்டு வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் இளம் பெண் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி என்பவருக்கும், சுதந்திர பெரு கட்சியின் பெட்ரோ காஸ்டிலோ என்பவருக்கும் இடையில்தான் தீவிரமான போட்டி நிலவியது.
பாப்புலர் ஃபோர்ஸ் என்பது, அமெரிக்க விசுவாச வலதுசாரிக் கட்சியாகும். இதன் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆல்பெர்டோ புஜிமோரி, அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்பட்டு புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கியவர். இவர் காலத்தில்தான் பெரு−வின் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது, இவர் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இவரது மகள்தான் கெய்கோ புஜிமோரி.
2008−ஆம் ஆண்டில் மார்க்சியவாதி என்று அறியப்படும் விளாதிமிர் செரோன் ரொஜாஸ் என்பவரால் சுதந்திர பெரு கட்சி தொடங்கப்பட்டது. தற்போது இவர், இக்கட்சியின் செயலாளராக உள்ளார். இக்கட்சியானது, பெரு−வின் மீது ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்கின்ற கட்சியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு − சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சியாகவும் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில், ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற பெரு−வின் அரசுக் கட்டமைப்பைத் தூக்கி எறிவதை தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத்தேடும் போலி சோசலிசக் கட்சியாகவே சுதந்திர பெரு கட்சி உள்ளது.
இக்கட்சியால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான கேஸ்டிலோ, ஒரு சோசலிஸ்ட் அல்ல. ஆசிரியர் சங்கத் தலைவரான இவர், நீண்டகாலம் ‘‘சாத்திய பெரு’’ என்ற தாராளவாதக் கட்சியில் இருந்தவர். இத்தேர்தலில் சுதந்திர பெரு கட்சியின் வேட்பாளராக நிற்கும் வரை, இவர் பெரு அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத நபராகவே இருந்தார்.
கல்வியறிவின்மையை ஒழிப்பதாகக் கூறி கேஸ்டிலோவின் தேர்தல் பிரச்சாரம்
இத்தேர்தலில் தன்னை ஒரு விவசாயியாகவும் கிராமப்புற ஆசிரியராகவுமே முன்னிறுத்திக் கொண்டு இவர் பிரச்சாரம் செய்தார். பெரு விவசாயிகளின் பாரம்பரிய நீளமான தொப்பியையும் செருப்பையும் அணிந்துகொண்டு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாகவே, கிராமப்புற விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெருமளவில் இவரால் கவர முடிந்தது.
‘‘கடந்த கால் நூற்றாண்டுகால ஆட்சிகளின் ஊழல் பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுவேன்’’, ‘‘வறுமைமையையும் கல்வியறிவின்மையையும் ஒழிப்பேன்’’, ‘‘பெருவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிற சுரங்களைத் தேசிய உடைமையாக்குவேன்’’ − என்றெல்லாம் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
இவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, புதிய அரசியல் சாசனம் பற்றியதாகும். 1993−ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டமானது புதிய தாரளவாதக் கொள்கைகளுக்கு இசைவானதாக இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தி, அதன்மூலம் புதிய அரசியல் சட்டத்தை வகுக்கப்போவதாகவும் கூறிய காஸ்டிலோவின் பிரச்சாரம் பெரு நாட்டின் உழைக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘‘புதிய அரசியல் சாசனம் அல்லது மரணம்’’ என முழங்கினார்கள், ‘‘சுதந்திர பெரு’’ கட்சியினர்.
எதிர்த்தரப்பு பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி, ‘‘கம்யூனிஸ்டு அபாயத்திலிருந்து அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்’’, ‘‘பெரு−வை வெனிசுலாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’’ முதலான முழங்கங்களை பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக முன்வைத்தார். மேலும், 1980−களில் பெரு−வில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய ‘‘ஒளிரும் பாதை’’ என்ற சாகசவாத மார்க்சிய − லெனினியக் குழுவினரோடு தொடர்புடையவர்தான் காஸ்டிலோ என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.
‘சோசலிஸ்டுக்’ கட்சியின் கேஸ்டிலோ (இடது) எதிர்க் கட்சியின் அதிபர் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி
இவற்றைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சாடிய கேஸ்டிலோ, தான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டார். தன்னைத் தூய கத்தோலிக்க கிறித்தவராகக் காட்டிக் கொண்டார்.
காஸ்டிலோ ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, ‘‘அது சுத்தப்பொய், நான் சொல்வதெல்லாம் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதைப் பற்றித்தான்; அந்நிய தொழில் நிறுவனங்களின் இலாபத்தில் 70 சதவிகிதத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்ய வைப்பேன்; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கல்வியையும் மருத்துவத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவேன்’’ என்று தெளிவாகவே கூறினார், காஸ்டிலோ. ‘‘பணக்கார நாட்டில் ஏழை இருக்கக் கூடாது’’ என்பதே அவரது பிரபலமான முழக்கமான இருந்தது.
கிராமப்புறப் பகுதியான அண்டேயனில் அதிகபட்சமாக 2 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காஸ்டிலோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெய்கோ புஜிமோரியை 44,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்தலில் வென்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாசிஸ்டு டிரம்ப்பைப் போலவே, காஸ்டிலோவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் குழுவினரிடம் முறையிட்டார் புஜிமோரி. வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டினார்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத புஜிமோரி, தேர்தல் முடிவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றார். லத்தீன் அமெரிக்கக் கண்டத்து தேர்தல் குழுவினரும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திய நிலையில், ‘‘சர்வதேச விசாரணை’’ என்ற பெயரில் புஜிமோரி கோரியது தனது எஜமானான அமெரிக்காவைக் கட்டப் பஞ்சாயத்திற்கு அழைக்கத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அமெரிக்க நாடுகளின் அமைப்பு (ஓ.ஏ.எஸ். − Organisation of American States) – என்ற கட்டப் பஞ்சாயத்து அமைப்பிற்கு அவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அமெரிக்கா என்ன விரும்புகிறதோ, அதை குறிப்பறிந்து செய்வதுதான் இவ்வமைப்பின் வேலை.
