தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன.
இப்படி ஒரு காணொலி வெளியிட்டது ஒழுக்கக்கேடான செயல் என சமூக வலைத் தளங்களில் ’நல்லவர்கள்’ பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த காணொலியில் மேலாடைக்குள் இரண்டு உள்ளாடை அணிந்து அதற்கான பதிலையும் தந்தார் பத்மா. “Let’s not police women’s bodies in 2020 – OK “. அதாவது “2020-ம் ஆண்டில் பெண்களின் உடலை கண்காணிக்காமல் இருக்கலாமே” என்று கூறியிருந்தார்.
இதைப் போன்றே பாலிவுட் நடிகை சாமிரா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதுகையில் பிரா, காண்டாக்ட் லென்ஸ் போன்றவை அழகின் குறியீடுயில்லை எனவும் அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து தான் வேறுபடுவதாகவும்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பலரும் அதனைப் பாராட்டினர். பலர் சாடினர்.
படிக்க :
பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
பெண்களின் ஆடையில் ஓரு அங்கமான பிரா, சமூகத்தின் மனப்போக்கில் எந்த மாதிரியாக இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் ஒரு ஆதாரம்.
கடந்த ஆண்டு முதல் நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று பிரச்சினை காரணமாக போடப்பட்டுள்ள லாக்-டவுன், வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை பார்க்கும் நிலைமையை ஏற்படுத்தியது. உண்மையில் இது பல பெண்களுக்கு ஒரு உடல்ரீதியான சுதந்திரத்தைக் கொடுத்தது எனலாம். அலுவலகத்திற்குச் செல்கையில் கண்டிப்பாக பிரா அணிந்து செல்வது அவசியம் என்ற சமூக நிர்பந்தம் இருக்கையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கையில் பெண்களுக்கு பிரா அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை அளித்தது இந்த லாக்-டவுன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆண்கள் வெளியே செல்கையில் பனியன் அணிந்து செல்வதோ, அணியாமல் செல்வதோ, சமூகத்தில் எவ்வித எதிர்ப்பையோ ஆதரவையோ பெறுவது இல்லை. ஆனால் ஒரு பெண் வெளியே செல்கையில் பிரா அணியாமல் சென்றால், அது இந்தச் சமூகத்தின் கண்களில், அவள் ஆபாசப் பண்டமாகவும், தவறான  நடத்தை கொண்டவளாகவும் தெரிகிறாள். இதன் காரணம் என்ன ?
பலரும் பிரா அணிவது பெண்களுக்கு நலன் பயக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அதற்குப் பல மருத்துவக் காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் பிரா அணியாமல் இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் என்கின்றனர். மேலும் பிரா அணியாவிட்டால், கூப்பர் தசைநார்கள் (Cooper Ligaments) பாதிக்கப்படும். மார்பகங்கள் தளர்வுற்று தொய்வடையும் என்கின்றனர். இவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா ?
கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில், பிரா அணிவதால் எந்த நன்மையும் இல்லை என்று கூறப்படுவதோடு கூடுதலாக, அவை மார்பகங்களை ஆதரிக்கும் தசைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளரும் விளையாட்டு அறிவியல் வல்லுநருமான ஜீன்-டெனிஸ் ரூலியன் பிரான்ஸ் இத்தகவலை பிரெஞ்சு வானொலி நெட்வொர்க்கிடம் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் பிரா அணிவதை நிறுத்தும்போது அவர்களின் மார்பகங்களின் தன்மை மோசமடையாது என்பதையும் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார், ரூலியன்.
அதே போல, பிரா என்பது பெண்களின் ஆடையில் ஒரு பகுதியே அன்றி அது மருத்துவ சாதனம் அல்ல என்று “ஜீன் ஹெய்ல்ஸ்” மகளிர் சுகாதார அமைப்பின் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார்.
அடுத்ததாக, பிரா அணியாமல் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதாக சொல்லப்படுவதைப் பற்றி பார்க்கலாம். பிரா அணிவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று எந்த ஆய்வுகளும் இல்லை. இதற்கு எந்தவிதத்திலும் அறிவியலில் இன்றுவரை எந்தச் சான்றுகளும் இல்லை.
பிரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது மற்றும் மார்பக புற்றுநோயை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிரூபிக்கும் நம்பகமான ஆராய்ச்சி இல்லை. இதனை ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் தனது வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது.
பிரா அணிவது மார்பக தொய்வைக் குறைப்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். மார்பகங்கள் இயற்கையாக இருக்கின்ற விதம் அல்லது அதன் தளர்ச்சி போன்றவை மரபியல், ஹார்மோன்கள் மற்றும் எடையுடன் அதிக அளவில் தொடர்புடையதாக இருப்பதாகவும் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். பிரா அணிந்தால் மார்பகங்களின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று நிலவும் சில கருத்துக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவர் அமண்டா நியூமன்.
இந்த ஆய்வு முடிவுகள் இப்படி இருக்க, பின் ஏன் அசௌகரியமான இந்த ஆடையை பெண்கள் அணிகின்றனர் அல்லது அணிய நிர்பந்திக்கப்படுகின்றனர், என்ற கேள்வி எழுகிறது. கற்பு (ஒழுக்கம்) என்ற பெயரிலும், ஃபேஷன் என்ற பெயரிலும் பெண்கள் மீது இந்த உடை எவ்வாறு திணிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்னர், பிராவின் சுருக்கமான வரலாறு குறித்துப் பார்ப்போம்.
பிரா வரலாறு
பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை.
வரலாறு நெடுகிலும், பெண்கள் தங்கள் மார்பகங்களின் தோற்றத்தை பராமரிக்கவும், மறைக்கவும், கட்டுப்படுத்தவும், வெளிப்படுத்தவும் அல்லது மாற்றவும் பல்வேறு ஆடைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். வரலாற்று ரீதியாக, பிரா அல்லது பிகினி போன்ற ஆடைகள் மினோவான் நாகரிகத்தின் பெண் விளையாட்டு வீரர்களின் கலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கி.மு.14 ஆம் நூற்றாண்டுகளில்
கிரேக்க-ரோமன் நாகரிகங்களிலும் பெண்கள் மார்பகத்தை பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிராவை ஒத்த சிறப்பு ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கிபி 14-ம் நூற்றாண்டில், பிராவின் முன்மாதிரி உடைகள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அதன் பின் ஏறக்குறைய கிபி 16-ம் நூற்றாண்டு முதல், மேற்கத்திய நாடுகளின் பணக்காரப் பெண்களின் உள்ளாடைகளில் கோர்செட் (corset) எனும் உடை ஆதிக்கம் செலுத்தியது. இது மார்பகங்களின் எடையை தாங்கி நிற்க உதவும் என்று கருதப்பட்டது. மேலும் அவர்களின் அழகு சாதனங்களின் ஓரு பகுதியாக அவ்வுடை பார்க்கப்பட்டது.
உலகின் மிக பழமையான பிரா 1390 மற்றும் 1485 ஆண்டுகளுக்கு இடையில் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரிய லெம்பெர்க் கோட்டையின் தரைப் பலகைகளின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சரிகைகளால் நெய்யப்பட்ட பிரா கண்டுபிடிக்கப்பட்டது.
கோர்செட்-டிலிருந்தே (corset) பிரா பிறந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு மாற்றுகளைப் பரிசோதித்ததிலிருந்து தான் ப்ராவிற்கு வடிவம் கிடைத்தது. பின் காலப்போக்கில் இருவேறு பாகங்களாக பயன்படுத்தியதில் பிரா பெரும் வரவேற்பை பெற்றது.
20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சமகால பிராக்களை ஒத்த உடைகள் தோன்றின, இருப்பினும் வணிக அளவிலான உற்பத்தி 1930-கள் வரை நடக்கவில்லை. அப்போதிருந்து ‘கோர்செட்’களின் காலம் முடிந்து பிராக்களின் காலம் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறை கோர்செட்டின் முடிவை ஊக்குவித்தது. பிரா வடிவமைப்பு அதன் எளிமையான தன்மையால் பிரபலமடைந்தது.
