சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.

டந்த செப்டம்பர் 13 ஆம் தேதி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய பாசிச மோடி அரசு அடாவடித்தனமாக 20 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த நாளான செப்டம்பர் 14 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் விளைவாக நாட்டின் உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுத்திகரிக்கப்படாத சோயாபீன், சூரியகாந்தி, மற்றும் பாமாயில் கச்சா எண்ணெய்களின் மீதான அடிப்படை இறக்குமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மூன்று வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 13.75 சதவிகிதத்திலிருந்து 35.75 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மோடி அரசின் அறிவிப்பின் விளைவாகச் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன், சூரிய காந்தி எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரி என்பது 5.5 சதவிகிதத்தில் இருந்து 27.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஒன்றிய மோடி அரசானது மூன்று எண்ணெய்களுக்கும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் வரியையும் சமூக நல கூடுதல் கட்டணங்களையும் விதித்துள்ளது.


படிக்க: செயற்கைக்கோளின் துணைகொண்டு சுங்கக்கட்டணம் வசூல்: இனி, விண்ணை முட்டப்போகும் சுங்கக்கட்டணம்!


இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சவுகான், “இந்த நடவடிக்கைகளின் மூலம் அனைத்து எண்ணெய் வித்துகளுக்கும், குறிப்பாக சோயாபீன், பச்சை பயிறு போன்றவற்றிலும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ராபி பருவத்தில் எண்ணெய் வித்துகள் விதைப்பும் அதிகரிக்கும். அனைத்து விதமான எண்ணெய் வித்துகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். கடுகு, சோயா போன்றவற்றின் விளைச்சலும் அதிகரிக்கும். ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். இந்த எண்ணெய் வித்துக்கள் தொடர்பான பிற துறைகளும் நன்மைகளைப் பெறும் என எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, விவசாயிகளின் நலன்களுக்காகவே சமையல் எண்ணெய்களின் மீது இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் கூறுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள சோயாபீன் விவசாயிகளைக் கவரும் வகையிலே இறக்குமதி வரி அதிகரிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளது. சான்றாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக சோயாபீன் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தாவர எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகளை அதிகரிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இவ்வாறு சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பின் மூலம் ஒன்றிய மோடி அரசானது, ஒருபுறம் மகாராஷ்டிர சோயாபீன் விவசாயிகளின் வாக்குகளைக் கவர விழைகிறது. மறுபுறம், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கை என்று கூறிக்கொண்டு உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கிறது.


படிக்க: அரசு பேருந்தில் ஆர்.எஸ்.எஸ் வாசகம்!


இந்தியா தன்னுடைய சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவிகிதம் வரை இறக்குமதி செய்துவருகிறது. அதிலும் குறிப்பாக 50 சதவிகிதம் பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது பாமாயிலின் விலை குறைவாக இருப்பதாலேயே நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பாமாயிலை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எனவே சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி அதிகரிப்பானது அப்பட்டமான உழைக்கும் மக்களின் மீதான பாசிசத் தாக்குதலாகும்.

ஏற்கெனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. அதிகப்படியான ஜி.எஸ்.டி வரி விதிப்பால் உணவுப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.

இவ்வாறு நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடமிருந்து ஒட்டச்சுரண்டும் வரிப்பணத்தைப் பாசிச மோடி அரசானது, அம்பானி அதானிகளுக்கு வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி என்று தாரை வார்த்தே வருகிறது.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. பண்டிகை நேரங்களில் இது போன்ற இறக்குமதி வரி உயர்வு, சமையல் எண்ணெய் வகைகளை கடும் விலை ஏற்றத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.
    இந்த விலை ஏற்றத்தால், இந்துக்களின் பண்டிகைகளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி ஆகியவை களை இழந்து விடும். அடுத்து, பாமாயிலை தங்களின் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வரும் சாதாரண நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள். சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சிக்கு ஆளாகும். இது விவசாயிகளுக்கும் நன்மை அளிக்காது. பண்டிகை நேரங்களில் கொள்ளை அடிக்கும் மத்திய அரசின் ஈனத்தனமான செயல் இது.

    இந்துக்களின் பாதுகாவலர்கள் (?), பண்டிகைகளின் போது இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வது அநியாயம் இல்லையா? இந்துக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

    – மருது பாண்டியன்
    போடிநாயக்கனூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க