டந்த 06-12-2018 அன்று இந்து தமிழ் நாளிதழில் வெளியான, “தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் : நவீனக் கொத்தடிமைகளா?” என்ற கட்டுரை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கிடையில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அந்தக் கட்டுரையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) விதிகளுக்குப் புறம்பாக தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களிடம் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொண்டதையும், வேறு பணிக்குச் செல்வதன் நிமித்தம் உதவிப் பேராசிரியர் ஒருவர் தனது அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்து அவரை அலைக்கழித்ததையும், விளைவாக அவர் தற்கொலை செய்துகொண்டதையும் கட்டுரை ஆசிரியர் பதிவுசெய்திருந்தார்.

தவிர, மற்றொரு பொறியியல் கல்லூரியில் ஊதியத்தைக் காரணமின்றிக் குறைத்தல்; முறையான காரணமும் முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தல்; பணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்புவோருக்குச் சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தனது சகபாடி ஆசிரியர்கள் சகிதம் போராட்டத்தில் இறங்கிய பேராசிரியர் ஒருவரை குண்டர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி அவர் உயிருக்குப் போராடி பின்னர் உயிர் பிழைத்ததையும் அவர் பதிவுசெய்திருந்தார்.

இந்தக் கட்டுரை பிரசுரமாகி சிறிது நாள்களிலேயே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பணியில் சேரும் ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாதோரின் அசல் சான்றிதழ்களைத் தக்கவைத்துக்கொள்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும், தொடர் அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பொறியியல் கல்லூரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தவிர, ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற முத்திரையுடன் சான்றிதழ்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு AICTE கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் வேறொரு தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வாயிலாகத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்துகொண்டேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?

கள யதார்த்தம் AICTE-க்குத் தெரியுமோ இல்லையோ மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். எல்லா தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தக் கறாரான விதிமுறையைப் பின்பற்றி ஒழுகுகின்றனவா? தங்கள் போக்கை அவை மாற்றிக்கொண்டனவா?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் தோராயமாக இரண்டு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக நான் பணியாற்றிவந்தேன். கடந்த ஜனவரி 22 அன்று எனது பணியை நான் ராஜினாமா செய்தேன். நான் பணியில் சேருகிற சமயம், புதிதாய் பணியில் சேர வரும் ஏனைய நபர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதுபோல எனது சான்றிதழ்களையும் பிணையாகக் கேட்டார்கள். அப்பொழுதெல்லாம் இது சட்டவிரோதம், விதி மீறல், AICTE-ன் நியதிகளுக்குப் புறம்பானது என்பது எங்களுக்கு, குறைந்தபட்சம் புதிதாக இந்தப் பணியில் சேர்ந்த எனக்கு, தெரியாது. மாறாக, இவை எல்லாம் AICTE-ன் விதிமுறைகளுள் ஒன்றுதானோ என்கிற எண்ணமே என்னுள் நிழலாடியது. பணியில் சேர்ந்து வெகு நாள்கள் கழித்தே கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயல் அப்பட்டமான விதிமீறல் என்பதும், பணியில் இருப்பவர்கள் திடுதிப்பென்று ராஜினாமா செய்துவிடக் கூடாது, வேறு பணிகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் கைக்கொள்ளும் உத்தி என்பதும் தெரியவந்தது.

ஏதேனும் பேராசிரியர்கள் தன்னிச்சையாக வேலையைவிட்டு நின்றுவிட வேண்டுமென்றோ இதைவிட மேம்பட்ட பணிகளுக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டுமென்றோ விரும்பி, தங்கள் அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டால் மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாக அவர்கள் ஒப்படைத்தாக வேண்டிய அவலநிலை இங்கே.

படிக்க:
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

2019 ஜனவரி 22 அன்று எனது ராஜினாமா கடிதத்தை கேக்றான் மேக்றான் கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தேன். சேர்மேனின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அடுத்தகட்ட முறைமைகளைக் கூற முடியும் என்றார் நிர்வாக அலுவலர் (AO). காத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து, ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றார். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு ஏனைய முறைமைகளையும் நேரில் வந்து முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். இல்லை, மூன்று மாதச் சம்பளத்தை நீங்கள் கொடுத்தாக வேண்டும் என்றார். இதில் ஏதேனும் சலுகைப் பெற்றுக்கொள்ள விழைந்தால் சேர்மேனைத்தான் நீங்கள் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார்.

மூன்று நாள்கள் கழித்து, சேர்மேனைச் சந்தித்துப் பேசுவதற்காக கல்லூரி சென்றேன். அவரது அறை முன்பு காத்திருந்தேன். தனிப்பட்ட உதவியாளர் உள்ளே சென்று விவரத்தைக் கூறினார். இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை, அவரைக் அகடமிக் டைரக்டரைச் சென்று சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறி உதவியாளரை அனுப்பினார். அகடமிக் டைரக்டரைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.

