ந்தியாவின் இரண்டு முக்கியமான பயிரிடும் பருவங்களில் ஒன்று குறுவை. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் இந்தக் காலகட்டத்தில் வடநாட்டில் கோதுமை – கடுகும், தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நெல்லும் பிரதானமாக பயிர் செய்யப்பட்டு வருகின்றன. அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய வேலைகள் மும்முரமாக நடக்கும் காலமிது. ஆனால், நாடெங்கும் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுவதால் வழக்கமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நெருக்கடிக்கும் பெரும் வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள் விவசாயிகள்.
ஏற்கெனவே வாங்கியிருந்த கடன்களின் அழுத்தம், தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை – அதனால் அதிகரித்துவரும் டிராக்டர் வாடகை, மின் கட்டண உயர்வு (பல மாநிலங்களில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் இல்லை) இவை உருவாக்கியுள்ள நெருக்கடி ஒருபக்கம், உரிய காலத்தில் மழைப்பொழிவு இருந்தும் போதிய உரங்கள் கிடைக்காத நெருக்கடி மறுபக்கம் என விவசாயிகள் பல்முனை நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். விதைப்புப் பருவம் தவறி விடுமோ, முளைத்த பயிர்கள் வளராதோ, கதிர்விட்டவை சோடை போய்விடுமோ எனத் தாளமுடியாத மன உளைச்சலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் நாட்கணக்கில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போதே சில விவசாயிகள் நிலைகுலைந்து வீழ்ந்து  இறந்துள்ளனர். அதே மாநிலத்தில் இன்னும் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தனை உயிர்ப்பலிகள் நேர்ந்தாலும், உரத் தட்டுப்பாடு அறவே இல்லை எனப் புளுகும் அதிகாரிகள், அமைச்சர்களின் பேச்சுகள் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
படிக்க :
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
இதன் விளைவாக, விவசாயிகள் ஆங்காங்கே உரக் கிடங்குகளுக்குச் சென்று உரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் தொகுதியிலேயே    விவசாயிகள் இவ்வாறு உர மூட்டைகளைக் கைப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. பல இடங்களில் தனியார் உரக் கிடங்குகளில் உள்ள உர மூட்டைகளைக் கைப்பற்றி எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.
இவ்வாண்டில் தமிழ்நாட்டிலும் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்குப் போதுமான உரங்கள் இல்லை. மாநிலத்துக்குத் தேவையான உரங்களை அனுப்பி வைக்குமாறு மாநில வேளாண் அமைச்சர், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பல்வேறு கட்சித் தலைவர்களும் இப்பிரச்சினை தொடர்பாக அறிக்கைவிட்டு வருகின்றனர். தஞ்சை, ஈரோடு, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதுமான உரங்கள் கிடைக்காத நிலையில், அடுத்த லாரி எப்போது வருமென்று உரக்கடைகள் முன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.
உரத் தட்டுப்பாட்டையும், விவசாயிகளின் அவலநிலையையும் பயன்படுத்திக் கொண்டு, தாறுமாறாக விலையேற்றி கள்ளச்சந்தையில் விற்பது ஒருபக்கம்; களைக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துகள் போன்ற இடுபொருட்களைச் சேர்த்து வாங்க வேண்டும், பழைய கடன்களை அடைத்தால்தான் உரங்களைத் தருவோம் என்றும் தனியார் உரக்கடைகள் விவசாயிகளைச் சுரண்டி வருவது மறுபக்கமும் நடந்து கொண்டிருக்கிறது.
விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு பாடம் சொல்லித்தர நினைத்து, மோடி அரசு இத்தகைய பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவரும் விவசாயப் போராட்ட முன்னணியாளருமான ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போதைய உரத் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இத்தகைய நெருக்கடிகளுக்குப் பின்னால் இந்திய அரசின் விவசாய விரோத – கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே ஒளிந்திருக்கின்றன.
இறக்குமதியே முதன்மைக் காரணம்
இந்தியாவில் 1906-ம் ஆண்டே இராணிப்பேட்டையில் உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருந்தாலும் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, பெருமளவில் இரசாயன உரப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் உரத் தேவைக்கு ஏற்ப புதிய உரத் தொழிற்சாலைகளை அரசு நிறுவவில்லை. நாடு முழுவதும் 56 பெரிய ஆலைகள், 72 நடுத்தர மற்றும் சிறு ஆலைகள்  இயங்கினாலும், 9 பொதுத்துறை மற்றும் இரண்டு கூட்டுறவு உரத் தொழிற்சாலைகள்தான் அரசு சார்பில் இயங்கி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் உரம் வாக்குவதற்காக வரிசையில் அலைமோதும் விவசாயிகள்.
