1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட இயக்கம் சொல்லத்தக்க பெரிய அளவிலான மக்கள் இயக்கங்களை திட்டமிடவில்லை. அநேகமாக காங்கிரஸ் இயக்கம் முடங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.  ஆனால், 1947-ல் தேச விடுதலை, இது எப்படி சாத்தியம் ஆனது?

1939-ல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்த இந்தப் பேரழிவு, 1945-ல் முடிவுக்கு வந்தது. 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இந்த உலகப்போரில் தம் உயிரை  ஈந்தனர். போரின் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கனவு இருந்தது. அதாவது, ஜெர்மானிய ஹிட்லர், இத்தாலிய முசோலினி, கிழக்கே ஜப்பான் ஆகியோர் இணைந்து ஒரு வேளை சோவியத் யூனியனை அழித்தால் மவுனமாக நாம் அதை அனுமதிப்போம் என்பதே அக்கனவு.

படிக்க :
♦ வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !

♦ The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

1941-ம் ஆண்டு ஜூன்-22 அன்று ஹிட்லர் சோவியத்தின் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், வரலாறு அமெரிக்காவின் கனவை மண்ணாக்கியது. சோவியத் படைகள் ஒருவேளை ஹிட்லரை அழித்திடாமல் இருந்திருந்தால், ஹிட்லர் அமெரிக்காவையும் அழித்திருப்பான் என்பதே உண்மை.

இங்கே, இந்தியாவில் உலகப்போரின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது என தோழர் பசவ புன்னையா பிற்காலத்தில் எழுதினார். கட்சி பாசிச யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தது. இந்த நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, இன்னும் கூட சற்று நீக்குப்போகுடன், தந்திரோபாயமாக நிலைமையை கையாண்டு இருந்திருக்கலாம் என பின்னாட்களில் கட்சி தன் விமர்சனம் செய்துகொள்ள வேண்டியிருந்தது.

கட்சியின் இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸின் பெரும் செல்வந்தர்களும் தலைவர்களும் தம் மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அதே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், பாசிசம் தோல்வி அடைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். காரணம், போரின் போக்கும் போரின் முடிவும் இந்தியாவின் விடுதலையை பாதிக்கும் என்பதை அவர்களும் உணர்ந்து இருந்தார்கள்.

குறிப்பாக சோவியத் வெற்றி பெறுவதும் சரி, வீழ்வதும் சரி, அது சோவியத்துடன் நின்று விடப்போவதில்லை, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனையும், உலகெங்கும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் இயக்கங்களையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை, அத்தகைய முற்போக்காளர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களும் மட்டுமே அன்று புரிந்து கொண்டு இருந்தனர்.

இப்பின்னணியில்தான் 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு இயக்கம் – Quit India” தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று காந்தியும் பிற தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி, பிரிட்டிஷ் அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

கூடவே, கம்யூனிஸ்ட்டுக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு ஆகியன குறித்தும் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டு, கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறு தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. “…இந்த இரண்டு வருடங்களில் எங்கள் தோழர்கள் நான்கு தோழர்கள் (கேரளாவில் கையூர் தியாகிகள்) பிரிட்டிஷ் ஆட்சியால் தூக்கில் இடப்பட்டார்கள். 400 தோழர்கள் வரை இன்னும் சிறையில் உள்ளனர். 100 தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களுக்கு செய்யும் உதவியை பார்த்தீர்களா?” என்று எழுதினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தின் மிக உயர்ந்த ஜொலிக்கின்ற வைரம் இந்தியாவே என்று சொன்ன பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, இனிமேலும் நாம் இந்தியாவில் காலம் தள்ள முடியாது என்று புலம்ப வைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு இறுதி நெருக்கடியை கொடுத்தது 1946 கப்பற்படை புரட்சிதான்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று உத்தரபிரதேசம், மதுபங்கா காவல் நிலையம் முற்றுகை, பிகார், வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில்,  பல நூறு மக்களை போலீசும் ராணுவமும் சுட்டுக் கொன்றது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது. இடையில் வந்ததுதான் வங்கப்பஞ்சம், அது அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சரச்சில் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கையான பஞ்சம். இந்தியாவில் இருந்த, இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று, இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடியக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்.

****

1946-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி அன்று, பம்பாயில் பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த இந்திய மாலுமிகள், HMIS தல்வார் என்னும் போர்க்கப்பலில் இருந்து பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஏற்றிப் பறக்கவிட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் மோசமான, கொடூரமான நடத்தையைக் கண்டித்தும் தங்களது பிற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வே மேலோங்கி இருந்தது. தொடர்ந்து மேலும், பல கப்பல்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டம் கராச்சி, சென்னை தூத்துக்குடி என இந்தியா எங்கும் பரவியது.

போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக, லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்கள் தம் வீடுகளில் சப்பாத்தி, ரொட்டிகளை சுட்டு பழங்களுடன் சுமந்து சென்றுப் போராடும் கப்பற்படை வீரர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ராணுவ வீரர்களை ஏவி, மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆனால், சக வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது. அதிகாரிகளின் உத்தரவை படை வீரர்கள் மீறியதை நவீன காலத்தில் அநேகமாக முதல் முறையாக அங்கேதான் பார்க்க முடிந்தது.

போராடும் வீரர்கள், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டியபோது, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஆதரவு தர மறுத்தனர். கட்டுக்கோப்பான ராணுவ வீரர்கள் தம் உறுதிமொழிக்கு மாறாகப் போராட்டத்தில் இறங்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாளை விடுதலை பெற்ற இந்தியாவிலும் அவர்கள் இப்படித்தான் அரசை எதிர்த்துப் போராடக்கூடும் என்றும், இதைக் காண 125 வயது வரை வாழ வேண்டுமா என்றும் வெளிப்படையாகவே பேசினார் காந்தி. கம்யூனிஸ்டுகளும் மக்களும் ஆதரிக்க, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கைவிட, மகத்தான ஒரு புரட்சி சில நாட்களில் கைவிடப்பட்டது.

****

1905-ம் ஆண்டில் சோவியத் புரட்சியை தொடங்கி வைத்த பொட்டெம்கின்னும், 1917-ல் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டு வீசிப் புரட்சி துவங்கியதை அறிவித்த அரோரா என்ற கப்பலும், பிற்காலத்தில் சோவியத் அரசால் பாதுகாக்கப்பட்டன. தல்வார் கப்பல் எங்கே ?

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க