அஷ்பகுல்லாகான் : புரட்சிகர அறிவுஜீவி, காக்கோரி தியாகி, கவிஞர் என
பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !!
அஷ்பகுல்லாகான் பிறந்த நாளில் (அக்டோபர் 22) பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். இந்திய விடுதலைகாகப் போராடிய முசுலீம் தியாகியாக மட்டுமே அவரை சிலர் குறிப்பிடுகின்றனர். அஷ்பகுல்லாகான் புரட்சிகர இயக்கத்தின் சிறந்த கொள்கைப் பற்றாளராக, புரட்சிகர இயக்கத்தின் வடிவத்தை மாற்றியதில் பங்களிப்பு கொண்டவராக திகழ்ந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அஷ்பகுல்லாகானின் தியாகத்தை பற்றி விவரிக்கும் பலரும் அவர் முசுலீம் மதத்தவர் என்பதை தவறாமல் குறிப்பிடுகின்றனர். ராம்பிரசாத் பிஸ்மில்லின் பெயருடனும், காக்கோரி கொள்ளை வழக்குடனுமே வரலாறு முழுக்க எப்போதும் அவரது பெயர் உச்சரிக்கப்படுகின்றது. காலனிய எதிர்ப்பு மற்றும் புரட்சிகர இயக்கத்தின் முக்கியமான நபரான அஷ்பகுல்லாகானின் மதச்சார்பற்ற மற்றும் மதநல்லிணக்கத்திற்கான அவரின் கருத்துக்கள் எப்போதையும்விட இன்றைய மதவாத நச்சுச்சூழலில் தேவைப்படுகின்றன.
அஷ்பகுல்லாகானின் அரசியல், சிந்தாந்தப் பயணம் மற்றும் சமூகத்திற்கான போராட்டம் கற்பனையின் அடிப்படையிலானதல்ல. இந்த நாட்டிற்காக தன்னை ஏன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதில் சித்தாந்த தெளிவுள்ளவராக அவர் இருந்ததார். அவரின் கடிதங்கள், டைரி குறிப்புகள், கவிதைகள் வழியே அவரின் புரட்சிகர அரசியலை அறிய முடிகின்றது.
படிக்க :
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
சுருக்கமான வாழ்க்கை வரலாறு
1900-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ம் தேதி இன்றைய உத்தரபிரதேசம் ஷாஜான்பூர் மாவட்டத்தில் உள்ள வசதிமிக்க ஒரு நிலப்பிரபுவின் குடும்பத்தில் சாபிகுல்லாகான், மஹருன்னிசா ஆகியோருக்கு மகனாக அஷ்பகுல்லாகான் பிறந்தார். ஜெண்டாலால் தீக்ஷித்-தால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட மெயின்பூரி ‘சதி’ (1918) சம்பவமே அஷ்பகுல்லாகான் புரட்சிர இயக்கத்தினுள் நுழைவதற்கான உந்துதல் என்றால் அதுமிகையல்ல. அச்சம்பவத்தின் போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
வங்காளத்தைச்சேர்ந்த கனையலால் தத், குதிராம் போஸ் ஆகிய தியாகிகளின் வரலாற்றை அஷ்பகுல்லாகான் அறிந்திருந்தார். அவர் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் திடீரென பிரிட்டிஷ் போலீசு ரெய்டு நடத்தியது. மெயின்பூரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவரான ராஜாராம் பாரதீயா கைது செய்யப்பட்டார். அப்போது முதலே உத்தர பிரதேசத்தில் உள்ள புரட்சியாளர்களுடனான தொடர்பை எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தார். அவரின் நண்பரான பனார்சிலாலிடம் (பின்னாளில் காக்கோரி சதி வழக்கில் அப்ரூவர் ஆனவர்) மெயின்பூரி சதி வழக்கில் தலைமறைவான ராம்பிரசாத் பிஸ்மில்லை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டார்.
1920-ல் பிரிட்டிஷ் அரசரின் பொது மன்னிப்பினால் மெயின்புரி வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் பிஸ்மில் தண்டனையில் இருந்து தப்பினார். ஷாஜன்பூருக்கு திரும்பிய அவருடன் நட்பை உருவாக்கிக்கொண்ட அஷ்பகுல்லாகான் , பிஸ்மில் இறக்கும்வரை அவருடனேயே பயணித்தார்.
அடுத்த ஏழு ஆண்டுகள் அவர்கள் இணைபிரியா போராளிகளானார்கள். அவர்கள் இருவரும் சுவராஜ் கட்சியில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் இந்துஸ்தான் ரிபப்ளிகன் ஆர்மி (HRA) அமைப்பில் இணைந்து காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதுடன் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையிலும் (1925ம் ஆண்டு) பங்கேற்றனர்.
காக்கோரி கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் அவ்வழக்கில் சிறைபடுத்தப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக நேபாளத்திற்கு சென்றார். அங்கிருந்து கான்பூர் சென்றார். டோல்கன்ச்சில்(தற்போதைய ஜார்கண்ட்- புலமாவ் மாவட்டம்) இருந்து கிளம்புவதற்கு முன்னர் விடுதலைப் போராட்ட வீரரும் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியருமான கணேஷ் சங்கர் வித்யார்தியை சந்தித்தார். பின்னர் வேறொரு பெயரில் ஆறு மாதங்கள் தலைமறைவாக கிளார்க் வேலை செய்தார். மீண்டும் நேபாளம் செல்வதற்காக டெல்லி வழியே தொடர்ச்சியான, சிறிதும் ஓய்வற்ற வகையிலான பயணங்களை மேற்கொண்டார். வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அஷ்பகுல்லாகானுடன் அறையில் தங்கி இருந்த நண்பன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
அஷ்பகுல்லாகான் புரட்சியாளர் மட்டுமல்ல, ஹஸ்ரத், வர்சி ஆகிய பெயர்களில் கவிதைகள் எழுதி வந்தார். ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்ற பெரும் ஆசையுடன் இருந்தார். காக்கோரி சதி வழக்கில் தலைவர்களான அஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங் ஆகியோர் 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி காலனிய அரசால் வெவ்வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.அவ்வழக்கின் நான்காவது புரட்சியாளரான ராஜேந்திர நாத் லகிரி இரு நாட்கள் கழித்து தூக்கிலிடப்பட்டார்.
புரட்சிகர சிந்தாந்தம்
மெய்ன்புரி சதி வழக்கில் தன்னுடன் படித்த சக மாணவனைக் கைது செய்ததில் இருந்து அஷ்பகுல்லாகானின் காலனிய எதிர்ப்பு இயக்கத்தின் தொடர்பு துவங்கியது. எட்டாம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருந்த வால்டர் ஸ்காட்-ன் “Love of Country”
என்ற பாடல் புரட்சிகர அரசியல் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
எட்ருஸ்கன் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட ராணுவத் தளபதியான பப்லியஸ் ஹொராசியஸ் காக்ல்-ன் கதை அஷ்பகுல்லாகானிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் பாடலை பலமுறை தன்னுடைய எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.

Very good post.