தோழர் நாராயணமூர்த்திக்கு சிவப்பஞ்சலி
தோழர் நாராயணமூர்த்தி இறந்துவிட்டார். தன்னுடைய இறப்பை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மை. சிறுநீரகத்தில் ஏற்பட்ட கட்டி அதன்பிறகு புற்று நோயாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளாக கதிரியக்க சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மதியம் 2 மணிக்கு இறந்திருக்கிறார்.
2016-ம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு மாநாடு பிரச்சாரத்தின் போது முதன்முறையாக அவருக்கு நான் அறிமுகமானேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். கணக்குகளை ஒப்படைப்பதில் மிகவும் கறாராக இருந்தார்.
கும்பகோணத்தில் பேருந்து பிரச்சாரத்திற்கு பொறுப்பாக அவர் ஒருமுறை இருந்தார்.
மாநாட்டிற்கு அனுமதி கிடைக்காததால் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு செல்லுங்கள் என்று கூறினேன். மற்றவர்கள் அனைவரும் சென்றுவிட இவரோ நேரில் வந்து கணக்குகளை ஒப்படைத்து விட்டு சென்றார். பிரச்சார நிதியை சில்லரைகளாக ஒப்படைக்காமல் மெனக்கெட்டு நோட்டுகளாக மாற்றியே ஒப்படைப்பார்.
எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அனுபவங்களை கூறிவிட்டுத் தான் உறங்கச் செல்வார். தன்னை விட வயதில் குறைந்தவர்கள் கூறுகின்ற கருத்தை கேட்டு உள் வாங்கிக்கொண்டு மாற்றிக் கொள்ளும் பக்குவம் உடையவராகவும் இருந்தார். வேலைகளில் மிகவும் சீரியஸானவராகவும் மற்ற நேரங்களில் கலகலப்பானவர் ஆகவும் இருந்தார்.
2020-ம் ஆண்டு நடந்த மாநாட்டை தவிர மற்ற அனைத்து மாநாடு பிரச்சாரங்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு செயல்பட்டார். சொந்த வாழ்க்கை குறித்த எல்லாம் பெரிதாக கவலைபட்டவராக தெரியவில்லை. தனக்கு எல்லாமே தோழர் பரசுராமன் தான் என்று கூறுவார்.
2020-ல் சிறுநீரக பிரச்சினைக்காக சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தோழர் வெற்றிவேல் செழியன் உடனிருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்தார். அவரது பகுதி தோழர்களும் அவரின் உடல் நலன் மீது அக்கறை கொண்டிருந்தனர்.
2017-ஆம் ஆண்டு முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை போன் செய்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோழர் நாராயணமூர்த்தி போன்ற முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில் குருதியில் வியர்வையில் தியாகத்தில் உருவான அமைப்பு இது என்பதுதான் நாம் எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று.
நோய் மிகவும் குறைவாக இருக்கும் பொழுதே கவனிக்காமல் இருந்ததன் விளைவு அவருடைய இறப்பில் கொண்டு போய் விட்டிருக்கிறது. அரசு மருத்துவர்கள் அதிகமான ஈடுபாட்டுடன் அவரை கவனித்து வந்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
முகநூலில் : தோழர் மருது, மக்கள் அதிகாரம்.
தோழர் சின்னப்பாவுக்கு எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி
திருவாரூர் மாவட்டம் திட்டாணி முட்டம் என்கிற கிராமத்தில் பொதுவுடைமைப் போராளி தோழர் சின்னப்பா அவர்களுடைய எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் சின்னப்பா அவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தோழர் வாழ்ந்த பகுதி என்பது பார்ப்பன ஆதிக்கம் பண்ணை ஆதிக்கம் நிறைந்த பகுதி, நிலமற்ற கூலி விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி, தோழர் சின்னப்பா வாழ்ந்த காலங்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பு வேலைக்கு செல்லவேண்டும், சூரியன் மறைந்த பிறகு தான் வேலையை முடித்து வர வேண்டும். பண்ணையார்கள் என்ன ஊதியம் கொடுக்கிறார்களோ அதைமட்டுமே பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிலையிலிருந்து தோழர் சின்னப்பா போன்றவர்கள் 8 மணி நேரம் வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்று மக்களுக்கு போராட்ட குணத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டத்திற்கு கட்டி அமைத்தவர் தோழர் சின்னப்பா.
ஆளும்வர்க்கத்தின் பல தடைகளை மீறி கடந்த எட்டு ஆண்டுகள் ஆளும்வர்க்கத்தின் பல தடைகளை மீறி அவரது நினைவுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். அவருக்கு நினைவு தூண் அமைக்கும் இடத்திற்கு ஆளும்வர்க்கம் ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்களை எதிர்த்து தொடர்ந்து எமது அமைப்பும் அந்த பகுதி மக்களும், அவர் குடும்பத்தினரும் உறுதியாக நிற்கிறார்கள்.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முகசுந்தரம், தோழர் ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை பொறுப்பாளர் புரட்சி நெப்போலியன், மக்கள் அதிகாரம் தோழர் சிவானந்தம், வாஞ்சிநாதன், தோழர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நினைவஞ்சலி உரையாற்றினர்.
தோழர் சின்னப்பா வாழ்ந்த கால கட்டங்களில் பண்ணை ஆதிக்கத்திலிருந்து விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் உரிமையையும் ஊதியத்தையும் உழைப்புக்கான நேரத்தையும் உழைக்கும் மக்களுக்கு பெற்றுத்தர போராடினார். ஆனால் இன்று தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் பொதுத்துறை சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.
தோழர் சின்னப்பா அவர்களின் வழியில் நின்று உறுதியுடன் மக்களைத் திரட்டிப் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே, இதுபோன்ற திட்டங்களை முறியடிக்க முடியும் என்று நினைவஞ்சலி கூட்டத்தில் தோழர்கள் உரையாற்றினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம், திருவாரூர்
தொடர்புக்கு : 63747 41279

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க