கடந்த 2019 பொலிவிய தேர்தலில் இவா மொரேலஸ் என்ற சோசலிஸ்டுக் கட்சி வேட்பாளர் அதிபராக வெற்றிபெற்றபோது, அங்கு தலையிட்ட ஒ.ஏ.எஸ், அவ்வெற்றி செல்லாது என எவ்வித ஆதாரமும் இன்றித் தீர்ப்பளித்து. இதன்மூலம் அந்நாட்டில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தன் கட்சியினரை வைத்து பெரு நாடு முழுக்க காஸ்டிலோவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார் புஜிமோரி. இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டன. புஜிமோரியின் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தால், இவற்றை பெரு தேர்தல் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலை 19−ஆம் தேதி தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தியது, தேர்தல் குழு. கடைசியாக, ஜூலை 28−ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார், பெட்ரோ காஸ்டிலோ.
மொத்தம் 130 இருக்கைகள் உள்ள பெரு காங்கிரசில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 37 இருக்கைகளை மட்டுமே கேஸ்டிலோவின் சுந்திர பெரு கட்சி வென்றுள்ள நிலையில், 5 இருக்கைகளில் வென்ற பெரு ஒற்றுமைக்கான கட்சியின் (together for peru) கூட்டணியுடன் 42 இடங்களை தக்கவைத்து சிறுபான்மை அரசாங்கமாக பொறுப்பேற்றுள்ளது. எதிர்கட்சியான பாப்புலர் ஃபோர்ஸ் கட்சி 24 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதர இடங்களைப் பெற்ற கட்சிகளும் வலதுசாரிக் கட்சிகளாகவே உள்ளன.
பெரு−வைப் பொறுத்தவரை முன்னர் வெற்றிபெற்ற வலதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே அங்கிருக்கும் முன்னாள் இராணுவத் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக்குடியினரின் ஆதரவோடுதான் பெரு காங்கிரசை அலங்கரித்துள்ளனர். அதாவது, ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்களின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள காஸ்டிலோ மட்டும்தான் இதற்கு விதிவிலக்கானவராக இருக்கிறார்.
இடதுசாரிகளின் வெற்றியை எதிர்த்து வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டம்
எதிர்கட்சியிலிருக்கும் பிரதிநிதிகளில் முன்னாள் இராணுவத் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் எவரும் காஸ்டிலோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். காங்கிரசில் 79 இருக்கைகளைக் கொண்டு பலம் வாய்ந்த எதிர்க் கட்சிகளாக வலதுசாரிகள் இருப்பதால், காஸ்டிலோவின் அரசாங்கம் எந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை நிறைவேற்றுவது கடினமாகவே இருக்கும்.
மேலும், பெருவின் அரசியலமைப்பிலேயே ‘‘தார்மீக ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ திறனற்ற ஒரு அதிபரை காங்கிரஸ் பதவி நீக்கலாம்’’ என்ற 19−ஆம் நூற்றாண்டின் பழைய விதியொன்று உள்ளது. இதை காஸ்டிலோவிற்கு எதிராக வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, பதவியேற்ற பின்னர் சுரங்கங்களைத் தேசியமயமாக்குவது உள்ளிட்டு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி காஸ்டிலோ இப்போது வாயே திறப்பதில்லை. இதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. சுதந்திர பெரு கட்சியின் செயலாளரான செரோன் ரொஜாஸ், ‘‘தேர்தல் வாக்குறுதிகளை காஸ்டிலோ மதித்து நடக்க வேண்டும்’’ என்று தனது கட்சியின் சார்பில் அதிபராகியுள்ள காஸ்டிலோவுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கிறார்.
பெரு நாட்டை முதலாளித்துவ − ஏகாதிபத்தியச் சூறையாடலிலிருந்து விடுவிக்க விரும்புகிற ஒரு சோசலிசக் கட்சி, சொல்லிலும் செயலிலும் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்தையும் பெரு நாட்டின் கார்ப்பரேட் மேட்டுக்குடி வர்க்கங்களையும் ராணுவக் கும்பலையும் வீழ்த்தி, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் அரசு எந்திரத்தைத் தகர்த்தெறியும் வகையில், அமெரிக்காவின் பொய்கள், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகள், படுகொலைகளை முறியடிக்கும் வகையில், சொந்தமாக மக்கள் படையைக் கொண்டிருக்கவும் வேண்டும். அதன்மூலம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசு எந்திரத்தை நிறுவி, ஏகாதிபத்தியச் சூறையாடலையும் கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்.
படிக்க :
பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
ஆனால், பெரு நாட்டின் சோசலிஸ்டுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் கார்ப்பரேட் சூறையாடலையும் கட்டிக் காக்கும் வகையில் அமைந்துள்ள தற்போதைய பெரு நாட்டின் அரசுக் கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியின் மூலம் இதைச் சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க ஆதிக்கத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் ஒருக்காலும் வீழ்த்த முடியாது என்பதை பெரு−வின் அண்டை நாடான சிலி நாட்டின் ரத்தம் தோய்ந்த வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. இதிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல், இன்னமும் கானலை நீரென நம்பியோடும் பெரு நாட்டின் சோசலிஸ்டுகளின் நடவடிக்கைகளானது, அந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வேதனைமிக்க இன்னுமொரு துயரக் கதையைத்தான் சொல்லப்போகிறது.


டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க