ஜாலியன் வாலாபாக் படுகொலை – சித்திரம்.

தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு முன், 1919 ஏப்ரல் மாதத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அந்தப் படுகொலையின் விவரங்களை நமக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். பின்னாட்களில் பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கர்னல் டயர் என்பவன் தனது கட்டளைக்குட்பட்ட பலோச் படையணியைச் சேர்ந்த 90 வீரர்களுக்கு போராட்டக்காரர்களைச் சுடுமாறு உத்தரவிட்டான். அந்த தொண்ணூறு வீரர்களில் 65 பேர் கூர்க்காக்கள் மற்றும் 25 பேர் பஞ்சாபிகள்.

கர்னல் டயர் .

அந்த வீரர்கள் தாம் சுமந்து கொண்டிருந்த லீ என்ஃபீல்ட்303 துப்பாக்கிகளால் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார்கள். இடையில் தோட்டாக்களை நிரப்பிக் கொள்ள எடுத்துக் கொண்ட அவகாசம் தவிர சுடுவதை நிறுத்தவே இல்லை. வெறும் பத்தே நிமிடத்தில் நிராயுதபாணிகளாய் நின்ற அந்த மக்களை நோக்கி 1600-க்கும் மேலான தோட்டாக்கள் சுடப்பட்டன. சுட்டவர்கள் அத்தனை பேரும் இந்திய வீரர்கள் தாம்.

அங்கே கூடிய போராட்டக்காரர்கள் அனைவரும் தனது உத்தரவுக்கு எதிராக கூடியிருந்ததாக அரசு அறிவித்தது. 379 பேர் கொல்லப்பட்டு 1100 பேர் காயமடைந்தார்கள் என தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கை அரசு வெளியிட்டது. ஆனால், ஆயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டதாக காங்கிரசு கட்சி அறிவித்தது. உண்மையான எண்ணிக்கை என்னவென்பது எப்போதுமே நமக்குத் தெரியப் போவதில்லை. மரணித்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை குறைவாக இருப்பதை பல்வேறு காரணங்களுக்காக என்னால் நம்ப முடியவில்லை. எப்படியிருந்தாலும், இந்தச் சம்பவம் உலகத்தை உலுக்கியது. ரவீந்தரநாத் தாகூர் வெள்ளை அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட வீரத்திருமகன் (Knighthood) பட்டத்தை துறந்தார்.

காலனிய ஆட்சியில் நடைபெற்ற அன்னிய பொருட்கள் எரிப்புப் போராட்டம்.

நம்மில் பலருக்கும் அந்தப் போராட்டக்காரர்கள் ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் போராடினர் என்பது தெரிந்திருக்கும். ரவுலட் சட்டத்தில் என்னதான் பிரச்சினை? அந்தச் சட்டம் எந்த ஒரு இந்தியரையும் விசாரணையின்றி சிறையிலடைக்க முடியும் என்றது. அதாவது முன்னெச்சரிக்கை கைது. எந்த ஒரு குடிமகனையும் அவன் குற்றமிழைக்காத நிலையிலும் கைது செய்து சிறையில் அடைக்கமுடியும். அதாவது அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும். இந்தியர்கள் அந்தக் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து கிளர்ந்தார்கள். லாகூரைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று “வாதமும் இல்லை, வக்கீலும் இல்லை, மேல் முறையீடு இல்லை” என ரவுலட் சட்டத்தை விவரித்தது. முன்னெச்சரிக்கை கைது என்றால் என்னவென்பதற்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஜாலியன் வாலாபாக் போராட்டத்திற்கான பின்னணி இது தான். அந்தக் கொடுமையான சட்டத்தை எதிர்த்து நமது மக்கள் அன்றைக்குப் போராடி மாண்டனர். குற்றப்பத்திரிகையோ, விசாரணையோ இன்றி சக இந்தியன் ஒருவனை வெள்ளை அரசாங்கம் கைது செய்வது அநீதியானது என்று அன்றைய மக்கள் கருதினர். அந்தப் போராட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. ஜாலியன்வாலாபாக் போராட்டத்திற்குப் பின் ரவுலட் சட்டம் சில திருத்தங்களோடு அமல்படுத்தப்பட்டது. இது 99 ஆண்டுகளுக்கு முந்தைய காலனிய இந்தியாவின் வரலாறு. நாம் சமகாலத்திற்கு வருவோம்.

சந்திரசேகர் ஆசாத் ராவன், (தோளில் நீல நிற துண்டு அணிந்திருப்பவர்).