இவை, தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாக இல்லை. மேலும் உரத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் தேவைக்கேற்ப இல்லை. இதனால் நீண்ட காலமாகவே, தேவையான உரங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. யூரியா, டி.ஏ.பி போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் பொட்டாஷ் உரம் மற்றும் அதற்கான மூலப்பொருட்களுக்கு முழுமையாக இறக்குமதியைச் சார்ந்தே இந்திய உரச் சந்தை இயங்குகிறது.
இந்நிலையில், பாஸ்பேட் உரங்களுக்கான மூலப்பொருட்கள் ஒருசில நாடுகளில் மட்டுமே இயற்கையாகக் கிடைப்பதால், உர மூலப்பொருள் விலைகள் உலகெங்கும் பெருமளவில் உயரும் என்றும், அதன் உற்பத்தி குறைக்கப்பட்டு விடும் என்றும் சர்வதேச வேளாண்மைப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வந்தனர். இந்தியாவில் கிடைக்கும் பாஸ்பேட்டும் நாட்டின் உரத் தேவைகளுக்கு இனிவரும் 29 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
டி.ஏ.பி. போன்ற உரத் தேவைகள் குறைவாக உள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் கூட பாஸ்பேட் உரத்திற்கான மாற்றுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து வணிகரீதியில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நூற்றுக்கணக்கான வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள் உள்ள இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை. ‘சுயசார்பு இந்தியா’ என முழங்கும் மோடி அரசிலும் இதே நிலைதான்.
காங்கிரஸ் வழியிலேயே மோடி
எப்போதெல்லாம் மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு உருவாகிறதோ, அப்போதெல்லாம் மோடியும் அவரது சகாக்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவார்கள்; காங்கிரஸ் தொடங்கி வைத்ததைத்தானே செய்கிறோம் என்பார்கள். தேர்தல்கள் வந்துவிட்டாலோ, ‘‘இத்தனை ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்தது காங்கிரசு தான், அதை வேரறுக்க வேண்டும்’’ என வீரவசனம் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசை விட வேகமாக கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோதத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
அதே அணுகுமுறையைத்தான் உர இறக்குமதியிலும் மோடி அரசு கையாண்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் சௌமித்ரா சௌத்ரி குழு பரிந்துரையின் அடிப்படையில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உர நிறுவனங்கள் – முதலாளிகள் கையில் ஒப்படைத்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து அடிப்படையில் மானியம் என்ற பெயரில் நேரடியாக கம்பெனிகளுக்கே மானியத்தைக் கொடுப்பதாக அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது ஒன்றிய அரசு. மேலும், தேவைக்கேற்ப உரங்களை இறக்குமதி செய்யும் உரிமையையும் தனியாருக்கே தாரைவார்த்துவிட்டது. அதாவது, விவசாயத்தைக் கார்ப்பரேட் பிடியில் சிக்கவைக்கும் சிலந்தி வலையின் ஓர் அங்கமே இத்திட்டம். நாட்டை மறுகாலனியாக்கும் நோக்கத்தில் காங்கிரசு கொண்டு வந்த இந்த விவசாய விரோத திட்டத்தைத் தீவிரமாகவும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு.
மானிய வெட்டும் உரத் தட்டுப்பாடும்
உற்பத்தி, இறக்குமதி, விலை நிர்ணயம் என எல்லாவற்றிலும் தனியாரின் ஆதிக்கத்தை அனுமதித்த நிலையில், அதனால் தொடர்ந்து ஏற்படும் விலையுயர்வை ஈடுகட்ட, ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமாக மானியம் என்ற பெயரில் உரக் கம்பெனிகளுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு. இத்திட்டம் உர நிறுவனங்களுக்கே அதிகம் பலனளித்தாலும், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவதைப் போல விவசாயிகளுக்கு ஓரளவு ‘குறைந்த விலையில்’ உரம் கிடைத்து வந்தது. இவ்வாண்டில், மோடி அரசு இதிலும் கை வைத்திருக்கிறது.
பறிமுதல் செய்த உர மூட்டையை விவசாயி ஒருவர் தன் தோளில் தூக்கிச் செல்கிறார்.
கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.1,33,947 கோடி உர மானியத்திற்காக ஒதுக்கிய மோடி அரசு, நடப்பாண்டில் ரூ.79,530 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ரூ.54,417 கோடி வெட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் ஒருமுறையும் மானியத்தொகையை உயர்த்தியதால், மொத்தமாக ஒரு இலட்சம் கோடியைத் தாண்டும் எனினும், இத்தொகை கடந்த ஆண்டை விடக் குறைவே.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியக்குறைப்பை சாக்காக எடுத்துக்கொண்ட உர நிறுவனங்கள், ‘‘சர்வதேச சந்தையில் மூலப் பொருட்கள் விலையேறிவிட்டன, போதுமான தொகையை அரசு தரவில்லை’’ என்று கூறி உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. மேலும், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு உரங்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியிருக்கின்றன. ரூ.1,200-க்கு விற்று வந்த ஒரு மூட்டை டி.ஏ.பி.யை ரூ.2,400 என நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொண்டுவிட்டன. பொதுவாக விலை உயர்வு குறித்து கோபமடைந்தாலும், வேறுவழியில்லாத இந்திய விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்தே வாங்கினர். இப்போது ஒன்றிய அரசு மானியத்தொகையை ரூ.700 அதிகப்படுத்தி மூட்டைக்கு ரூ.1,200-ஆக ஆக்கியுள்ளது. அதாவது ரூ.2,400 விலை வைக்கப்பட்ட உரத்தை விவசாயிகள் ரூ.1,200-க்கு இனி  பெறுவார்கள்.
இந்த மானியத்தையும் கூட காலங்கடந்து, அதாவது அக்டோபர் மூன்றாவது வாரத்தில்தான் வழங்கியது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குறுவை சாகுபடி தொடங்கிய பிறகே, அதாவது ‘கண்கெட்ட பிறகே சூரிய வணக்கம்’ செய்திருக்கிறது மோடி அரசு. இதன் விளைவாக உர நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து, கடும் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. இப்படி குறுவை சாகுபடியை சீர்குலைத்துவிட்டு, உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்கிறார் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மாண்டவியா. உரம் கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட உ.பி.யிலோ உரத் தட்டுப்பாடே இல்லையென அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் ஊடகங்களின் முன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நிதியாண்டில் (2020−21) உரத் தயாரிப்புக்கான பெட்ரோலிய மூலப்பொருட்களின் விலை, சர்வதேசச் சந்தையில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தது. இதன் காரணமாக, நார்வே உள்ளிட்ட பல முன்னணி உற்பத்தி நாடுகள், யூரியாவின் மூலப்பொருளான அமோனியா உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துவிட்டன. இந்த உற்பத்திக் குறைவின் எதிரொலியாக அமோனியா விலை சர்வதேசச் சந்தையில் மூன்று மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.
உலகின் பல நாடுகள் உரத் தேவைகளுக்கான மூலப்பொருள் தேவையை நிறைவு செய்ய பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலை நிர்ணய ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட விலை நிர்ணய ஒப்பந்தங்களை இந்திய அரசும் கடந்த ஆண்டுவரை செய்து வந்தது. அப்படி பெறப்பட்ட மூலப் பொருட்கள் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த ஆண்டில் மோடி அரசு, தனியார் உர ஆலைகள் அவரவர் தேவைக்கு ஏற்ப தனித்தனியாக சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம் என்று தன் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. அதே சமயத்தில், ஆகஸ்ட் மாதத்தில் உரத் தட்டுப்பாடு பூதாகரமாக தெரியத் தொடங்கிய போது, உற்பத்திக் குறைவுக்கு தனியார் ஆலைகள்தான் காரணம் என்றனர் மோடி அரசின் அதிகாரிகள்.
இன்னொரு பக்கத்தில், இஃப்கோ (IFFCO) நிர்வாக இயக்குநர் யு.கே. அவஸ்தி, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலையுயர்வே காரணமென சாதிக்கிறார். சர்வதேச விலையுயர்வு ஒரு அம்சம்தான் என்றாலும், மோடி அரசின் மானிய வெட்டும், விவசாய விரோதக் கொள்கையும்தான் காரணம் என்பதைப் பற்றி இருதரப்புமே மூச்சுகூட விடுவதில்லை.
உரத்தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகள்.
