செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சிலேந்தி மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

டந்த பிப்ரவரி 04, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வான செளரி செளரா சம்பவத்தின் நூற்றாண்டு தொடக்கமாகும். செளரி சௌரா அமைந்துள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த வரலாற்று சம்பவத்தின் நூற்றாண்டை ஒட்டி ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்த மோடி-யோகி அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக தபால்தலை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் மோடி.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை பட்டா போட்டுக்கொடுக்கும் ஏகாதிபத்திய தாசர்கள், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைக் கொண்டாடுவதும் போற்றிப் பேசுவதும் ஏன்? என்பதை நாம் கவனிக்கவும், அதே நேரத்தில் இந்திய மக்களின் விடுதலையை நேசிப்போர் இந்த நூற்றாண்டை கொண்டாடவும் சௌரி சௌரா தியாகிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

இந்திய மக்களின் எழுச்சியும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும்

1920-களின் இந்தியா ஒரு கொந்தளிப்பான சூழலில் இருந்தது, ஏகாதிபத்திய நாடுகளின் உலக மறுபங்கீட்டுக்காக ஒரு யுத்தம் (முதல் உலகப்போர்) நடந்து முடிந்திருந்தது. பசி, பஞ்சம், நோய் என அவை தோற்றுவித்த நெருக்கடிகளின் சுமை தாளாமல் உலகம் முழுக்க மக்களின் போராட்டங்கள் அலையாய் எழும்பின. 1917-ல் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் தனது நாட்டில் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனக்கான சோசலிச அரசை கட்டி எழுப்பி உலக மக்களுக்கே கலங்கரை விளக்கமாக இருந்தது. இத்தகையதொரு சூழல் காலனி நாடுகளில் தேச விடுதலை போராட்டங்களை உக்கிரமடையச் செய்திருந்தது.

இந்தியாவில் வீச்சாக வெடித்துக் கிளம்பியிருந்த தேச விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க 1919-ல் ‘ரெளலட்’ எனும் அடக்குமுறை சட்டத்தை மக்கள் மீது ஏவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். விசாரணை இல்லாமலே ஒருவரை கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரத்தை இச்சட்டம் காலனி அரசுக்கு கொடுத்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்த சட்டத்துக்கு எதிராக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் மீது ஜனரல் டயர் என்ற இராணுவ அதிகாரி  துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 400 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளே தெரிவிக்கின்றன. உண்மையில் இதைக்காட்டிலும் அதிகமானவர்களே கொல்லப்பட்டிருந்தனர்.

இத்தகைய அடக்குமுறைகள் மூலம் இந்திய மக்களின் எழுச்சியை அடக்கிவிட முடியும் என நினைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஆனால், ஜாலியன் வாலாபாக் படுகொலையோ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் எண்ணெய் வார்த்தது. தேசவிடுதலைப் போராட்டத் தீ நாடெங்கும் பற்றி எரிந்தது.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் :

குமுறி எழுந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ‘ரௌலட்’ போன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு ஒடுக்க முடியவில்லை. மக்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் அரசாளும் உரிமையைக் கேள்விக்குட்படுத்திய சமயத்தில், ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு நோகாத வகையிலான போராட்ட வழிமுறைகளை காந்தி துவங்கி வைத்தார். அதுவே அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்.

அனைத்து தரப்பு மக்களும் இதில் தீவிரமாகப் பங்கெடுக்கத் தொடங்கினர். அரசுப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு துணிகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கும் செல்லாமல் புறக்கணித்தல், என நாட்டு மக்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்க மறுத்தார்கள்.

போராட்டங்கள் புரட்சிகர திசைவழியில் செல்லாமல், தங்களது இருப்புக்கு ஆபத்தற்ற காங்கிரசால் தலைமை தாங்கப்படாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றை நினைத்து கலங்காமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பிரிட்டிஷ் அரசை நிலைகுலையச் செய்த அந்தச் சம்பவம் சௌரி சௌராவில் நடந்தது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சௌரி சௌரா எனும் இடத்தில் அஹிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று பேர் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். ஆத்திரமடைந்த மக்கள் போலீசு குண்டர்களை துரத்தியடிக்கிறார்கள், திரண்டு நின்ற மக்களின் கோபாவேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீசு நிலையத்திற்குள் ஓடிய 22 போலீசுகளையும் தீ வைத்து கொளுத்துகிறார்கள் மக்கள்.