கடின உழைப்பினூடாக நாங்கள் பெற்றுக்கொண்ட சான்றிதழ்களை மீண்டும் கேட்டால், மூன்று மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களே, எங்கள் சான்றிதழ் எங்கள் உரிமை இல்லையா என்றேன். நீங்கள் கொடுக்கும் சம்பளம் எங்களைப் போன்றவர்களின் அன்றாடத் தேவைகளுக்கே சரியாய்ப் போய்விடுகிறது. அதுவும், என்போன்ற சாமானியர்களுக்கு மூன்று மாதச் சம்பளம் என்பது மிகப் பெரிய தொகை, அதை உங்களுக்குத் தந்துவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது என்று கேட்டேன். அவர், ‘இது நிர்வாக விதிமுறை சார், இதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்றார்.

சார், ஓரிரு மாதங்கள் முன்புதான், ஆசிரியர்களின் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வது விதிமீறல், தண்டனைக்கு உரிய குற்றம் என்ற கறாரான எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை AICTE வெளியிட்டிருக்கிறது. அதையும் மீறி சான்றிதழ்களை இப்படி திருப்பித் தர மறுப்பதும், மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாகக் கேட்டு அலைக்கழிப்பதும் சட்டவிரோதம் இல்லையா, விதிமீறல் இல்லையா என்றேன்.

இதையெல்லாம் நீங்கள் சேர்மேனிடம்தான் சார் பேச வேண்டும் என்றார். மீண்டும் சேர்மேனைப் பார்ப்பதற்காக அவர் அறைக்குச் சென்றேன். வெளியில் காத்திருந்தேன். பார்க்க முடியாது, அகடமிக் டைரக்டர் வழியாகத்தான் வர வேண்டும் என்கிற சமிக்ஞை வந்தது. மீண்டும் அக்கெடமிக் டைரக்டரைச் சென்று பார்த்தேன். நடந்ததைக் கூறினேன். இதற்கு என்னதான் சார் வழி என்று கேட்டேன்.

சேர்மேன் ஒருமுறை கூறிவிட்டார் அல்லவா, மூன்று மாதச் சம்பளம் வைத்தால்தான் சான்றிதழ் என்று. இதுகுறித்து திரும்பத் திரும்ப அவரிடம் சென்று பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால், ‘சம்பளத் தொகையைக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன் …’ என்று இன்னொரு கடிதம் ஒன்றை எழுதி கல்லூரி முதல்வரிடம் (Principal) கொடுங்கள். அவர் வழியாகச் சம்பிரதாயமாகவே வரட்டும். கடிதத்தில் உள்ள உங்கள் கோரிக்கையை வைத்து வேண்டுமானால் சேர்மேன் சாரிடம் பேசிப் பார்க்கலாம், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்றார்.

அவ்வாறே கல்லூரி முதல்வரிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தேன். கடிதம் சேர்மேனின் பார்வைக்குச் சென்று அவர் பதில் கூறினால் அலுவலகத்திலிருந்து உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள் என்றார் முதல்வர்.

பத்து நாள்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை. ஏறக்குறைய பன்னிரண்டு நாள்கள் கழித்து இதுகுறித்து கேட்பதற்காக நிர்வாக அலுவலரை (AO) அலைபேசியில் அழைத்தேன். சார் இது கிரிடிகல் சிட்டுவேஷன். மறுபடியும் சேர்மேன் சாரிடம் இதுகுறித்து எதுவும் கேட்க முடியாது. நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். சேர்மேன் சார் என்னைப் பார்க்க மறுக்கிறார்; அகடமிக் டைரக்டர்தான் கடிதம் கொடுங்கள், இப்போதைக்கு வேறு வழியில்லை என்றார் என்று சொன்னேன். சரி சார், நான் இந்தக் கடிதத்தை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறேன். அவர் சேர்மேனிடம் எடுத்துச் செல்லட்டும். ஏதேனும் மறுமொழி வந்தால் தெரியப்படுத்துகிறேன் என்றார். காத்திருந்தேன்.

படிக்க:
பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!
விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!

ராஜினாமா கடிதம் கொடுத்து அன்றுடன் 23 நாள்கள் கழிந்துவிட்டிருந்தன. எனது முந்தைய உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் இன்னொருவரையும் நியமித்துவிட்டாயிற்று. ஆனால்,  எனது சான்றிதழ்களை இன்னமும் கொடுத்தபாடு இல்லை.

