சமூகநீதி ஆட்சியில் “சாதி மதம் அற்றவர்” சான்றிதழ் வாங்குவதற்கே பெரும் போராட்டம் !
ற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் முதலாமாண்டு சேர்வதற்கு காத்திருக்கும் எனது மகனுக்கு கல்லூரி சேர்க்கைக்கு சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஆனால், அவனுக்கு முதல் வகுப்பில் இருந்து  12-ம் வகுப்பு வரை எப்போதும் சாதி மத அடையாளத்தை குறிப்பிட்டதில்லை. சாதிச் சான்றிதழும் பெற்றதில்லை. நானும் எனது இணையரும் சாதி மறுப்பு – புரட்சிகர திருமணம் செய்து கொண்டவர்கள். நாங்களும் எந்தத் தருணத்திலும் சாதி மதத்தை அடையாளப்படுத்தியதில்லை.
எனவே, எனது மகனுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தேன். விண்ணப்பத்துடன் ஏற்கெனவே பெற்றோர்களை சாதி மதத்தை அடையாளப்படுத்துமாறு கட்டயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை மற்றும் இருப்பிட சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தையும் இணைத்திருந்தேன்.
படிக்க :
தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
இதைப் பெற்றுக்கொண்ட வட்டாசியர் “நல்லது மேடம், இது போன்ற வேறு யாரும் வாங்கியிருந்தால் அந்த நகலை கொடுங்கள். உடனே போட்டுக் கொடுக்கிறேன், எங்களுக்கு எந்த மாறுபாடும் கிடையாது” என்றார்.
நான் “நமது வட்டாரத்தில் வாங்கியது பற்றி தெரியவில்லை. எனவே நீங்களே சான்றிதழ் கொடுங்கள்” என்றேன். அவர், உதவி வட்டாட்சியரை அழைத்து உடனே சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
அவரும் அந்த G.O-வை எடுத்துவிட்டு உங்களுக்கு அழைக்கிறேன் என்றார். ஆனால், இரு வாரங்கள் ஆகியும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தள்ளிப்போட்டார். அதன்பிறகு நேரில் சென்று விசாரிக்கும்போது, “உங்களுடைய ஃபைல் எங்கு வைத்தேன் என தெரியவில்லை எடுத்துவிட்டு சொல்கிறேன்” என்றார். அதன்பிறகு, மறுநாள் கேட்கும்போது “மேடம் ஃபைல் கிடைத்துவிட்டது அதை உங்களது கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பியுள்ளேன். அவரைப் பாருங்கள்” என்றார்.
அதேசமயம் எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரும் அழைத்து உங்களது சான்றிதழ் அனைத்தும் எடுத்து வாருங்கள் என்றார். உடனே அவற்றை எடுத்துச் சென்றபோது, “என்ன, உங்கள் இருவரின் கல்வி சான்றிதழில் சாதி குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் உங்களது மகனுக்கு சாதி வேண்டாம் என கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். “ஆமாம், எங்களது சிறு வயதில் குறிப்பிடப்பட்டது, ஆனால் நாங்கள் சுயமாக இயங்க ஆரம்பித்தத்தில் இருந்து எந்த இடத்திலும் சாதி மதத்தை அடையாளப்படுத்தியதில்லை. எங்களது திருமணமே சாதி மறுப்புதான்” என்று சொன்னவுடன், சரி என்று விசாரித்து விட்டு அனுப்பினார்.
நான் RI-யிடம் பேசிவிட்டு அழைக்கிறேன் என்றார். பின்னர் மறுநாள் அழைத்து நானும் RI-யும் உங்களது வீட்டுக்கு வருகிறோம் என்றனர். அதேபோல் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துவிட்டு பொதுமக்கள் 10 பேரிடம் நீங்கள் சொல்வது உண்மைதான் என கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றனர். அதேபோல் கையெழுத்து வாங்கிச் சென்றேன். பிறகு VAO எங்களை அழைத்து அடுத்த வாரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்றார்.
ஒரு வாரம் கழித்து உதவி வட்டாசியாரிடம் கேட்கும்போது, “மேடம் நீங்கள் Zonal தாசில்தார் அவர்களைப் பாருங்கள்” என்றார். பிறகு அவருக்கு போனில் அழைத்து கேட்கும்போது, “உங்க ஃபைல் பற்றி VAO-விடம் கேட்கிறேன், நாளைக்கு சொல்கிறேன்” என்றார்.
அதன்பிறகு அடுத்தநாள் கேட்கும்போது, “உதவியாளர் விடுமுறையில் இருக்கிறார், உங்களது ஃபைல் பார்த்துவிட்டேன், நாளைக்கு கட்டாயம் கொடுத்து விடலாம்” என்றார்.