மக்களின் தியாக உணர்வுமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை காந்தி மற்றும் காங்கிரசின் அஹிம்சை போராட்ட வழிமுறைகள் மோசடி செய்தன. மக்களுக்கான நிரந்தரத் தீர்வை அவை வழங்கமறுத்ததோடு, மக்களின் இயல்பன போர்க்குணமிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தன. 2012க்குப் பின்னர் இந்தியாவில் ஆரம்பித்த அன்னா ஹசாரே போராட்டங்களைப் போல் வரம்புக்குட்பட்ட போராட்டங்களாகவும், அன்றைய ஆளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நோகாத போராட்டங்களாகவும் இருந்தன. அதை உடைத்தது சௌரி சௌரா.

சௌரி-சௌராவின் தீ இந்தியா முழுமைக்கும் பரவும் ஆபத்து இருந்ததை உணர்ந்த காந்தி, இதையே சாக்கிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். 22 போலீசாரை கொன்ற வழக்கில் ஒத்துழையாமை இயக்க போராளிகள் 228 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 19 பேருக்கு தூக்கு தண்டனையும் 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

சௌரி சௌரா நூற்றாண்டை ஏகாதிபத்திய தாசர்கள் கொண்டாடுவது ஏன்?

சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த மோடி, உரையாற்றுகையில் “நாடு சுயசார்பு அடைவதும், வளர்ச்சி அடைவதும் ஒவ்வொரு போராட்ட வீரருக்கும் நாடு செலுத்தும் அஞ்சலியாகும்”, “சௌரி சௌரா நூற்றாண்டை நாம் மக்களின் வளர்ச்சிக்காக நமது கனவுகளை நனவாக்குவதற்கு பல்வேறு உறுதிகளை மேற்கொள்ளும் ஆண்டாகக் கொள்ள வேண்டும்” என்றெல்லாம் பேசியுள்ளார்.

உண்மையில், ஏகாதிபத்தியங்களின்  நலனுக்காகவும்  அவர்களின் உள்ளூர் பாதந்தாங்கிகளான அம்பானி-அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகளின் நலனுக்காகவும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்தும் மோடி அரசு இதனை எதிர்த்துப் போராடும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் தீவிரமாக ஒடுக்கி வருகிறது.

உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்பேரில் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக, இந்திய விவசாயத்தின் சுயசார்பை அழிக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசு. அதை, எதிர்த்து போராடும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அணுகும் முறை இதற்கு எடுப்பான உதாரணம்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒடுக்க “ரௌலட் சட்டம்”, இன்றோ ‘சுதந்திர நாடான’ இந்தியாவில், கார்ப்பரேட்-காவி பாசிச கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க ஊஃபா சட்டம், என்.ஐ.ஏ, போன்ற பல கொடூர அடக்குமுறைக் கருவிகள். சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கான ஆலோசனைகளாக உருவாக்கப்பட்ட “டூல்கிட்”டை சமூக வலைதளங்களில் பகிர்ந்த திஷா ரவி எனும் 21 வயது இளம்பெண், தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். இப்படி மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்கள் போராட்டங்களை ஆதரித்தும் மூச்சுவிடுவதை கூட ‘தேச’ விரோதமாக்குகிறார்கள் பாசிஸ்டுகள்.

இப்படி மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு நிகராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் மோடி கும்பலால் சௌரி சௌரா நூற்றாண்டை ஏன் கொண்டாடுகிறது ? எப்படி கொண்டாட முடிகிறது ?

பகத் சிங் உள்ளிட்ட மக்களின் நெஞ்சில் நிறைந்த தவிர்க்க முடியாத விடுதலைப் போராட்ட வீரர்களின் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வர்க்கப் பார்வை ஆகிய உள்ளடக்கத்தை உருவி விட்டு அவர்களை வெறும் ‘தேச’பக்தர்களாகக் காட்டி தங்களோடு இணைத்துக் கொள்வதில் வல்லவர்கள்தான் இந்துமத வெறிப் பாசிஸ்ட்டுகள்.

சமீபத்தில் கூட மாவீரன் பகத் சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசும் வரிசையில் பச்சைத் துரோகி சாவர்க்கரையும் இணைத்துப் பேசியிருந்தார் மோடி. அதைப் போலவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமைப் போராட்டத்தில் நடந்த அரசு வன்முறைக்கு மக்கள் கொடுத்த தக்க பதிலடியை வெறும் தேசபக்தப் போராட்டமாகக் காட்டி, தங்களது ‘தேச’பக்தியோடு இணைத்துக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த சூழலில் சௌரி சௌரா தியாகிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி காவி பாசிஸ்டுகளின் ஏகாதிபத்திய ஆதரவு சட்டங்களுக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் மறுகாலனியாதிக்கத் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களை அமைப்பாக திரட்டி போராடுவதுதான் சௌரி சௌரா நூற்றாண்டு நிறைவை நாம் கொண்டாடுவதற்கான பொருள் !!


பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க