ராஜினாமா செய்து ஏறக்குறைய ஒரு மாதகாலம் நெருங்கிவிட்டிருந்த நிலையில் AO திரும்பக் கூப்பிடுவார் என்று காத்திருந்தேன். கூப்பிடவில்லை. இந்நிலையில் அகடமிக் டைரக்டரை கடந்த பிப்ரவரி 19-ம் தேதியன்று அலைபேசியில் விளித்தேன். சான்றிதழ்களைத் திருப்பித் தருவதுகுறித்து கேட்டேன். சேர்மேன் சார் நல்ல மூடில் இருக்கும்போதுதான் சார் இந்த விவகாரத்தை எடுத்துச் சொல்ல முடியும் என்றார். அதுவரைக்குமெல்லாம் என்னால் எப்படி சார் காத்திருக்க முடியும். நானும் வேறு வேலை தேட வேண்டியிருக்கிறது. சான்றிதழ்கள் இல்லாமல் எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். தவிர, எனது ஐந்துநாள் சம்பளத்தைவேறு எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்தம் செய்திருக்கிறார்கள். அதுவும் எனக்கு வேண்டும். சேர்மேன் சார் முடிவாக என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் சார் என்றேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள் சார், சேர்மேனின் மறுமொழி என்ன என்பதை அதற்குள் தெரியப்படுத்துகிறேன் என்றார்.

ஒரு வாரம் கழித்து, அதாவது 26 பிப்ரவரி அன்று, தொடர்புகொண்டேன். தெளிவான பதில் இல்லை. தொடர்ந்துவந்த நாள்களில் இரண்டு, மூன்று முறை அலைபேசியில் அழைத்துப் பார்த்துவிட்டேன். அழைப்பைச் சட்டைசெய்தாரில்லை. இறுதியாக, வேறு வழி தெரியாமல், சான்றிதழ்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று தெளிவான ஒரு பதிலைச் சொல்லுமாறு அவரது வாட்சப் நம்பரில் குரல் தகவல் (Voice Message) ஒன்றைப் பதிவிட்டேன், ஆக்கபூர்வ மறுமொழியை எதிர்பார்த்தவனாக. பதிவிட்டு ஐந்து நாள்கள் ஆகியும் எந்த மறுமொழியும் இல்லை.

ராஜினாமா செய்ததிலிருந்து அன்றுவரை, ஏறக்குறைய முப்பத்தாறு நாள்களில், சான்றிதழ்களை வாங்குவது பற்றிப் பேச மூன்று முறை கல்லூரிக்குப் போய்வந்திருந்தேன். மூன்று முறையுமே எனது அலைச்சல் வீணாய்ப் போனதுதான் மிச்சம். தவிர, அலைபேசி, வாட்சப் உரையாடல்கள் இத்யாதி.

நேரமும் நாள்களும் விரயமாகிக்கொண்டிருந்தன. பேச்சுவார்த்தைகளைக் கொண்டு எந்தப் பலனும் இல்லை. எஞ்சியிருந்தவையெல்லாம் மன அழுத்தமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான்.

இப்படிப்பட்டவர்களிடம் நமது உரிமைகளைக் கேட்க வேண்டிய முறையில்தான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். முதல் கட்டமாக, “கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி: சான்றிதழ்களுக்காக ஆசிரியர்களை அலைக்கழிக்கும் படலம், நீதி கிடைக்குமா?!” என்ற தலைப்பில், எனது அலைக்கழிப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன். சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்சப்பில், அதிவேகமாகப் பரவிய அந்தக் கட்டுரையும் அதில் இருந்த உண்மைகளும் கல்லூரி நிர்வாகத்தின் சுயரூபம் அதில் தோலுரிக்கப்பட்டிருந்த விதமும் கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு அவப்பெயரையும் நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும். உடனடியாக வந்து அசல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்கள். சான்றிதழ்களைக் கொடுத்துவிடுகிறோம், பகரமாக உங்கள் வலைப்பூவில் நீங்கள் பதிவிட்டிருக்கும் கட்டுரையை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு கட்டுரையை அகற்றினேன்.

என்றாலும், அது என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல; பொதுப் பிரச்சினை; தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களின் பிரச்சினை. கடந்த ஆண்டு சென்னையில் சம்பவித்த – கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் நான் கோடிகாட்டியிருக்கும் – துணைப் பேராசிரியர் வசந்தவாணனின் தற்கொலைச் சமபவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். கல்லூரி நிர்வாகம் அசல் சான்றிதழ்களை உரிய நேரத்தில் கொடுக்க மறுத்து அலைக்கழித்ததன் விளைவே அந்தத் தற்கொலை. அவ்வகையில், பெரும்பாலான  தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில், பல்வேறு தருணங்களில் அனுபவித்துவருகிற அலைக்கழிப்பின் ஒரு பரிமாணத்தையே எனது அலைக்கழிப்பினூடாக அந்தக் கட்டுரையில் நான் பதிவுசெய்திருந்தேன். அதைத்தான் தேவைக்கேற்ப செப்பம்செய்து இந்தக் கட்டுரையிலும் பதிவுசெய்திருக்கிறேன்.