போர் முடிவடைந்த நேரத்தில், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், ஃபேஷன்  ஆடை வடிவமைப்பு பரிணாமம் அடையத் துவங்கியது. மனிதர்களுக்கு வசதியான வகையில் உடைகளை வடிவமைக்கும் நோக்கம் கொண்டதாக நவீன ஆடை வடிவமைப்பு தோன்றினாலும், பெண்களை பாலியல் நுகர்வுப் பண்டமாக மாற்றும் வகையிலும் அது பரிணாமம் அடைந்ததும் அந்தக்காலத்தில் தான். ஃபேஷனின் இந்தப் பரிணாமம், பெண் உடலின் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.
ஃபேஷன் என்ற பெயரில், பெண்களின் மார்பளவை அதிகப்படுத்திக் காட்டுவது, பெண்களின் மார்பை வெளிப்படுத்திக் காட்டுவது போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்குள் தள்ளப்பட்டது பிரா. பெண்களின் அழகை மார்பகங்களின் அளவிலிருந்தும், அதனை வெளிப்படுத்துவதிலிருந்தும் நிர்ணயித்தது முதலாளித்துவம். அழகிற்கான நியதியையும் வரையறையையும் உருவாக்கியது. அதனை நோக்கி  தம்மை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது முதலாளித்துவம்.
இதன் ஒரு அம்சமாக ‘ஃபேஷன் ஷோ’க்களும், அழகிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பொருளாதார ரீதியான கட்டுப்பாடு ஆண்களின் கையில் இருக்கும் நிலையில், பெண்கள் தங்களை ‘அழகாக்கிக்’ கொண்டு ஆண்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உடைகளை ஃபேஷனாக களமிறக்கினர்.
இதற்கு எதிராக அமெரிக்காவில் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
பெண்களை ஆபாசப் பண்டங்களாக மாற்றுவதற்கு எதிரான முதல் போர்:
1968-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டிக்கு எதிரான முதல் போராட்டம் நடந்தது. அங்கு சுமார் 400 பெண்கள் வெளியே கூடி பிராக்கள், ஐ லேஷர்ஸ், ஹேர்ஸ்ப்ரே மற்றும் ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் என பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் பொருட்களை எல்லாம் ‘சுதந்திர குப்பைத் தொட்டியில்’ (Freedom Trash can ) இட்டனர். இது புகழ்பெற்ற “Burn the bra” இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இது உலகெங்கிலும் இது குறித்த தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு.
“சுதந்திர குப்பைத் தொட்டி போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு சிவில் உரிமைகள் அல்லது வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்களில் முந்தைய அனுபவம் இருந்தபோதிலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் பங்கேற்ற முதல் போராட்டம் அது” என போராட்டத்தில் பங்கேற்ற மார்கேன் என்பவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் அழகு போட்டிபோட்டி பங்கேற்பாளர்கள் நல்ல உடல் தகுதி, உடல் அமைப்பு, வெள்ளை நிறம் போன்றவைகளை அத்தியாவசிய தேவைகள் காரணிகள் என வரையறைத்திருந்தது. வெள்ளை இனத்தின் அடுக்குமுறை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்தாலும், இந்த போட்டிகளில் வெள்ளை நிறத்தவர் அல்லாத வெற்றியாளர்கள் அதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
படிக்க :
இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?
1921-ல் அழகிப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து, எந்தப் போட்டியிலும் ஒரு கருப்பின பெண் கூட இறுதிப் போட்டியாளராக இருந்தில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற “ஃப்ரீடம் ட்ராஷ் கேன்” போராட்டத்திற்கான செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
புவேர்ட்டோரிக்கன், அலாஸ்கன், ஹவாய், அமெரிக்க – மெக்சிகன், அமெரிக்க – இந்தியன் என வெள்ளை நிறத்தவரல்லாத எவரும் வெற்றியாளராக இருந்ததில்லை. அந்த அழகி போட்டிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் சுட்டிக்காட்டிய 10 அம்சங்களில் இனவாதமும் ஒன்று. பெண்களின் எழுச்சியாக சுமார் 50 வருடம் கடந்து பேசப்படும் போராட்டமாக அமெரிக்காவில் தோன்றிய இப்போராட்டம் இருக்கிறது.
ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் மேலும் பல பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அதை அணிய பிறரை நிர்பந்திப்பதும் இழிவானது.
சிந்துஜா
சமூக செயற்பாட்டாளர்
disclaimer