அடுத்தநாள் பேசும்போது “மீட்டிங் நடக்கிறது” என்றார். நான் அலுவலகத்திற்கு அருகில்தான் இருக்கிறேன் எனக் கூறியபோது “சரி வாருங்கள்” என்றார். அங்கு சென்றபோது எங்கள் பகுதியின் RI, Zonal Deputy Tahsildar, வட்டாட்சியர் அனைவரும் இருந்தனர்.
“என்ன சார் பிரச்சினை? இவ்வளவு நாள் இழுத்தடிக்கிறீர்கள்” என கேட்கும்போது “மேடம், இதற்கான format இல்லை. அதுதான் பிரச்சினை, வேறு ஒன்றுமில்லை, என அங்கிருந்த RI, Zonal Deputy Tahsildar, அனைவரையும் கடிந்து கொண்டு ஏன் இவ்வளவு நாள் எனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை” என்றார்.
அவர்களும் “எங்களது வேலையை முடித்துவிட்டோம் என்றனர், Zonal Deputy Tahsildar எனக்கு வந்து 3 நாள் தான் ஆகிறது” என்றார்.
“சமத்துவம் சகோதரத்துவம் பேண வேண்டும் என பெரியார் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள், உறுதி மொழி எடுப்பதாக சொல்லுகிறீர்கள். சாதி மதம் இல்லை என இப்படி ஒரு சான்றிதழ் வாங்குவதற்கு இவ்வளவு இழுத்தடிக்கிறீரகள்.  ஆனால் நாங்கள் உண்மையில் உறுதி மொழி எடுப்பதோடு அல்லாமல், நடைமுறையில் சமூக நீதியை நிலைநாட்டி நிரூபித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டும் அல்ல எங்களது மக்கள் அதிகாரம் அமைப்பில் உள்ள தோழர்கள் அனைவரும் இதுபோல எந்த இடத்திலும் சாதி மதத்தை குறிப்பிடுவதில்லை. சமூக நீதி ஆட்சி நடக்கிறது என்கிறீர்கள். சாதி, மதமில்லை என சான்றிதழ் வாங்குவதற்கு ஒரு மாதம் இழுத்தடிக்கிறீர்களே?” என்று கேள்வி எழுப்பினோம்.
அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் திருப்பத்தூரில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, என அதன் படிவத்தை காட்டினர். அதன்பிறகு அரை மணி நேரம் காத்திருங்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம், எனக் கூறி அதன் பிறகு சான்றிதழ் கொடுத்தனர்.
படிக்க :
சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?
ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது மக்களை அலைக்கழிப்பது என்பது நமது நாட்டில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதுவும், இதுபோன்று சாதியில்லை மதமில்லை என சான்றிதழ் வாங்குவது என்றால் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை இன்னமும் இழுத்தடிப்பதற்கான வாய்ப்புகளையே நாடுகிறது. இது போன்ற முற்போக்கு நடவடிக்கைகளை அவர்கள் அங்கிகரிப்பதில்லை. மாறாக சாதி மதத்தை ஊக்குவிப்பது என்றால் உடனடியாக செயல்படுகிறார்கள்.
இந்த சாதி கட்டமைப்பை காப்பாற்றுவதை தனது கடமையாக செய்கிறார்கள். சனாதனத்தை எதிர்க்கிறோம் சமத்துவம், சகோதரத்துவம், பெரியாரின் வழியில் நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசுதான் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியாதபடி தயாரித்துள்ளது. சாதி மதமற்றவர் என சான்றிதழ் வாங்கி வரும்படி நிர்பந்திக்கிறது. அப்படி ஒரு சான்றிதழை வழங்கவும் இழுத்தடிக்கிறது.
சாதி மதத்தைத் துறந்து வாழ்பவர்களை OC பிரிவின் கீழ் தான் வகைப்படுத்துகிறார்களே அன்றி, அவர்களை அங்கீகரிப்பதோ, இப்படி வாழ்வதற்கு ஊக்கப்படுத்துவதோ இல்லை. சமூகநீதி பேச்சு, வெறுமனே ஏட்டிலும் பேச்சிலும் தான் இருக்கிறதே அன்றி நடைமுறையில் அல்ல என்பதை சாதி மதமற்றவர் எனும் சான்றிதழ் வாங்க, நடத்தப்பட்ட இந்த ஒரு மாதத்திற்கும் மேலான தொடர் போராட்டம், தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.

மக்கள் அதிகாரம்
சூர்யா
மக்கள் அதிகாரம்,
உடுமலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க