(கோப்புப் படம்)

எனக்கு ஏறக்குறைய ஒரு மாதம் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த எனது சகபாடி ஆசிரியைக்கும், எனக்கு மூன்று மாதங்கள் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த பிறிதொரு ஆசிரியருக்கும், ஒன்பது மாதங்கள் முன்பு ராஜினாமா செய்த இன்னொரு ஆசிரியைக்கும், எனக்குப் பிறகு ராஜினாமா செய்த மற்றுமொரு ஆசிரியைக்கும் காரணமே இல்லாமல் ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்திருக்கிறார்கள். சான்றிதழ்களுக்காகப் பணம் கேட்டு அலைக்கழிக்கும் விதிமீறல் ஒரு புறம் இருக்கட்டும், எந்தக் காரணமும் இல்லாமல் வேலை பார்த்ததற்கான ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்திருக்கிறீர்களே எதற்காக என்று கேட்டால் பதில் வராது. மிஞ்சிப்போனால் இது சேர்மேன் சார் உத்தரவு, அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொள்வார்கள். உண்மையோ பொய்யோ இதைக் கேட்பவர்கள் நம்பியாக வேண்டும். இதுதான் அவர்களின் யதேச்சதிகாரக் கொள்கை.

அரசாங்க பணிகளுக்கான நேர்காணல்களுக்குச் செல்வதற்காக தங்கள் அசல் சான்றிதழ்களை நிர்வாகம் சொல்லும் தொகையைச் செலுத்தி மீளப் பெற்றுக்கொள்வதற்கும், திருப்பி அவற்றை ஒப்படைக்கும் நேரத்தில் பிணையாக அவர்கள் கொடுத்த தொகையை மீண்டும் வாங்கிக்கொள்வதற்கும் எவ்வளவு தூரம் எனது சகபாடி ஊழியர்கள் அலைக்கழிந்திருக்கிறார்கள் என்பதை எனது பணிக் காலத்தில் பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.

படிக்க:
இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?
சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?

சாமானியர்கள், சமூகப் படிநிலையில் கடைநிலையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக, உதவிப் பேராசிரியர்களாகப் பணியில் இருக்கின்றனர். பிணையாக வாங்கி வைத்துக்கொண்ட அவர்களது சான்றிதழ்களை மீண்டும் அவர்களிடம் கொடுப்பதற்காக இரண்டு மாதச் சம்பளத்தைத் தா, மூன்று மாதச் சம்பளத்தைத் தா, ஐந்தாயிரத்தைக் கொடு, பத்தாயிரத்தைக் கொடு என்று கேட்டால் வாழ்வாதாரத்துக்கான மாற்றுமுறை குறித்தெல்லாம் யோசிக்க முடியாமல், மேம்பட்ட, அரசாங்கப் பணிகளிலெல்லாம் சேர இயலாமல் கையறுநிலைக்குத் தள்ளப்படும் அத்தகையோரின் தற்கொலைச் சம்பவங்கள் இனிவரும் நாள்களிலும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

குறிப்பு: விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரியின் அசல் பெயரைத் தவிர்த்திருக்கிறேன். பகரமாக ‘கேக்றான் மேக்றான்’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

சம்மில்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

1 மறுமொழி

  1. இந்த மாதிரியான கட்டுரைகள்தான் வினவு தளத்தில் வெளியிடப்பட வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் தான் வாழும் சமூகத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஊடுருவிப் பார்த்து அனுதினமும் உருவாகும் அல்லது உருவாகி இருக்கிற புதிய புதிய சுரண்டல் தளங்களை பொது சமூகத்தின் பார்வைக்கு அம்பலப்படுத்த வேண்டும். அதுதான் அவன் கடமை. மாறாக சங்கம் என்ற பெயரில் அரசுக்கு இணையான அதிகார அமைப்புகளை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு போட்டியாக மக்களின் வரிப்பணத்தை சம்பளம், இதர படிகள் என்னும் பெயரில் சுரண்டி திண்ணும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து கட்டுரைகள் வரைவது அல்ல. இந்தக் கட்டுரையை வினவு தளத்தின் முகப்பில் இன்னும் சில நாட்களுக்கு வைத்திருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க