தனியார்மயம், கார்ப்பரேட்மயம் என்றாலே இலஞ்ச ஊழல் தவிர்க்க முடியாத அம்சம் என்பது இந்த விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது. விலை உயர்வுக்கு நியாயம் கற்பித்துப் பேசும் அவஸ்தி மீது, சி.பி.ஐ தொடுத்துள்ள ஊழல் வழக்கை உதாரணமாகக் கூறலாம்.
மானியத்தில் மஞ்சள் குளிக்கும் அதிகார வரக்கம்:
உர இறக்குமதி விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த கிசான் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதாக, கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான இஃப்கோ (IFFCO) -வின் நிர்வாக இயக்குனர் யு.கே. அஸ்வதி மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெட் (ஐ.பி.எல்) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பர்விந்தர் சிங் கெலாட் மீது கடந்த ஜூன் மாதத்தில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2013 – 2017 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் உரம் மற்றும் மூலப்பொருட்களுக்கான மானியத்தில் மோசடி செய்யும் நோக்கில், செயற்கையாக விலையேற்றத்தைக் கணக்குக் காட்டி இறக்குமதி செய்துள்ளதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான இலஞ்சமாக ரூ.685 கோடியைப் பெற்றுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதையடுத்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது, உர நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் மத்திய அமலாக்கத்துறை, துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜோதி டிரேடிங் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தின் துணைத்தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அமரேந்திர தாரி சிங்கை கைது செய்தது. அவஸ்தி மற்றும் பர்விந்தர் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கும் முன்பாக தன்னிடம் அனுமதி பெற வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில்  பிறப்பித்துள்ளது.
உரத்துக்கான மானியத்தை கம்பெனிகளுக்கே நேரடியாகக் கொடுப்பது, இறக்குமதி செய்து கொள்ளவும், விலையைத் தீர்மானித்துக் கொள்ளவும் கம்பெனிகளுக்கே அதிகாரம் கொடுத்தது போன்றவை பெரும் ஊழலுக்கு வழி செய்துள்ளன என்பதை மேற்சொன்ன வழக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
000
தேர்தல் வாக்குறுதிகளில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக சூளுரைத்த மோடியின் அரசு, உரங்களின் விலையைத்தான் இரட்டிப்பாக்கி இருக்கிறது. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு உரங்களுக்கான மானியத்தைத்தான் வெட்டிக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான ‘தூய’ ஆட்சி தரும் மோடியின் ஆட்சியில்தான் அதிகார வர்க்கம் மானியத்தின் பெயரால் மஞ்சள் குளித்து, இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கிறது.
படிக்க :
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !
விவசாயிகளோ, பருவத்தில் விதைக்க வேண்டும், தருணத்தில் உரமிட வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள். உரம் கிடைக்காத நிலையில், அலைந்து திரிந்து நெஞ்சடைத்து சாகிறார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ‘நாட்டுக்காக உழைக்கும்’ மோடியோ, கடைசி நேரம் வரை போராடும் விவசாயிகளைச் சந்திப்பதுமில்லை, அவர்களின் நலன் குறித்து சிந்திப்பதுமில்லை. நேரெதிராக, விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுவது குறித்தும், விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவது குறித்துமே மோடியின் அரசு சிந்திக்கிறது.
புளூம்பர்க் போன்ற சர்வதேச புள்ளிவிவர, பொருளாதார நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடும் உணவுப்பண்ட விலைகளும் இந்தியா போன்ற பல நாடுகளில் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளன. நல்வாய்ப்பாக, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் வறட்சியையோ பயிர்ச்சேதத்தை உருவாக்கும் பெரும் விளைவுகளையோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் அரசு உருவாக்கியுள்ள உரத் தட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் உற்பத்திக்குறைவும் சில காலம் தொடர்ந்தால் அந்நிலை நிச்சயம் ஏற்படக் கூடும்.
விவசாய விரோத வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து ஓராண்டு காலமாக அலட்டிக் கொள்ளாத மோடி, உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் சமயத்தில் பின்வாங்கியிருக்கிறது. அதே நோக்கம்தான் உரத்துக்கான மானியவெட்டிலிருந்து பின்வாங்குவதிலும் ஒளிந்திருக்கிறது. இப்போது வெளிப்படுவது விவசாயிகள் மீதான மோடியின் அக்கறையல்ல, கார்ப்பரேட் விசுவாசமே. உரிய தருணத்துக்காக அவர்கள் பதுங்குகிறார்கள்.

கிருஷ்ணராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க