சேலம் மாவட்டம், மோரூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகில் பல கட்சிக் கொடிகளும் இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற முயன்ற தலித் மக்கள் மீதும் வி.சி.க நிர்வாகிகள் மீதும் ஆதிக்க சாதிவெறியர்களுடன் கரம் கோர்த்துக்கொண்டு போலீசு கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில், பலர் படுகாயமுற்றுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ஆர்.எஸ்.எஸ் கொடிக் கம்பம் நடுவதற்காக வந்திருந்தால் ஆதிக்க சாதி வெறியர்கள் தடுக்கப்போவதில்லை. மாறாக, அவர்கள் தங்களது அரசியல் அதிகாரத்திற்காக ஒரு அமைப்பை தெரிவு செய்து –  அதன் பின்னால் அணி திரள்வதுதான் ஆதிக்க சாதியினருக்கு பிரச்சனை.
அந்த அமைப்பு ஆதிக்க சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும்  என்று தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல், ஆதிக்க சாதி வெறியர்களும் நம்புவதால்தான் அந்த அமைப்பில் சேரக்கூடாதென்றும் கொடி ஏற்றக்கூடாதென்றும் பிரச்சனை உருவாக்கப்படுகிறது.
படிக்க :
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !
இது வி.சி.க-வுக்கு மட்டும் வந்த பிரச்சனை அல்ல; புரட்சிகர அமைப்புகள் பல ஆண்டுகள், பல வழக்குகள், பல போராட்டங்களைத் தாண்டியே கொடியை ஏற்றவும் அமைப்புக்களை உருவாக்கவும் முடிகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதி அமைப்பிலோ ஆளும் வர்க்க அமைப்பிலோ இருப்பதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. சாதி ஆதிக்கத்துக்கு எதிரான அமைப்பில் செயல்படுவதுதான் பிரச்சனையின் மையப்புள்ளி.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சேலம் மாவட்டம், மேச்சேரி அருகில் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அன்றிரவே ஆதிக்க சாதியினரால் அவரின் வீடும் வாகனங்களும் தாக்கப்பட்டன.
கிராம மக்களுக்கு பிடிக்காத ஒன்றை மற்றவர்கள் செய்ய முற்படும்போதுதானே இப்பிரச்சனை வெடிக்கிறது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. யார் அந்த கிராம மக்கள் என்பதுதான் பிரச்சனையின் அடிப்படையான கேள்வி. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாதென்றும்,  தண்ணீர் அருந்தக் கூடாதென்றும் கூறி தீண்டாமையை கடைபிடிக்கும் ஆதிக்கச் சாதியினரைத் தான் கிராம மக்கள் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதகுல விரோத தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு தீண்டாமைக்கு எதிரான அரசியல் ஆதிக்க அடையாளம் நிறுவப்படுவது ஒவ்வாது என்றால், நாம் அதைத்தான் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
ஏதோ, இப்பிரச்சனை வி.சி.க கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்சனையாக பலரும் சுருக்கிப் பார்க்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போதெல்லாம் இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டே வந்திருக்கின்றனர். கோயில் நுழைவுப் போராட்டங்களின் போதும் தண்ணீர் உரிமைப் போராட்டங்களின் போதும் தெருவில் நடப்பதற்கான உரிமைப் போராட்டங்களின் போதும் ரத்தம் சிந்திக் கொண்டே இருக்கின்றனர். அதன் தொடர்ச்சிதான் இது.
தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன் மேலவளவில் ஆதிக்க சாதிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்றத் தலைவரானார். அதனால், அவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். அங்கே அவருக்கு தி.மு.க துணை நிற்கவில்லை. அரியலூரில் கடந்த தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட மக்களில் வீடுகள் சூறையாடப்பட்டன. அரக்கோணத்தில் வி.சி.க-விற்கு ஓட்டுக்கேட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சமூக நீதிக்கான கட்சியாக கூறிக் கொள்ளும் திமுக-வின் போலீசும் ஆதிக்கச் சாதியினருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது. உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல்  பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது. ஆகவே சாதிய பிளவுகளை நீடிக்கச் செய்வதையும், அதனை ஆழப்படுத்துவதையும் திமுக உள்ளிட்ட பெரும்பாலான ஓட்டுக் கட்சிகள் செய்து வருகின்றன.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் மேலானதாக கூறப்படும் இச்சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அங்கே அரசு ஆதிக்க சாதியினரோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்குகிறது. இந்த அரசுக் கட்டமைப்பே பார்ப்பன – இந்து மதவெறி – ஆதிக்க சாதி வெறிக் கூடாரமாக இருப்பதைத்தான் கொடியன்குளமும், பரமக்குடியும் என பல உதாரணங்கள் மூலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டியது தலித் மக்கள் மட்டுமல்ல, பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களும்தான். தீண்டாமை குற்றம் புரிந்த ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் மறுக்கப்பட வேண்டும். அவர்கள் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.
அன்றாடம் உழைத்து உண்ணும் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளை, வரிகள் மூலமும் விலைவாசி உயர்வு மூலமும் கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்துதரும் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பார்ப்பனிய அடிமைக் கட்சிகள், ஆதிக்கசாதி மக்களை திசை திருப்புவதற்கு தலித் மக்களையும்,  முசுலீம்களையும் எதிரிகளாகக் காட்டுகின்றன. திமுக உள்ளிட்ட பிற ‘சமூக நீதி’க் கட்சிகள் மறைமுகமாக அதனை அனுமதித்து குளிர் காய்கின்றன. அந்தப் பிளவை ஆழப்படுத்துகின்றன.
இதனை ஆதிக்கச்சாதி உழைக்கும் மக்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்தி ஆதிக்கச் சாதிவெறி கட்சிகளையும், அவற்றைக் கொண்டு குளிர்காயும் கட்சிகளையும் தனிமைப்படுத்துவதும், அம்மக்களை வர்க்கமாய் உணரச் செய்வதும் தான் சாதியை ஒழிப்பதற்கு நம் முன் உள்ள வழியும், முக்கியக் கடமையுமாகும்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321