உத்திரபிரதேச அரசாங்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் ஆசாத் ராவன் என்கிற தலித் தலைவரை எந்த வழக்கும் இன்றிக் கைது செய்தது. அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட ஆசாதுக்கு மற்ற சாதாரண கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கிடைக்கும் எந்த விதமான மனித உரிமைப் பாதுகாப்போ விசாரணை நடைமுறைகளோ பொருந்தாது. எந்தவிதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், விசாரணையும் நடத்தாமல் 12 மாதங்கள் வரை அவரைச் சிறையில் அடைக்க முடியும். ஒருவேளை அவர் விடுதலை செய்யப்பட்டால் வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மீண்டும் அவரைக் கைது செய்யவும் முடியும்.

கடந்த மே 2-ஆம் தேதியன்று ஆசாத்தின் நிர்வாக ரீதியிலான சிறைக் காலம் முடிவுற்றது. அதே நாளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ‘ஆலோசனைக் குழு’ அவரது சிறைக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்து அறிவித்தது. தலித்துகளின் வீடுகளில் உணவருந்துவதாக வாக்குறுதி அளிப்பதை விட, தலித் மக்களை சமமாக நடத்தவும், அவர்களுக்கு அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள சட்ட ரீதியான உரிமைகளை மதிக்கவும் நமது தலைவர்கள் முன்வர வேண்டும்.

சந்திரசேகர் ஆசாத் ராவனை விடுவிக்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

உயர்நீதிமன்றமும் கூட ஆசாத்தை விடுவிக்க மறுத்து விட்டது. அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இத்தனைக்கும் இது முன்னெச்சரிக்கை கைது தான்; முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றமே முன்னெச்சரிக்கை கைது சட்டங்களை “அநீதியான சட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் போல எண்ணற்ற சட்டங்களைப் பயன்படுத்தி மைய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குப் பிடிக்காதவர்களை கைது செய்கின்றன.

காலனிய அரசே கூடச் செய்யத் தயங்கியதை நாமே நமது மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளோம். சக இந்தியர்களின் மீது இவ்வாறான அநீதியை நிகழ்த்தும் நீதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இங்கே பஞ்சமே இல்லை. ஜாலியன்வாலாபாக் படுகொலையை நான் விரிவாக விவரித்ததற்கு ஒரு காரணமிருக்கிறது. அன்றைக்கு அந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களான கூர்க்காக்களும், பஞ்சாபிகளும் தான். இந்திய வீரர்கள் தான் அன்றைக்கு அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த சக இந்தியர்களை நோக்கி துப்பாக்கிகளை உயர்த்திக் குறிபார்த்துச் சுட்டனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது கேட்பதற்கு ஏதோ ஆபத்தில் இருந்து தேசத்தைப் பாதுகாக்கும் சட்டம் போல் இருக்கலாம். ஆனால், எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கையின் விளைவாகவும் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படவில்லை. சொல்லப் போனால், பெரும்பாலான முன்னெச்சரிக்கை கைதுச் சட்டங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

குஜராத் அரசு தன்னுடைய சமூக விரோத தடைச் சட்டத்தின் கீழ் தனது சொந்த மக்களைக் கைது செய்ய முடியும். குண்டாஸ் சட்டம் என பிரபலமாக குறிப்பிடப்படும் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கர்நாடகாவுடையது. மாநிலங்களில் உள்ள தடுப்புச் சட்டங்களின் கீழ் ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை ஒருவரை சிறையில் அடைக்க முடியும். சாராயக் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் மீது தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்.

2016-ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழ்நாட்டுச் சிறைகளில் சுமார் 1,268 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் உயர்கலைப் பட்டம் பெற்றவர்கள்; 21 பேர் பெண்கள் என்கிறது இந்து பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு ஒன்று. தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி, 2015-ஆம் ஆண்டு தெலுங்கானாவில் 339 பேரும், கர்நாடகத்தில் 232 பேரும் குஜராத்தில் 219 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், வனக் குற்றங்களில் ஈடுபடுவோர், குண்டர்கள், கடத்தல்காரர்கள், சேரி நிலத்தை அபகரிப்பவர்கள் மற்றும் திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் உள்ளிட்டோரின் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள சட்டத்தின் பெயர்.

இவ்வாறு தெளிவற்றும், குழப்பமாகவும் சட்டத்திற்குப் பெயரிட்டிருப்பதே உள்நோக்கம் கொண்டதாகும். காலனிய ஆட்சியாளர்களைப் போலவே, இந்திய ஜனநாயக அரசும் தனது குடிமக்களை தொல்லையாக கருதுகின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே எந்தக் குற்றமும் செய்யாத குடிமக்களை தான் விரும்பியபடி கைது செய்வதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துள்ளது. சமகாலத்தில் நமது சக இந்தியர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அநீதியைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே பாட புத்தகங்களில் 1919-இல் நடந்த படுகொலைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் – போலித்தனம்.

நன்றி: Aakar patel – outlook
தமிழாக்கம்: சாக்கியன்
மூலக்கட்டுரை
How’s Rowlatt Act That Led To Jallianwala Different From NSA That Holds Dalit Leader Azad In Jail Sans Trial?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க